தமிழ் எண்ணிமத்திட்டம்

காதலி ஆற்றுப்படை

காதலி ஆற்றுப்படை

சீர்மிகு முவாநாட் சிறந்தொளி பரப்பும்
ஏர்பெறு தண்மதி எழிலது போலக்
கதிருடை யொண்ணுதற் கவினுறு காரிகாய்
காமன் வில்லைக் காய்ந்த புருவமுன்
கழிமல ராம்பலைப் பழித்தவுண் கண்ணுங்
கார்முகி லென்னக் கறுத்தவீ ரோதியும்
வணங்குமின் சாயல் வளரமை மென்றோட்
சுணங்குசே ரிளமுலைத் துடையிடை மடவாய்
காதற் கயிற்றுற் கயிற்றுற் கவர்ந்நு பற்றியுன்
தீதறு முள்ளந் திண்ணெனப் பிணித்துத்
தன்னுளந் தன்னிற் கொண்டொளித் திட்ட
அன்புடைக் கள்வன் அமர்ந்துபோ யுறையும்
இன்பதி யாங்கென எமைநீ கேட்பின்,
குறிஞ்சிசேர் நிலந்தொறுங் கோதற வளர்ந்தே
எறிகதிர் தாங்கி வளையுநற் றினையுஞ்
செறியுமின் காத்தொறுஞ் சீர்பெற வோங்கும்
நெறிபடு வாழையின் நேர்சுவைப் பழமும்
மத்தளம் போல வளர்ந்தினி துருண்டே
இத்துப் பழுத்தே யின்னற வொழுகும்
பைஞ்சுளை பொதிந்த பலாவின் கனியும்
அந்தி மாலையிற் றண்ணற வுண்டு
புந்தி மயங்கிப் பெடையொடு காதலின்
இன்புசேர் கீதம் இசைக்குமப் போழ்து
கிந்துகாற் காகங் கீழே விழுத்துப்
நற்சுவை யயின்றேர் நீணெடுங் காலம்
பொற்புறு மிளமையொ டிருக்க வியற்றுங்
கற்பகத் தாருவின் கண்கவர் கனியும்
அதாஅன்று,
காலும் வெயிலுங் கூதிரும் மழையுஞ்
சாலவு நோக்கி யுளந்தள ராதே
அந்தி வேளை அசையுங் காற்றாற்
கட்டு மரங்களிற் கடன்மே லேகிக்
கங்குற் காலங் கழிந்த பின்றைக்
கொண்டுதாம் வந்து விலையது கூறும்
பல்வகைப் புலவுமீன் பரவுறு குளியலும்
முல்லையின் புறவ முறைமையி லடைந்தே
மெல்லிள மாதர் வெவ்வேறு கூட்டமாய்
ஒள்ளுறத் தீட்டிய உழவா ரைக்ககை
வள்ளுறத் செருக்குபுல் வளம்பெறத் திணித்துப்
பிற்பகற் சந்தையிற் பீடுற வைத்துப்
பற்பல விலைபகர் பறியி னீட்டமும்
வரைநேர் திரைசெறி வான்கடற் பரப்பின்
மரக்கலக் குழாஅ மாண்பொடு சென்று
கங்கைநீர் பொலியும் வங்கந் தன்னையும்
பாயு மிராவதி பாய்ச்சிடு புலங்கள்
நெல்லொடு செறியும் நிகரில் காழகம்
வந்தேறு காக்கி வளநாட் டோடும்
எந்நாட் டினையு முந்துற வடைந்து
மன்பதை தனக்கு மாறாப் பசிப்பிணி
பண்புறத் தீர்க்கும் பசியநெற் றிரளுங்
கொள்ளுங் கடலையு மெள்ளும் பயறும்
பல்வகைத் தானியம் பாங்கொடு கொணர்ந்து
சுங்கங் கொடுத்துத் துறையிற் பறித்த
விண்ணை யளரவு மூடையின் குவையும்
காந்திக் கதருங் காசு மீரமுந்
தோய்ச்சிடு சாயங் காய்ச்சிடு கலிங்கமும்
மறுநா டெங்கணும் பெறுவதற் கரிதாய்க்
கூறைநா டளித்த கோலப் புடைவையும்
வள்ளுவன் சேலையும் வான்பட் டணமும்
எவ்வகைச் சேலையு மேரொடு விளங்கிக்
கண்ணினை யிழுக்குங் கடைகளின் நிரைகளும்
விட்டுக் கள்ளினை விளைபத மெய்துநெல்
மாவினிற் சுட்ட வண்புளிச் சப்பமும்
பனங்காய்க் களியுடன் சாமைமாமக் குழைத்து
வனைபந் தினைபோல் நெய்யிற் போட்டுத்
தட்டுத் தட்டாய்ச் சுட்டமே லெடுத்துச்
சுளகிற் பரப்பி விலையது கூறுங்
கமழ்தரு செம்பனங் காய்ப்பணி யாரமும்
அருவிலை கொடுத்தே அரங்கு மாந்தும்
மாந்தர் வாய்க்கு வெங்கறிப் பாக
வளமுற வுதவும் வடையின் கடகமும்
முறுக்குநல் வாய்ப்பன் மோதக மிட்டலி
பிட்டுத் தோசை புகழிடி யப்பம்
எள்ளுங் கட்டியு மிடித்துநன் கெடுத்த
நெய்பிழி பாகின் நிகரில் திரணையும்
பாணி பனாட்டும் பகர்பனங் கட்டியும்
ஆற்றாது வெம்பி யழுமகார் தமக்கு
மாற்றா யுதவுஞ் சீனிமிட் டாயும்
ஆகிய,
அரும்பெறற் பண்ணியம் பலவு மீண்டிஷ
வரிசையாய் விற்கும் வளம்பெறு கடைகளும்
அழகுறு வன்னம் அமைவுறப் போட்டுத்
தொழிலமை வனிதையர் திறமையோ டிழைத்த
பெட்டிபாய் குட்டான் பெயர்பெறு கதிர்ப்பாய்
அடுக்குப் பெட்டியும் அருவிலை மூடலும்
பிட்டவி நீத்துப் பெட்டியுஞ் சுண்டும்
பனையின் குருத்தைப் பதனமாய் வார்ந்து
பன்னிறந் தீட்டிய பன்னோலை கொண்டு
கைவல் லிளையர் கருதி யிழைத்த
ஆனைப் பெட்டியு மழகிய தேரும்
கொட்டைப் பெட்டியுங் கிலுக்குப் பெட்டியும்
எனவாங்கு,
இன்னணம் நெருங்கிடு பன்னக் கடைகளும்
பொங்கலுக் கென்றே புதுக்குட மேந்திக்
காயுங் கனியுங் கார்ப்பச் சரிசியும்
சிறார்கழி மகிழுஞ் சீன வெடிகளும்
பெட்டிக் குள்ளே யிட்டுத் தலையின்
வைத்துயர் கையாற் பெட்டியைப் பற்றிக்
கதைபல பேசிக் கான்வழி செல்லும்
வனிதையர் தமது வளம்பெறு கூட்டமும்
வாடைக் காற்றான் வளைந்துமெய் கொடுகி
உறைபோற் போர்வை யுடம்பிற் போர்த்து
வாயிற் சுங்கா னோயாது புகைத்துப்
