கையுறை
வழிவழி வரும் கீழைத்தேயக் கல்வியையும் மேலை நாட்டு ஆராய்ச்சி முறைகளையுமிணைத்து அமைதி கண்டு விளங்கிய ஆசான் கலாநிதி. க. கணபதிப் பிள்ளை அவர்களுக்கு இச்சிறு நூல் கையுறை
முகவுரை
இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டவை; தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவை.எனினும் அவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமை நிலவுகிறது என எண்ணுகிறேன். பொருளாதார நிலை என்னும் அடித்தளத்தின் மேலேயே கலை, இலக்கியம், மொழி, தத்துவம், சமயம் முதலாய மேற்றளங்கள், அதாவது தத்துவ வடிவங்கள் அமைகின்றன என்னும் நம்பிக்கையே கட்டுரைகளுக் கூடாக இழையோடி அவற்றிற்கு ஒருமைப்பாட்டை அளிக்கின்றது.
பல்கலைக்கழகத்திலே பயின்றபோதும் பின்னர் ஆசிரியனாக அமர்ந்தபோதும், தமிழிலக்கியம், தமிழர் வரலாறு, திராவிடர் நாகரிகம் ஆகியவற்றைப் படிக்கவும் அவை குறித்துச் சிந்திக்கவும் நேர்ந்தது எமது கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகள் பற்றி எழுதுவோரிற் பெரும்பாலானோர் அவற்றிற்கும் சமுதாயத்திற்குமுள்ள பிணைப்பை வற்புறுத்துவதில்லை; அல்லது வேண்டுமென்றே கூறுவதில்லை. “இந்நிலையில் மாணவருக்குப் பயன்படுமெனக் கருதி அவர்கள் வெளியிடும் ஏடுகளிலே அவ்வப்போது சில கட்டுரைகள் எழுதி வந்தேன். எளிமையாக எழுதவும் முயன்றிருக்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் இக்கட்டுரைகள் பரிசீலனைகளே. இத்துறைகளில் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து எழுத வேண்டும் என்பது என் அவா. தமிழிலக்கியம் கற்பிப்பவன் என்ற காரணத்தால் பெரும்பாலான கட்டுரைகளிலே “இலக்கியச்சார்பு” தென்படும்.
அது தவிர்க்க முடியாததொன்றே. ஆயினும் இலக்கிய உலகிற்கு அப்பாலும் எனது பார்வை சென்றிருப்பதைக் காணலாம். மற்றெல்லாத் துறைகளைப் போலவே எமது இலக்கிய உலகிலும் மூட நம்பிக்கைகள் நிறையவுள்ளன. விஞ்ஞான நோக்குடனும் துணிவுடனும் பிரச்சினைகளை அணுகினாலன்றி நாம் முன்னேறப் போவதில்லை. சமூகவியல், மனிதவியல், அகழாராய்ச்சி, வரலாறு போன்ற பிற அறிவியற்றுறைகளின் துணைக்கொண்டு எமது இலக்கியத்தை ஆய்வது இன்றைய நிலையில் மிகவும் பயனுள்ள செயல் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும். அதன் வெளிப்பாடே இக் கட்டுரைகள் என்று கூறலாம்.
உதிரியாகக் கிடந்த இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும்படி அடிக்கடி தூண்டியவர் நண்பர் செ.கணேசலிங்கன். விடாப்பிடியாக நின்று வேலை வாங்குவதிற் கைதேர்ந்தவர் அவர். அவருக்குப் பெரிதும் கடப்பாடுடையேன். பல்லாண்டுகளாக எனது இலக்கியத் தோழனாக இருந்துவரும் திரு.கா.சிவத்தம்பி M.A.,ஒரு சாலை மாணவருமாதலின் உரிமையுடன் எனது எழுத்துக்களை விமர்சிப்பவர்; குறைநிறை கூறுபவர். கட்டுரைகளைத் தொகுக்குங்கால் ஆலோசனைகள் கூறியவர். அவருக்கு நன்றி கூறுவது கடன். இக் கட்டுரைகளை வெளியிட்டுதவிய ஏடுகளின் ஆசிரியருக்கும் எனது நன்றி உரியதாகும்.