பசியால் வாடி விதியினை நொந்து
வேலை தேடி வெய்துயிர்ப் புற்றுக்
கொக்குப் போலக் கோடிய முகத்துடன்
துக்க மடைந்து துறைமுகப் பக்கல்
நிற்க லுற்றவர் நெருங்கிருங் கூட்டமும்
தரைமேற் கோடு தகவுடன் கீறித்
தாயக் கட்டை தாவி யெறிந்தும்
சோகி் யெடுத்துச் சோணுலு பாணா
லென்றே யுறுக்கி யெறிந்துதா னுருட்டியும்
பந்தயம் பேசிப் பலபே ரிருந்து
நாயும் புலியு நலிவிலா தாடியுஞ்
சீட்டைக் கையில் நீட்டி விரித்துப்
பல்வகை யாட்டம் ஒல்வகை யாடியுங்
சோதிலா மணன்மேற் குழுமி யிருந்து
மகிழுறு மாந்தர்தம் மாப்பெருங் கூட்டமும்
காடியிற் றோய்த்த காழ்ப்பனங் கொட்டையைத்
தாயர்தங் கையிற் றாவினர் வாங்கி
வண்டியுஞ் சொக்கும் பனங்களி புரள
களியினை மாந்திக் காழ்தனைக் கையில்
ஏந்து மிகுவலி யின்றித் தயங்கும்
புன்றலைச் சிறார்த மின்புறு கூட்டமும்
ஏடது கையி லேந்திய பாரமாய்
ஏனோ தொல்லையீ தெம்மை வருத்தும்
என்றுள நொந்தே யின்னல்தா னெய்தலும்
பற்றிய கோலொடு பள்ளிக் கழைத்தே
எத்தியு முரப்பியு மிழுத்து தாய்மார்
பின்செல் வழுது பெருந்துய ரோடு
முன்செலும் பாலர்தம் மொய்யிருங் கூட்டமும்
அதாஅன்று,
தண்ணளி யில்லாச் சட்டம் பியாரும்
பள்ளியை யடைந்தாற் பலவாய் வருத்துவர்
என்றுபல் சாட்டுகள் நண்பரோ டெண்ணி
ஏட்டைக் கட்டி யிறப்பி லொளித்துப்
புளிய மரத்திற் தூங்கிளங் காய்க்குக்
கல்லுப் பற்றி யிலக்கா யெறிந்தும்
கல்லுப் பற்றி யிலக்கா யெறிந்தும்
நாவன் மரத்து நலம்பெற வேறித்
தாவிக் கொம்பரித் தருபழம் பறித்துங்
கிந்தி யடித்தும் வளைய முருட்டியுந்
தட்டுப் பாய்ந்துங் கிட்டி யடித்தும்
மாவின் கொட்டை மகிழ்வொடு போட்டும்
பல்வகை யாட்டம் பாங்குட னாடும்
பள்ளிப் பொடியன் பண்புறு கூட்டமும்
மெய்யதி லழகுற மேலுடை யணிந்து
கையதி லதற்கிணைக் கருங்குடை பிடித்துத்
தலையது தன்னிற் தலைப்பாத் தாங்கி
ஒருகமுக் கட்டி லுறுதிகள் கொண்டு
முறைசெய் மன்ற முறையுட னேரு
முறைநூ லறிவரை விருப்பொடு சூழ்ந்தே
அரையிற் சால்வை யமைவுறக் கட்டி
வணங்கிச் செல்லும் வழக்கா ளிகளும்
நாட்டுத் தரகருங் கோட்டுப் புலிகளும்
ஆகிய மாந்தர்த மளப்பருங் கூட்டமும்
செக்கர்ச் சடையோன் சிவபிரான் றனக்குச்
சிறப்புறு மூலியைச் சேர்ந்திடக் கசக்கி
நீர்மலி கங்கை நீர்த்துளி விட்டு
நிகரில் சிமிழியி னிறைய வடைத்தே
அக்கினிப் பொறியை அமைவா மூட்டிப்
பக்கென விழுத்துப் பகர்தம் மடித்தே
இடுக்கிய கண்ணரா யிறைவனை வாழ்த்தி
மிக்கமெய்ஞ் ஞானம் மேதகப் பேசி
அரகர சம்போ அனந்தா மகாதேவா
என்றே யாற்றி இன்பொடு மடங்களின்
உலக வல்லலை யொழித்துமெய்ம் மறந்தே
இயற்றுதற் கரிய யோக நிட்டையின்
மயங்கிக் கிடக்கு மாதவர் கூட்டமும்
பற்றிய வாழ்வு பரித்தலின் முன்னே
சிற்றி லிழைத்துச் சிறுசோ றாக்கிப்
பின்னே வருவதை முன்னே யுணர்வபோல்
வண்டலின் மணவினை மகிழ்வோ டாற்றியுஞ்
சிறார்தமை யீன்று சீரொடு வளர்ப்பபோற்
களிமட் பாவை யழகுறச் செய்து
பூவினைச் சூட்டித் துகிலினை யுடுத்திச்
சீரொட்டி யோராட்டுஞ் சிறுமிகள் குழுவும்
தென்னங் குரும்பை தெரிந்துதா னெடுத்தே
அன்னதன் மேலே யளவுடை யீா்க்கை
அமைவுறச் குத்தி யழகுறு சிறுதேர்
பூப்பல சூடிப் புனைந்தினி தியற்றி
நாப்பட் கடவுளை நலமுட னேற்றிக்
காகா டுண்டுண் காகா டுண்டுண்
என்றே யியம்பி ஏருறு தேரினைக்
கட்டிய இழையாற் பற்றி யிழுத்தும்,
பனையி னோலையைப் பாங்கா யெடுத்துச்
சித்திர வடிவச் சில்லிரண் டிழைத்து
முருக்கஞ் செத்தலை யவற்றிடை கோத்துக்
குறுக்கே துலாவெனத் தடியொன் றமைத்துப்
பண்ணிய வண்டி பற்றி யிழுத்தும்,
ஒலைக் கறங்கை யோர்ந்தினி தியற்றிக்
காலுக் கெதிரே கதழுடன் பரிந்து
வழியில் வாயிலில் வருவோர் போவோர்
தமையுங் கணியார் தரியா சொருகணம்
கழிமகிழ் நாயுங் காலடி தொடரக்
குடுமியுங் குலைந்து குலவி யாட
அதிவே கமதாய் ஆத்துப் பறந்து
கதியுட னோடி விளையாட் டயர்ந்தும்,
சிறுதடி யொன்று சேரிரு பக்கமும்
வாழைநா ரெடுத்து வளமுறக் கட்டிக்
கடிவா ளமதாய்க் கருதி யொருவன்
வாயிற் கவ்வ வாரிரு நாரைப்
பின்னின் றொருவன் பேணிப் பிடித்துச்
சவுக்கினை யுயர்த்தித் தாக்கிய கையுடன்
குதிரைச் சவாரி கொள்வபோ லேகிப்
பரிகதி வெள்குறப் பாய்ந்துபாய்ந் தோடி
வீட்டுக் கோடியை நீட்டிய நாக்குடன்
விரைந்து நெடிது வெய்துயிர்ப் புறீஇ
இளைத்துக் கிடக்கு மிளஞ்சிறார் குழுவும்
வடலி மட்டை யிடாஅ ரேற்றிச்
திடமுறப் பலபேர் சேர்ந்துடன கூடி
வேப்பம் பழங்கள் வீழிடம் நண்ணித்
தந்திர மான மந்திரப் பொறிபோல்
அணிபெற வமைத்தே அணிலைப் பிடிக்க
அதிகளைிப் பெய்தி ஆரவா ரிக்குந்
தடிக்கை தாங்கிய பொடிச்சிறார் திரளும்
வெள்ளரி தன்னொடு வத்தகப் பழமுங்
ஒன்று கூடி விளையாட் டாகத்
திருடிக் கனியை மணன்மேற் குவித்துத்
தின்று தின்று களித்து மகிழ்ந்து
தென்னந் தோப்புச் சேர்ந்து சென்று
கத்தி கொண்டு மரமே லேறிப்
பருவத் திளநீர் பார்த்துமெல் லிறங்கிக்
கொண்டு குடித்தே யாரவா ரித்தும்
விருப்புட னிருக்கும் வேளை தன்னிற்
சொந்தக் காரர் விரைந்து தொடர்ந்து
பிடிக்க முயன்று கலைத்திடும் போது
பலதிசை யோடிப் பதுங்கு கும்பலும்
நரைதோ லியனம் அரையிற் கட்டி
அதன்கீழ் முட்டி யசைதர விட்டு
மார்போ டணையத் தோலது தூக்கி
உரனுறு தளைநார் காலிணை மாட்டிக்
கால்மடித் துன்னிக் கருநெடும் பனைமிசைப்
பாளை தட்டிப் பார்த்துச் சீவி
ஏர்தரு மூசலோ டியனத் தசையும்
இன்கள் முட்டியொ டிறங்கும் போதின்
அடிமரத் திருந்து நுனிவரை நோக்கி
நாநீ ரூறி யுதடு வருடிப்
பெருமகிழ் வோடு பிளாவை யேந்தி
அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்
முன்னணி மேளம் முறையே யியம்பப்
பின்னணி தொடாந்து பெருமகிழ் வெய்திப்
பலபுதுப் பட்டுடை பாங்குட னுடுத்துத்
தலைமேற் சூரிய சந்திரப் பட்டமும்
சடைமேல் நாகமு நலமுற வணிந்து
நெற்றியி னிட்ட பொட்டு மின்னப்
பற்றிய வோர்வை முத்தது போல
நுதன்மே லரும்பே நிறைமதி தோற்கச்
செம்பங் சணிந்த சேவடி மீமிசைச்
சேம்பொற் சிலம்புஞ் சீறடிச் சரமும்
நுண்ணிடை பூட்டிய நொய்ம்மே கலையுங்
கதிர்முலை மேவிய கதிர்முத் தாரமும்
அருமணி மாலையும் அசையுறீஇக் கறங்கப்
பெருவிரல் நோக்கிப் பெயர்ந்திடு பெண்டிரும்
வெள்ளைக் கலிங்கமும் விலையுபர் பட்டுங்
கன்மோ திரமுங் கவின்முத் தாரமும்
அணிபன் மாந்த ரசைதரும் பக்கல்
பச்சை யெடுத்துப் படர்வோர் சூழ்தர
இச்சை யுடனே யிவர்மணக் கூட்டமும்
வான்வரை வளர்ந்த வரையுறழ் கோபுரம்
நீண்முடி நெடுந்தோ் நேர்பொடி விளங்கும்
கணங்களுக் கிறைவன் கணபதி கோயிலும்
ஆன்ம கோடிகட் கருடரு முருவாய்ப்
பாசமே தறுக்கம் பசுபதி கோயிலும்
பன்முறை வலமாய்ப் பரிவொடு சூழ்ந்து
மறைபல வோதி யிறைவனை யேத்தி
மெய்ம்மேற் றுளங்கும் வெண்ணீற் றுடனே
முக்கட் செல்வன் நுதன்மே லொளிரும்
தக்கமெய்ஞ் ஞானத் தகவறு விழிமருள்
நெற்றியிற் சாந்தப் பொட்டினை யணிந்து
வில்வ மேற்றி விளங்கு காதினர்
தளர்ந்த நடையொடு தாவுறு குழவிகள்
பற்றுக் கோடாய்ப் பற்றிய விரலினர்
சிவமணங் கமழுஞ் சீருடைச் செல்வர்
ஈச னுமையோ டிவர்தரு பவனிபோன்
மாசில் மங்கையர் மருவிச் செல்லப்
பற்பல திசைதொறும் படர்தருகூட்டமும்
நெற்றியின் நாம நேரா யிழுத்துச்
செவிமேற் றுளசி சிறப்புற வைத்துச்
செறிமணற் கும்பிகள் நிலவினின் விளங்கும்
வல்லி புரத்து வளர்துயி லயரும்
பார்த்த சாரதி பதும நாபன்
கார்நிறக் கடவுள் கமலக் கண்ணன்
ஆய்ச்சியர் காதலன் மாயக் கிட்டிணன்
ஆயநான் மறைகளும் அளப்பருங் கடவுளை
நேயமொடு வணங்கி நீங்குவார் கூட்டமும்
சாதிப் பிரிவு சாதியா தெவரும்
சரிவரக் குழுமிச் சரவண பவனைக்
குறத்தி காந்தனைக் குழந்தை வேலனை
மெய்யன் புடனே நைபுறு மாந்தர்
வழுத்தி வரம்வேண்டும் வான்பதி யாரருள்
பழுத்த செல்வச் சந்நிதி தனக்குங்
கந்தன் மகிழ்ந்து கருத்துட னுறையுங்
கந்த வனமெனுங் கவின்பெறு பதிக்கும்
நேர்த்திக் கடன்கள் நிறைவுறும் பொருட்டு
வளைவுறச் செய்து கலிங்கம் வேய்ந்து
நாற்பா லிறகு நலமுறக் கட்டிக்
கைபுனைந் தியற்றிடுங் காலடி யெடுத்துத்
தோண்மே லேற்றித் தோமற வைத்து
நிகரில் கீதம் நேர்பட வியல
அதற்கிணை மத்தளம் அதிர்ந்த முழங்க
அளவி லனுபவத் தண்ணாயி தாளம்
அமைவுறப் போடும் அவதிக் கிணையாய்க்
காலினை யசைத்தக் காவடி சுழற்றி
மயில்போ லசைவுற் றியல்பா னாடும்
ஆட்டக் காவடி யெடுப்போ ரொருபுறம்
முள்ளு மிதியடி கொள்ளு மடியிணை
உறுத்த வணிந்தே யொண்பூக் காவடி
ஒருதோ ளேற்றி யொருகை பற்றி
இழுக்கி லுள்ளம் இறைபா லமைத்துப்
பக்தி யுடனே படருவோ ரொருபுறம்
பானிறை பொற்குடந் தலைமேற் றாங்கி
விளங்கு முகத்தினர்
மயங்கு மனத்தினர்
அநைதரு கையினர்
விரைவுறு காலினர்
முருகன் பதியினை முன்னிச் செல்லும்
விரதியர் தமது கூட்ட மொருபுறம்