க.கைலாசபதி,
பேராதனை
பொருளடக்கம்
“தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி...”
“சைவ சித்தாந்தமானது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய தமிழர் சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழம் பெருஞ்சமயம் சைவம். ஆரியர் வருகைச்,கு முற்பட்ட இச்சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நிறைந்து விளங்குகிறது.”
டாக்டர் ஜி.யு. போப்பையர்
“தென்னாடுடைய சிவனே போற்றி”என்று திருவாசகம் போற்றுகின்றது. “சிவனொடொக்குந் தெய்வம் தேடினுமில்லை” என்று திருமந்திரம் கூறுகின்றது. எனினும் சைவ சமய வரலாற்றைத் தேடி நாம் பின்னோக்கிச் செல்லும்போது தென்னாட்டை விட்டுச் சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கிறித்துவிற்கு முன் மூவாமிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுச் சிறப்புற்று விளங்கிய நகரங்களுக்குச் செல்லவேண்டியிருக்கிறது. இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு,சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணிவாகும்.
சிந்துநதி தீரத்திலே அகழ்ந்து ‘கண்டு பிடிக்கப்பட்ட’சில சித்திரங்கள், முத்திரைகள், களிமண்படிவங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த சேர் ஜோன் மார்ஷல் மேல் வருமாறு கூறினார்:
“யோகிகளுக்கெல்லாம் தலையாய யோகி சிவன். அதனாலேயே அவருக்கு மஹாந்தபஹ், மஹாயோகி என்னும் பெயர்கள் அமைந்தன... சைவத்தைப் போலவே யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாய யோகி மட்டுமல்லர்;விலங்குகளுக்கெல்லாம் தலைவர்; (பசுபதி) சிவனின் இந்தப் பண்பினையே சிவனைச்சுற்றி நான்கு மிருகங்கள் நிற்பது காட்டுகின்றது. யானை, புலி, காண்டாமிருகம், எருது சிவனைச், சுற்றி நிற்கின்றன... சிந்துவெளிக், கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள். பிற்காலத்தில் சிவனின் விசேட முகூர்த்தமொன்றைக் குறிக்கும் திரிசூலமாக மாறியது. இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது பிற்காலத்திலே சிவனுக்கமைந்த பல அம்சங்கள் தோற்ற நிலையிலே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன என நாம் கருதலாம்.”
சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதவிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இவிங்கம் அல்லது குறியையும் எடுத்துக் கூறியுள்ளார்.
சிந்துவெளி நாகரிகத்தை வளர்த்த மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை யுடைராயிருந்தனர் என்பது விந்தையான தன்று. சிந்துவெளி நாகரிகத்துக்குச் சமகாலத்தனவான சிரிய, சின்னாசிய, எகிப்திய நாகரிகங்களிலும் பெண் தெய்வங்கள் முக்கியமானவையாக விளங்கின. மார்ஷல் புதைபொருளாராய்ச்சியின் விளைவாகச் சில கருத்துக்களைக் கூறுமுன்னர் சந்தா1 என்பவர் இவ்வுண்மையைத் தொட்டுக் காட்டியுள்ளார். அவர் கூறினார்:
“சிரியாவிலே அகத்தாத் என்னும் தத்துவமும், சின்னா சியாவிலே சிபெலேயும், எகிப்திலே இசிஸ் கோட்பாடும் தோன்றிய அதே சமுதாய நிலையிலேதான் இந்தியாவில் சக்தி வழிபாடு தோன்றியிருத்தல் வேண்டும்.”
பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும்.2 சிரியா, சின்னாசியா, எகிப்து முதலிய இடங்களில் பெண்தெய்வ வழிபாடு தோன்றியதற்கும் இத்தகைய சமுதாய முறையே காரணமாகும். பண்டைய திராவிடமக்களிற் பெரும்பகுதியினர் தாய்வழி உரிமை, தாயமுறை முதலியவற்றைக் கடைப்பிடித்தனர். இதன் காரணமாகப் பெண்தெய்வ வழிபாடு திராவிட மக்களிடையே பெரு வழக்காயிருந்தது என்று சமூகவியல் அறிஞர் கொள்வர்.
சிவசம்பந்தம் உடையதாதல் பற்றியே தமிழர் மதம் சைவம் என்னும் பெயர் பெற்றது. சிவம் என்பதற்கு மங்கலம், சுகம், பாக்கியம், பேரானந்தம். என்னும் இன்பப் பொருளையெல்லாம் அடக்கும் தத்துவார்த்தப் பொருள் கூறப்படும். 3 எனினும் பிற்காலச் சமயத்திலே சிவம் ஆண்தெய்வமாகவே வழிபடப்பட்டு வந்துள்ளது. சிவன் என்னும் ஆண்தெய்வ சம்பந்தமான சைவ சமயத்தின் தோற்றம் தேடிச் சிந்துவெளி நாகரிகத்தை அடையும் நாம், அங்கு அன்னைத் தெய்வமே முழுமுதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். இதனைச் சிறிது கவனித்தல் தகும்.
கிறித்துவிற்கு முன் 2,500 ஆண்டளவில் சிறப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகம் கி.மு. 1,500-ம் ஆண்டளவில் சீர்குலைந்து சிதைவுற்றது. சிந்துவெளி நாகரிகத்துக்கும் திராவிடருக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனச் சில வரலாற்றாசிரியர் கூறுவர். அக்கூற்றுக்குச் சாதக பாதகமான சான்றுகள் உள. முடிந்த முடிவான உண்மை யென்று அறுதியிட்டுக் கூறல் முடியாது. எனினும் சிந்துவெளி நாகரிகத்தின் சிதைவிற்குப் பின்னர் வரலாற்றுத் தொடர்ச்சியானது அறுந்து காணப்படுகின்றது. கிழக்குப் பஞ்சாப்பில் உரூபர் என்னுமிடத்திலும், செளராட்டிரத்தில் ரங்கபூர், லொதால் என்னுமிடங்களிலும் சமீப காலத்தில் அகழ் ஆராய்ச்சி நடை பெற்றதன் பயனாகச் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிப் பின்னலின் சின்னங்கள் காணாப்பட்டன என்பது உண்மையே. எனினும் தென்னிந்தியாவிலே சிந்து வெளி நாகரிகத்தின் தொடர்ச்சியோ, வளர்ச்சியோ, தொடக்கமோ இதுகாலவரை காணப்படவில்லை.
அதாவது மொகஞ்சதரை, ஹரப்பா, லொதால் முதலிய இடங்களில் காணப்பட்ட நகர நாகரிகம், இதுவரை தென்னிந்தியாவில் அகழ் ஆராய்ச்சியின் மூலம் புலப்படவில்லை.