எனவாங்கு,
செல்லுதல் நோக்கும் பர்ரோ ரீட்டமும்
வெயிலான வாடி வெந்துய ரடைந்து
போலதன் பேரினன் பேரொல் லாந்தன்
கதிவே றில்லான் பொதியுட னிறங்கி
துயில்மிக வயர்ந்து துன்பந் தீா்ந்த
புளிய மரத்தின் ர்டைதனைச் சூழ்ந்த
இருக்கை தன்னை விருப்புட னடைந்தே
இன்புறத் துயிலுறீஇ எழுவோர் னனடைந்தே
சூத்துப் பார்க்கக் கூர்நிலா வேளையிற்
சேர்த்துப் பலரைச் சிலரைச் சிந்துகள் பாடிக்
கையிற் தாளங் கணக்குறத் தட்டி
ஆர்ப்பொடு தெருவில் ஆடவர் பெண்டிர்
நெல்லண்டை நோக்கி நல்ல சோடினை
செற்றும் பெரிய தம்பியின் புதல்வன்
நாடகத் தமிழை நன்கன முணர்ந்தோன்
ஆடலும் பாடலும் அமைவகு மாசான்
அண்ணாவி தம்பையன் அருமையாய்ப் பழக்கிய
விலாசம் பார்க்க வெற்றியில் யருத்தி
விரைந்து விரைந்து நடப்போர் குழாமும்,
அதாஅன்று,
காற்றா லசையுறீஇக் கதிருடைத் தினையும்
ஏர்புறு பைங்கூழ் இளங்கதிர்த் திரளும்
ஒன்றே டொன்றங் குரோஞ்சு மோதையும்
பெயர்ந்த சோழகம் பெருவிறற் போந்தையின்
காய்ந்த வோலையைக் கனத்து மோதலாற்
கலகல வென்று கலிக்கு மோதையும்
நல்லோ ரிண்டி நலம்பெற வுறைதலின்
வான் பொய்யாது வளம்பல பெருக
வான வில்லு விண்ணிற் தோன்ற
நீண்முகில் முழங்கு நிகரி லோதையும்
வான்கதிர் மேலை வரைதனிற் புகுதரக்
கீழ்நிலைக் கடலி னெழுமதிக் கொழுனனைச்
சுற்றிப் புணரிப் பல்லேர் வனிதையர்
பிசிரின் கரத்தைப் பரிவைாடு நீட்டிப்
பிடிக்க முயன்றும் பெயர்ந்துமேற் செல்ல
அளவில் லழிதுயர் அடைநெஞ் சினராய்ப்
பாலினும் வெளிய துகிலது போலப்
பரந்து விளங்கும் பெருமணன் மீதின்
வீழ்வெண் பட்டு விலகி யசைதரத்
துனியொடு கரையிற் தேம்பித் தேம்பி
அலமரப் புரண்டே அழுதிடு மோதையும்
கந்தனை வெட்டி யாலடி யென்னும்
உள்ள முருத்துஞ் சுடுகா டதன்மிசைச்
சவுக்க மரங்கள் சடநிலை யில்லைச்
சிதைந்திடும் வாணாள் சிந்தை மகிழேல்
என்றென் றாற்றிடு மோசைபோற் கவல
எரிந்திடு பிணத்தின் கரும்புகை முகந்து
களிந்திடு பேயின் பெருந்திடு மோதையும்
பிரம ராட்சதனும் பேரெறி மாடனும்
கொள்ளி வாலுங் கொத்தி யயாத்தையும்
இரத்தக் காடேறி இருந்தலைப் பிடாரி
இடர்செய் கூளியும் எச்சிப் பிசாசும்
எவ்வகைப் பேயும் எவ்வ முறுத்தாது
நித்தலுஞ் சங்கம் நேர்பெற முழக்கிச்
சேமக் கலங்கள் சீரொடு தட்டி
எமநல் விசையுடன் இருந்திரு வாசகம்
நெஞ்சினை யிழுக்கு மஞ்சொல் லாரம்
மறுகிற் பாடி மாந்தரை யெழுப்பும்
மாசில் பண்ணொலி யாசிலா வோதையும்
விண்ணொளிர் மதியம் ஒண்ணிலா விரிப்பச்
சித்திர வேலை பொற்றொடு செய்து
நீரிடைப் போகா வள்ள மீதிற்
காதற் பெண்ணாடு களிப்புற னேறித்
தண்டினைப் பற்றித் தகவொடு நீரை
ஏலை யேலோ வெனப்பண் ணிசைத்துக்
காளையர் வலித்துக் கலித்திடு மோதையும்
பந்தலிற் காயும் பனாட்டுப் பாயின்
வந்து காகம் வாய்ப்புற விருந்து
கொந்தும் போழ்து கடகப் பெட்டியிற்
கண்கவர் கன்னியர் கழியா னடித்துக்
காய்கா யென்று கலைந்திடு மோதையும்
கொழுநன் மிதித்ததுலா
கோரத யிறைத்தபட்டை
மடையினின் மடுத்ததண்ணீர்
மண்ணதை வெட்டுகொட்டுக்
காலை வேளையிற் கனலிமே லெழுமுன்
படப்பைதன் பக்கம் பரவு மோதையும்
காய்ந்த வைக்கோலுங் கனமணி நெல்லும்
ஆய்ந்து பாரம் ஆர வேற்றி
வைகுறு வேளை வலியநல் லெருது
பையென விழுத்துப் படரும் போதின்
அச்சுத் தேய்ந்த அருவிறற் சில்லுடை
வண்டி வரிசை வைத்திடு மோதையும்
பனையின் நறவைப் பச்சிளங் குழவிகள்
வனைதரு சங்கின் வார்த்துத் தாயார்
பருக்கித் தடுக்கிற் பாங்கொடு வளர்த்தலும்
களிமிக வெய்திக் கால்கை யடித்துத்
தஞ்சிறு கையாற் றடுக்கை யீர்த்துக்
காற்பெரு விரலைக் கையிற் பற்றி
வாயினுள் வைத்து வளர்பல் குதலை
இன்புறப் பேசி யிசையொலி பெருக்கி
அன்னையர்க் குவகை யளிக்க மோதையும்
மூங்கி லெடுத்து முறையொடு கட்டிக்
கடதாசி யொட்டிக் குஞ்சம் புனைந்த
கொக்குக் கொடியுங் கோதறு பருந்தும்
வளம்பெறு வாலா வசையில் சந்திரன்
எட்டு மூலையுங் கட்டுக் கொடியும்
விண்ணை யளாவி வெகுவாய்ச் சாடிக்
காரணம் பலமுறை எழுந்தெழுந் தடித்துப்
பூட்டிய விண்கள் பொலிவொடு கூவக்
காற்றொடு சேண்புகு மாண்புடை யோதையும்
புலவோ ரவைக்களம் புகழுட னடைந்து
தண்டமிழ் பாடித் தன்பெயர் நிறீஇய
சீர்சொல் புலவன் சிவசம்பு வென்போன்
தன்பா லடைந்தே யின்றமிழ் கற்றோன்
ஆரியந் தன்னி னளப்பரு மாக்கடல்
அருந்தமிழ்க் கலைக்கோர் வரம்பா யுயர்ந்தோன்
வயங்கு செந்நாவின் வசையில் புலவோன்
ஆகம பண்டிதன் அருமறைக் குருமணி
முத்துக் குமார சுவாமி யெனும்பேர்
மூதறி வாளன் முறையுட னடையும்
மாணவர் தமக்கு வளம்பெறு முகில்போற்
போதமெய்க் கலைகள் பொழிந்திடும் வள்ளல்
மாசி லந்தணன் மாப்பெருந் தோன்றல்
சிவனடி பரசுந் தவநெறி யாளன்
கடைய னேனையும் பொருளெனக் கருதி
யறிவு கொளுத்தி றாட்கொளும் பெரியோன்
ஒங்கிய பாடம் உவந்தனன் சொல்ல
நீங்குத லறியா நிறைவுறு மனத்துடன்
செந்தமிழ் கேட்டுச் சீருற வோதியும்
ஆரியந் தன்னை அமைவுறக் கற்றுஞ்
சாரதா பீட வித்தியா சாலையின்
விளங்குறு மாணவர் விளம்பிடு மோதையும்
இலக்கணந் தன்னை விளங்கக் கற்றே
இலக்கண நெறியால் இயைபுடன் பேசி
வந்தடை மாணவர்க் கந்தமில் தமிழை
இலக்கண முறையுட னியம்பிடு முதியோன்
கோதி லிலக்கணக் கோவிந்த னென்னுங்
குமார சுவாமிப் புலவன் தன்னிடம்
இலக்கங் கற்கு மிளஞ்சிறு ரோதையும்
கருமுகில் படர்ந்த காரிரும் பருவம்
துன்னு மாமழை சோனையாய்ப் பெய்ய
நீளிருங் குளங்கள் நீரொடு நிறைந்து
கரையைப் பொருது நிறையுது வெள்ளம்
துடுமெனப் பாய்ந்து சுழிகீ ழேதடியும்
முந்தையர் விடுத்த முற்றூட் டெனவே
வீடு தோறுஞ் சோடா யடைந்து
புலர்ந்தது பொழுது பள்ளிவிட் டெழுமின்
என்றே சொல்லி யியம்பிடு மொழிபோற்
காகா வென்று கரைந்து கரைந்து
வெள்ளாப் போடு வீட்டு வேலியிற்
சீருட னிருந்து சிறகரைக் கோதி
மிச்சமா யெறியு மெச்சிலைப் புசித்தும்
வீட்டுட் புகுந்து விரைவொடு திருடியும்
அப்ப மேந்திய அருமகார் தம்மை
எத்தி யணாப்பித் தட்டிப் பறித்தும்
விரதநாள் தன்னின் வைத்திடுஞ் சோற்றை
வாவெனக் கத்தி வான்கிளை யழைத்துக்
கரவா துண்டும் வருவது போவது
முதலிய குறிகள் முன்னித் தெரித்தும்
இன்னணம் மாந்தரோ டுற்ற நண்பனாய்
வீட்டினி லுண்டு வீட்டினின் வளர்ந்த
கருநிறக் காக்கை பொருந்திருங் கூட்டமாய்ச்
செக்கர் வானஞ் சேர்ந்து விளங்க
வாணாட் கழிவு மன்பதை யுணர்ந்து
கழிதுய ருணர்வு மனதினி னிகழ
அந்தி மாலை வந்துதா னணுகச்
சேக்கை நாடிச் செல்லுபு செல்லுபு
பல்வகை யொலியொடு படரு மோதையும்
நன்னாட் பார்த்துப் பொன்னை யுருக்கி
மணவினைக் கென்றே வரைந்திடு தாலியும்
அட்டியல் பதக்கம் பிலாக்கு மூக்குத்தி
பூரா னட்டியல் கீச்சிகல் லட்டியல்
கடுகமணி கொலிசு கவுத்தோது காதுப்பூ
வாளி சிமிக்கி வளையல் தோடு
பட்டணங் காப்புப் பீலிக் காப்புப்
பாத சரமொடு சங்கிலி சிலம்பு
தூங்கு கடுக்கண் நட்டுவக் காலி
அரும்பு மணிமுரு கொன்னைப் பூவும்
ஒட்டி யாண மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறே டரைமுடி சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது
புகழுது கைபுனை பொற்றொழி லாளர்
பட்டடை மீது சுத்திய லோங்கித்
தட்டி யடிக்குந் தகவுறு மோதையும்
பேய்க்கோட் பட்டுப் பெருந்துய ரெய்திடு
மாந்தர் தமக்கு மாற்றாது வாக
மடைபல பரப்பி உடுக்கினை யடித்து
மேலான வாசான் வாலாய மிட்ட
வன்றே வதையை வளமுற வழைத்துக்
காய்பல வெட்டிக் கழிப்புக் கழித்துப்
பேயதைப் போக்கும் பேயுரு மோதையும்
மொய்யிருங் கூந்தல் நொய்யிடைக் கோதையர்
கொங்கை குலுங்கக் குழைநின் றசையச்
சிலம்பு வளையும் புலம்பெற வார்ப்பக்
கரும்பூ ணுலக்கை கைதனிற் பற்றி
நெல்லு தினையு நீள்முறி யொடியலும்
அவலுந் தூளு மசைந்தசைந் திடித்துக்
கொள்ளை கொள்ளும் வள்ளைப் பாட்டை
இன்னிசை தன்னோ டியம்பிடு மோதையும்
மரக்கலந் தனக்கு மன்னுந் துணையாய்
விண்ணை யளாவி வெளிச்சங் காட்டிடுங்
கலங்கரை விளங்க மிலங்கி நிற்குங்
கோரி மருங்கு குவவு மணன்மேற்
பலதே யத்துப் பாவைய ரீண்டிப்
புதுநா கரிகப் போக்கி லுடுத்து
விளங்கா மொழிபல விழைந்து பறைந்து
சோகி பொறுக்கித் தொகத்துநன் காடி
ஆரவா ரிக்கு மஞ்சா வோதையும்
வைகைறை யாமம் வளம்பெறு பண்களைக்
கைவல் பாணர் கற்றுக் கொடுக்க
இசையொடு கீத மியல்பு சிறார்கள்
நசையொடு யாழின் நல்கிடு மோதையும்
வேய்ங்குழல் தன்னின் வளம்புமின் கானம்
முழவினி லெழுதரு மொய்யமை யோதை
நளினமோ டாலு நாடக மகளிர்
ஒண்ஓதற் கன்னியர்க் கொப்பிலா நடனம்
பழக்குபு பாடும் பண்ணமை கீதம்
முழங்கு தண்ணுமை தழங்கு தாளம்
இன்னிசை யொலிகள் பண்ணிடு மோதையும்
நிறையுறீஇ,
ஈழ மண்டலத் திலங்குறு தலையாய்ப்
பல்வள மல்கிய பருத்தித் துறையெனும்
பதியெழு வறியாப் பழம்பதி தன்னை
உயர்தன் னில்லாய் உறைதலு முரியன்