வெளித் தோற்றத்திற்குப் புலப்படும் நகர நாகரிகச் சின்னங்கள் தென்னிந்தியாவிற்கும் சிந்துவெளி நகரங்களுக்கும் நேரடியான தொடர்பைக் காட்டாவிட்டாலும், சமய நம்பிக்கை சம்பந்தமான தொடர்புகள் இருப்பதையே இங்கு நாம் கவனிக்க வேண்டும். பெண்தெய்வ (சக்தி) வழிபாடும் மூலச்சிவ வழிபாடும் இருந்ததைப் பார்த்தோம். இவற்றின் பிணைப்பாக இலிங்க, வழிபாடும் நிலவியது. மொகஞ்சதரையிலும், ஹரப்பாவிலும் கணக்கற்ற, நீண்டு குவிந்த அல்லது முக்கோணக் கற்களும் களிமண் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. மார்ஷல் அவற்றைச் சிவலிங்கங்கள் என எடுத்துக் காட்டினார். இலிங்க வழிபாடானது உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்த பல புராதன நாகரிகங்களிற் காணப்படும் வழிபாட்டு முறையாகும். “நீண்டு குவிந்த கல்வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக் கல்லைச் சூழ்ந்த வட்டக் கல்வடிவு பெண்குறியின் அடையாளமாகவுமே முன்னையோராற் கருதப்பட்டது.” சிந்துவெளி நாகரிகத்திற்குச் சமமான பிற நாகரிக மக்களிடையும் இவ்வழிபாட்டு முறை நிலவியது. ஆண் பெண் குறிச் சேர்க்கையே பண்டைக் காலந்தொட்டு இவிங்க வடிவில் அமைந்தது என்பது பிற்காலச் சைவசித்தாந்த சாத்திர நூலாலும் அறியக்கிடக்கின்றது.
“சக்தியுஞ் சிவமுமாய தன்மையிவ்வுலகமெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியுமாக
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம்
இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்”
என்று சிவஞானசித்தியார் தத்துவ விளக்கத்தோடு உரைப்பது பண்டுதொட்டு வந்த உண்மையே யென்பதில் ஐயமில்லை. சிவனை உணர்ந்து அறிந்து வழிபடுதற்குச் சிறந்த “அடையாளம்”அல்லது “குறி” இலிங்கம் என இன்று வரை கருதப்படுவதும் மனங்கொளத்தக்கது. சைவசித்தாந்தத்தின் வளர்ச்சிக் கிரமத்தையும் படிமுறையையும் அறிந்து கொள்வதற்கு இவ்வுண்மை முக்கியமானதாகும்.
பிற்காலத்தில் சைவசமய தத்துவ அடிப்படைகளிலே. முக்கியத்துவம் பெறாவிட்டாலும் மரங்களை வழிபடுவதும் சிந்துவெளி நாகரிகச் சமய முறைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. எண்ணற்ற சிந்துவெளி முத்திரைகளில் அரச மரம் இடம்பெற்றுள்ளது. பெண் தெய்வ (அன்னை) வழிபாடு போலவே மரவழிபாடும் பூர்வீக மனிதனுக்குப் பொதுவான சொத்தாக வந்திருக்கிறது. மெஸப்பொத்தேமியாவிலும் மரக்கிளைகள் தெய்வப்பண்புடன் முத்திரைகளிலே பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் இந்து சமயத்தினரால் வழிபாட்டுக்குரியதாகக் கொள்ளப்படும் மரங்களில் ஒன்றான அரச மரம் சிந்துவெளி முத்திரைகளிற் காணப்படுவதால் அது ஐயாயிரம் ஆண்டுகளாக மக்கள் நெஞ்சில் வழிபாட்டுச் சின்னமாக இடம் பெற்று வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். சிந்துவெளியிற் கண்டெடுக் கப்பட்ட ஓர் இலச்சினையில் இரு அரச மரக்கிளைகளுக் கிடையிலே ஆடைகளின்றிப் பெண் தெய்வமொன்று காணப்படு கின்றது. நீண்ட கூந்தலும் கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அவ்வன்னைத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன. அரச மரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வர் வரலாற்றாசிரியர். தமிழ் மக்களது சமய வளர்ச்சியில் மரவழிபாடும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.7வேதகாலத்துக்கு முற்பட்ட, ஆரியர்காலவரலாற்றிற்கு முந்திய சைவ சமய வரலாற்றை அணுகும்பொழுது நமக்கு இத்தகைய பல செய்திகள் தெரிய வருகின்றன. சிந்துவெளி மக்கள் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கொண்டிருந்த சமய நம்பிக்கை பூரணமான சைவசித்தாந்தம் என்று எவரும் கூடறமாட்டார். அது வளர்ச்சி விதிகளுக்கு முரணான கூற்றாக இருக்கும். எனினும் வரலாற்றுக் காலத்தில் வடிவம் பெற்ற தென்னிந்திய சைவசித்தாந்தம் மட்டுமின்றிப் பொதுவாகவே அகண்ட இந்தியாவில் வளர்ந்த இந்து பெளராணிகக் கருத்துக்கள், நம்பிக்கைகள் முதலியனவும் சிந்துவெளிச் சமய அடிப்படைகளினால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத வரலாற்றுண்மையாகும்.