ஆங்க ணன்னவற் காணநீ விழையின்
ஈங்கு நின்று நேரே சென்மதி
வரையென வுயர்மணி மாடத் தெரிரே
புரைதீ ரடியவர் போற்றி வலம்வரும்
நல்லூர்க் கந்தன் நலந்தர வுறையும்
எல்லார் திருத்தளி ஏரொடு விளங்கும்
இட்ட சித்திகள் எய்துறும் வண்ணம்
உற்றவன் திருவடி ஒர்ந்துநீ வணங்கி
வழிதனை யடைந்து வடபா னோக்கிக்
களிதரு மனத்தொடு காரிகாய் வழிக்கொள்
கோதிலா மாந்தர் குடியிருப் புப்பல
தீதிலா நெறியிற் சீர்பெற வீண்டிக்
கண்ணை யிழுக்கும் காட்சி பலவொடு
நின்ற னுள்ள முன்னிக் கவர்ந்திடும்
கோவையென் பெயர்புனை மாசிலா வூரின்
யாவையுந் திறமென வாங்குளார் நவில்லர்,
வழிவழி தோறு மாம்பொழில் பூத்துக்
களிதரு தென்றற் காற்றொடு கமழ
நெறிதொறுஞ் செறிந்த நீணிழற் கீழே
கதிரவன் வெயிலாற் களைமிக வடைந்து
நலிதரு முடலச் சலிப்பினை யாற்றத்
துயிலினி தயர்ந்து மாந்தர் தூங்குவர்
நீர்வேலி யென்பேர் நீள்பதி வழியிற்
சேரிரு புறமுந் தண்ணென் றிருக்கும்,
வாழைக் குழாங்கள் வளர்ந்தினி தோங்கி
மாழைமென் னோக்கி வானை யளரவிடும்,
கோழிச் சேவல் பெடையொடு கூடி
வாழைப் பாத்தி கிளறிடும் போது
காதலர்ப் பிரிந்து நலிவுறு மாதர்
துனிமிக வெய்தித் துரத்துபு வாழைநற்
றடலா னெறிந்து தட்டிக் கலைக்க
நீடிய கமுகிற் சோடாய்ப் பறந்து
கூடிப் பாளையின் நாடி யிருந்தலும்
வீழ்ந்திடு பாக்குச் சாய்ந்திடு கதலிக்
குலைமே லெற்றப் பொலுபொலு வென்று
வழியதின் வீழும் பழமது பொறுக்கிப்
போவோர் வருவோர் பசிதனைத் தணிப்பர்
கடிது புத்தூர் கழிகுவை யாயின்
நொடியி லாவாங் கால்தனை நாடுவை,
அயற்பல் லூரின் அகழ்ந்துமே லெடுத்து
வண்டி யேற்றிக் கொண்டு வந்த
வள்ளிக் கிழங்கும் வளமுறு சவாரிக்
கட்டையு மலிந்து கடைகளிற் கிடக்கும்
அச்சு வேலியென் னழகுறு பதியின்
வைச்சிடு தென்னங் கன்றுமே லோங்கி
இந்திர நாட்டே றேணி போலச்
சுந்தர வானைத் தொட்டுமெல் லசையும்,
வீட்டு வாயிலின் நீட்டிய காலுடன்
வளர்துயி லபின்று வழிமேற் செல்லும்
மாந்தர் காலடிப் போந்த மணத்தான்
நரகு காக்கு முருகெழு நாய்போல்
விரைவுட னெழுத்து துரிதமாய்ப் பாய்ந்து
குதிரைபோ னின்று குரைத்திடு நாய்கள்
உன்றனை நோக்கி யுறுமி யெதிர்த்திடின்
சிந்தனை கலங்கிச் சேர்பய மெய்திடேல்,
வயிரவன் றன்னை மனதினி னினைந்தவன்
செயிர்தீர் மந்திரந் தெரிவுறக் கிளப்பின்
காலுக் கிடையின் வாலைக் குழைத்துக்
களிமிக வடைந்துன் காலடி முகர்ந்து
முறையா யடங்கி முகத்தினை நோக்கும்
உச்சிமேற் கட்டிய உயர்முடிச் சடையினர்
நச்சிடு காவி தோய்ச்சிடு முடையினர்
பொலிவெண் ணீறு பூசிடு முடலினர்
அக்கினை யணிந்த அழகுறு கழுத்தினர்
தோளிற் றொங்குக் தூவென் சங்கினர்
சிவநாம மோதுஞ் சீர்பெறு நாவினர்
பூண்ட துறவுப் பொற்புறு குழாததர்
வழியெதிர் நின்னை வந்து பொருந்திடின்
காதலன் பதியின் நெறியதை வினாவுதி
வல்லையென் பாலை வனத்தி னூடே
ஒல்லிள மாதராய் ஒர்ந்துநீ செல்வையேல்
கருதிய வாறே காதலன் பதியைப்
பெருதிய வாறே காதலன் பதியைப்
பெருகிய வின்பொடு பேதுறா தடைவை
இன்ன லேது நின்னை யணுகின்
மன்னன் பெயரை மறந்திடா தோது
பரிதி கண்ட பனிபோ லாங்கவை
எதிரி னின்று விலகிப் போகும்
என்றுனை வாழ்த்தழ யேகிமுன் போலச்
சென்று வழியிற் சேண்புகுந் திடுவர்,
அவர்தாம்,
சாத்திரஞ் சொல்லு மொப்பில் சான்றோர்
தக்கிணை யொருபணம் வைத்துநீ கேட்கின்
வெள்ளைத் தாடி யள்ளித் தடவிப்
பின்னிகழ் பொருளை முன்னி யுணர்ந்து
பிறந்தநாட் டொடங்கி யிறக்குநாள் வரையு
நடக்குஞ் செய்தி தொடக்கிலா தெவையும்
இன்னிசை மொழியாற் பின்னிடா மொழியும்
மிக்க ஞானம் வெளித்த செல்வர்
அதாஅன்று,
ஆற்றினை அடையுறீஇ ஆடவர் பெண்டிர்
காப்புக் குத்திக் கருவண் டிறலைப்
பற்றிப் பறியின் வைத்து விற்கும்
இடத்துக் கருகே யிருக்குமொ ராயம்
தன்னை யடையிற் பன்னிடு நெறியின்
பாதிப் பாகம் படர்ந்து கழிந்திடும்
விரிகதிர்க் கனலி எறிகதிர் செறிந்து
மழைபெயல் மாறி வன்துயர் பெருகிப்
புல்லு மரமும் பொரிந்து கரிந்து
வற்றல் மறியும் வலியழி மாடும்
நண்பக லுருத்த நாநீர் வரண்டு
பேய்த்தேர் நீரெனப் பின்றெடர்ந் தோற்ந்து
தயங்கிக் கிடந்து மயங்கிமெய் சோர
வன்கட் பருந்தும் புன்றலை யெழாலும்
கள்ளிப் புதரின் முண்ணுணி யிருந்து
வயங்கிரை தேடி உயங்கிடு வன்சுரம்,
மணிக்கன் தோட்ட மருவி வாழும்
அம்மையன் கந்தன் ஆட்குத்தி நாகன்
என்போர்த் தலைஇய வன்றொழிந் கள்வர்
இருநெடும் பாறை மறைவி னிருந்து
வழியிற் போகும் மாந்தரை மறித்துக்
குத்தியு மடித்துங் கொல்லுங் கொடுந்தொழில்
செய்தூன் வளர்க்குஞ் செயிர்வினை யாளர்
நெடுங்கிடு கொடிய னேயமில் கிடப்பு
சுற்றிய பந்தஞ் கழற்றிடு மொளிபோல்
நள்ளிரா வேளை நீள்வெளி தோறுங்
கொள்ளிவாற் பேய்கள் குழுமி நெருப்புப்
பற்றிய வாலொடு பாய்ந்து விரவி
ஆர்ப்பொடு களித்தே அலமரு கூத்து
நெஞ்சு துளக்கும் வெந்துய ரிருக்கை
கிளைபல நெருங்கி யிருள்பட வடர்ந்து
மலைபோ லுயர்ந்து விண்ணை யளாவித்
தனிவழிச் செல்வோர் மனது கலக்கும்
புறாப் பொறுக்கி யாலென் பெருமரந்
தன்னைத் தன்வாழ் பதியெனக் கொண்ட
வல்லை முனியும் வாரிரு சங்கிலி
சலசல வென்னப் பலபல வொலியொடு
தன்பரி வாரஞ் சார்ந்து சூழப்
பாதி யாம வேளை தன்னிற்
கூகூ வென்று குமுறிக் குமுறிக்
பற்பல வுருவோ டெழுந்து திரிந்தும்
இராவழி போந்திடு மாந்தரை யடித்துந்
தொல்லை செய்யும் பொல்லாத் தனியிடம்,
வல்லை யென்பேர் வன்பா லைநிலந்
தன்னைத் தனியே தாண்ட லரிதால்,
குவிந்து காய்கறி மலிந்து விற்குஞ்
சுன்னா கத்துச் சேர்முறைச் சந்தையிற்
பண்டம் பலப்பல வாங்கி வண்டியிற்
கங்குற் காலம் வந்து தோன்ற
ஏற்றி வரிசையா யிவரும் வேளை
வண்டிக் குள்ளே மகிழ்வுற விருந்து
முழங்கால் நீட்டி யேர்மூ தாட்டியர்
கணக்குப் பார்த்துக் கதைபல பேசி
வெற்றிலை யிடித்து விரும்பி யருந்திக்
கூடா ரத்திற் கட்டிடு கயிற்றைப்
பேணிக் கையாற் பிடித்தத் தூங்கப்
பின்னே நடக்கு மிளமுலை மடவார்
பெருந்திடு மேற்றம் வருத்திடும் போதங்
கிழுத்திடு மெருதுங் கின்றுனை யாக
வண்டிப் பின்னே நின்று தள்ளியும்
இன்ன லிலாது முன்னிப் போகும்
பின்ன மில்லாப் பொழுதவை யோட்டுங்
காளையர் தம்மொடு காதற் கதைகள்
சிரித்துப் பேசியுஞ் செல்வோர் தம்மொடு
கூடிச் சென்று கோதைாய் கடந்திடு
மாபலா தென்னை மருவுபூஞ் சோலை
பாங்காய் நிறைந்த பல்லூர் வழிக்கண்
உள்ளங் கவரும் வனப்பொடு திகழ்ந்து
மக்கள் நிறைந்து வளம்பல பெருகி
மாவும் புள்ளும் மாண்பொடு களித்துச்
சீர்பெறு முறையுளாய்ச் செறிந்து விளங்கும்
மரகதப் படலம் போல நெருங்கிப்
புகையிலைத் தோட்டந் தகவோ டிலங்கும்
மந்திகை யென்பேர் மாபதி யடையக்
கத்தரி டயர்ந்து காய்ந்திடு வளமுடைத்
தோட்டத் துள்ளே திடமுற நின்று
பூட்டிய வில்லுப் பிடித்த கையினர்
வெள்ளைச் சட்டை மேலே யணிந்து
தலைபிற் றொப்பி பொலியப் போட்டுத்
துள்ளு மீசை தோன்று முகத்தின்
நெரித்த புருவத் துருத்த கோபக்
கனலெழு கண்ணிற் குறித்த பார்வையர்
மாக்கனை வெருட்டு மரவுடை வீரர்
தம்மைக் கண்டு தடுதடுப் புற்று
நெஞ்சு நடுங்கி நீபய மெய்தேல்,
அவரோ,
கத்தரித் தோட்டங் காத்திடு முறையினர்
வெருளி யென்னும் பெருமை யாளர்,
அன்னவர் விட்டு நன்னுதால் நின்வழி
பின்னடை யாது பெயர்ந்து போகதில்
பெற்றிடு வழியைப் பற்றியே செல்லின்
சற்றுத் தூரஞ் சார்வதன் முன்னே
மருவு வலத்திற் தெருவொன்று தோன்றும்
ஆங்கவ் வழியே தொடர்ந்து படரின்
வல்லி புரத்தே எல்லதி னடக்குஞ்
சப்பற விழாவைத் தப்பற வடையத்
தெளிந்த கள்ளை வலிந்த பருக்கி
வெறிமிக் கேறிய காளை யெருத்தைச்
சோடி சேர்த்துச் சோடினை செய்து
பூட்டி வண்டியின் நீட்டிக் கால்களை
ஆசன மீதின் அமர்ந்தினி திருந்து
நாணயக் கயிற்றைப் பேணி யொருவன்
பற்றவோர் கையான் மற்றக் கையதிற்
சவுக்கினை யுயர்த்திச் சடசட வென்ன
அடித்து வாலைக் கடித்துத் துரத்த
வண்டிக் குள்ளே வளமா யிருந்தோர்
சீழ்க்கை யடித்துச் சேர்ந்துட னுரப்ப
நுகத்துக் கடைஇய கிட்டி பிடித்துத்
திண்டிற லொருவன் வண்டிதன் முன்னே
உடம்பு வேர்வை வடிந்து சிந்தக்
களைத்துக் களைத்துக் கடிதினி னோடி
விரைந்துமுன் னோடும் வேறொரு வண்டியை
முந்தி விலத்த முயன்று முயன்று
சவாரி வரிசை சரிந்து சரிந்து
வழியிற் செல்வோர் தம்மை
ஏறியு நெரிந்து மின்னல் செய்திடு்ம்
அதனான்
அவ்வழி தன்னை அரிவைநீ நினையேல்
காடு தோறுந் தேடுபு சென்று
காஅயந்த விறகு தேஎர்த் தெடுத்து
வெட்டிய கட்டுத் தலைமே லேற்றி
நீண்ட வழியைத் தாண்டிப் காலான்
வருபெருங் கூட்ட நகையிளம் பெண்டிர்
கந்தை யுடையினர்
குறுக்குக் கட்டினர்
சிந்திடு வேர்வையர்
அசைந்த நடையினர்
வறுமையிற் செம்மை அமைந்த வாழ்வினர்
வானம் பாடிப் புள்ளது போல
வழிநடைத் துயரும் வறுமைத் துன்பும்
தூக்கிய சுமையாற் தாக்கிய களையும்
இன்னிசை தன்னா னீக்கு மியல்பினர்
ஒன்று சேர்ந்து சிந்துகள் பாடிச்
சந்தை நோக்கிச் சென்றிடு காலை
ஆங்கவர் தம்மைப் பின்னே தொடர்ந்து
பெருமகிழ் வோடு பேதாய் சென்மோ
அறவோர் மடமு மாதுலர்ப் பள்ளியும்
அன்ன சாலைபு மந்தணர் வீடு்ம்
துறவோ ரிருப்புந் தேவர் கோட்டமும்
மருந்துவ ரிருக்கையும் வணிக ரிருக்கையும்
நாடக மகளிர் நீடுய ரில்லமும்
கைபுனை சிற்பன் கருதிச் சமைத்த
வனப்புறு பாவை மல்கி விளங்குந்
தோரண வாயிலொடு தோன்றக் காண்பை
அறவழி நின்று பொருள்மிகப் பெருக்கி
இம்மையி னின்பமு மறுமையின் வீடும்
பெறும்பே றாளர் பேர்பெறு மாந்தர்
அறமிக வளர்க்கு மாறு பார்த்துப்
பெருங்கொடை கொடுக்கும் பெற்றி யாளர்
புலவோர் புரவலர் இரவோர் புகலிடம்
தமக்கென வையாது பிறர்க்குக் கொடுக்கும்
குபேரன் போலு மாபெருஞ் செல்வர்
விரும்பி யுறையு முயர்மணி மாடந்
தெருவு தோறும் வகைவகை விளங்கும்
தண்ணீர்ப் பந்தருந் தருமக் கிணறும்
ஆதிண்டு குற்றியு மரும்பூஞ் சோலையும்
ஆங்கு மன்னி அழகொடு நெருங்கும்
வழிநடை போகு மக்களு மாக்களும்
வெயிலான் வாடித் துயரடை யாது
முகடு பாய்ச்சி மூடி யுயர்த்தித்
திண்ணை வகுத்துக் கட்டிய நேர்தெரு
மூடி மடங்கள் வரிசையாய்த் திகழும்
அத்திருப் பதியை யடைந்தபி னவனை
வினாயின் பலப்பலர் மிகுபொருள் பெறீஇ
அன்னோற் பழிச்சி அகழ்வோர் நிற்கண்
டவனில் கூறுவ ராங்கணீ செல்லின்
யவனத் தச்சன் யாஅத் தமைத்த
யாளிக ளிருபுற நீணிலை யேந்த ஸ
அழகுறப் புனைந்த தோரணத் தூடே
உள்ளக் களிப்பொடு மெல்லநீ நடப்பின்
நிறைகுட மேந்திய நிரையிள மகளிர்
புனிற்றா வொன்று நண்ணித் தொடர
அசைந்த நடையொடு பெயர்ந்து போகுவர்
கழனிக் குருவி கலகல வென்று
சேமநல் லுரைபோற் சேர்ந்து கூவிடும்
நிறம்பல தீட்டிய பசும்பொற் சேலை
விரும்பி யணிந்த மடவார் குழாத்தின்
ஒண்பூஞ் சோலையி னுலவிடு தென்றல்
உந்தி யசைக்குந் தூக்கு தாவணி
விரிந்து சுழலு மழகு போன்று
வண்ணாத்தி யென்னும் வனப்புறு பூச்சி
மேல்பா வாடை விரிந்தது போலப்
படலமாய் நின்றன் றலைக்கு மேலே
சிறகினை யடித்துச் சேர்ந்து நெருங்கிப்
பறந்து பறந்து சுழன்று திரியும்,
காலடித் கீழே கனமா மணிகள்
கும்பல் கும்பலாய்ப் பரந்து கிடக்கும்,
அலர்ந்த முகந்துட னரிவையர் வந்து
நின்றனை வாழ்த்தி முன்றிலை முன்னி
நாடும் போது நந்தன வனத்து
நாறிணர்க் கொம்பர் நலமுற வசைந்து
மலர்க்கை நீட்டி வாவென வழைக்கும்,
தவளை மத்தளந் தாவி யடிக்கச்
சில்வண்டு தாளம் சீரொடு பிடிக்க
மாமரத் திருந்து மாங்குயிற் கூட்டம்
இன்னிசைக் கீதம் இயைபுட னியம்பப்
பன்னிற மாமயில் விண்ணினை நோக்கிக்
கூரைமே னின்று சிறைவிரித் தாடும்,
ஆற்றினி லெழுதருங் காற்றினைி தசைந்து
சுற்றுபூஞ் சோலைக் கொத்தினைக் கொஞ்சிக்
களியொ டுலாவிக் யளியொடு கூடி
இன்புற வீசுங் தண்பனங் காவின்
நடுவி லமைத்துநல் லிலையான் வேய்ந்து
பண்புறப் புனைந்து பல்வளந் திகழும்
கவினுறு மாளிகைத் தவிசின் மீமிசை
யாழ்மிசைக் கீதம் இயல்புவ ரொருபால்
பண்ணொடு பதிகம் பாடுவ ரொருபால்
வேய்ங்குழ லின்னிசை விளம்புவ ரொருபால்
இன்னிய மொலித்திட இராகம் பாடிப்
பல்வகைச் சிந்து பாடுவ ரொருபால்
தண்டமிழ் வளர்க்குந் தகவுறு சான்றோர்
சீருறு கலைகள் சிறப்புற விரித்து
விளக்கக் கேட்டிடு மாந்த ரொருபாற்
கூடி நெருங்கிடுங் குழாத்து நாப்பண்
வேயமர் தோழி! விற்றினி திருப்பன்
நிற்றன் காதலன் நேரிழாய்! காண்குவை
அவணீ யடைஇ எண்ணிய வண்ணம்
இழந்தவுடன் னுள்ளந் தன்னைப் பெறுவை
அதாஅன்று
காத றந்துநின் கருத்து முற்றுறக்
களிமிக் கெய்திப் பெருகிய வன்பொட
பேணிக் காத்துப் புகழ்ந்துநிற் போற்றித
தானே நீயாய் நீயே தானாய்
ஒருசம னாக உவந்து கருதுவன்
பாணர் நாளவை பாவலர் வெறுக்கை
கொடைப்பொரு வள்ளல் கோதில் சான்றோன்
கலையருஞ் செல்வங் காத்திடு முதல்வன்
மடியா வுள்ள மா்பபெருங் குரிசில்
தண்ணுயிர் போல மன்னுயிர் கருதும்
தகைசால் தோன்றல் தண்ணளி யிருக்கை
வேற்றுமை யென்னும் பேதமை யிலாது
யாவரு மொன்றே யாவருங் கேளிர்
என்றே யெண்ணு மேருடைத் தகவோன்
பழையன போற்றிப் புதியன வமைக்கும்
பகத்தறி வாளன் பாருடைத் தலைவன்
தீதில் நெஞ்சந் தூய்மைக் காரணம்
தலையாய மாந்தர்ச் சமனாய் விளங்கி
மாந்தர் பசிப்பிணி மாறா தாற்று
மென்று புலவோர் எடுத்தெடுத் தோதிப்
பாடு கரும்பனங் காடுகிழ வோனே