சிந்துவெளியிலே காணப்பட்ட முந்திய முதல் தோற்ற சைவசமயப் பண்புகளை நாம் பார்த்துக்கொண்டு வரும் பொழுது திடீரென அது சிதைவுற்றுவிடுவதைக் காண்கின்றோம். கி.மு. 1500-ம் ஆண்டளவிற்குப் பின்னர் சிந்து வெளி நாகரிகம் வரலாற்றிலிருந்து மறைந்து விடுகிறது. ஏறத்தாழ அக்காலப் பகுதியில் அலையலையாக இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது இப்பொழுது காய்தல் உவத்தலற்ற ஆராய்ச்சியாளர் முடிபாகும்.9 ஹரப்பா என்னும் நகரமே வேதத்திலே ஹரியூப்பியா (R. V. 6 27. 5)என்று வடமொழி வடிவில் இடம்பெற்றிருப்பதாகக் கோசாம்பி என்னும் அறிஞர் கருதுவர். “பொன்னாலாய பலிமீடத் துாண்கள்” அமைந்த நகரம் என்று அது குறிப்பிடப்படும். சிந்துவெளி மக்களின் அழிவிற்குப் பின்னர் அதே இடங்களில் ஆரியர் குடியிருந்தனர் என்பதற்குரிய சான்றுகளைச் சில ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர். 10 வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக் கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடைப்பதுபோல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடும். பெண் தெய்வம் (அன்னை) சிவன், இலிங்கம், முதலிய தெய்வங்களை இந்திரன்வென்றதுடன் சிந்துவெளி நாகரிகத்தின் சுற்று மதில்களும், கோட்டைச் சுவர்களும், அரண்களும், அகன்ற வீதிகளும், அன்னை ஆலயமும், தானியக் களஞ்சியங்களும் மண்ணோடு மண்ணாயின. நீண்ட நாடகம் ஒன்றின் முதலாம் அங்கம் முடிவடைந்ததுபோல மேடையில் திரை வீழ்கிறது. வெற்றி வீரனான இந்திரனும் அவனது சகாக்களும் சோமபானம் அருந்திக்களிக்கும் எக்காளச் சிரிப்பு மட்டும் எமக்குக் கேட்கிறது. ஆனால் மீண்டும் திரை விலகும்போது தோற்றவர்களை மட்டுமின்றி வென்றவர்களையுமே காணவில்லை. வேதகாலத்திற்குப் பிற்பட்ட சமய வளர்ச்சியிலே வேதகாலக் கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். இந்திரன், வருணன், மித்திரன், பிரஜாபதி, மத்திரிசுவன் முதலிய கடவுளர்கள் முதலிடம் இழந்து பின் வரிசைகளில் காணப்படுகின்றனர், சிவன்,விஸ்ணு, பிரம்மா, சக்தி முதலிய புதிய தெய்வங்கள் நமது மதிப்பையும் கவனத்தையும் கவருகின்றனர்.
சிந்துவெளி நாகரிகம் சிதைவுற்று ஆயிரம் ஆண்டுகளுக்குத் தென்னிந்திய வரலாறு எவ்வாறிருந்தது என்று இன்றைய நிலையிற் கூறமுடியாமலிருக்கிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவிலே திரை விலகும்போது திராவிட மக்கள் ஓரளவு நாகரிகம் பெற்றுத் தென்னிந்தியாவில் வாழ்வதனை நாம் காண்கிறோம்.11
கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலே தமிழ் மக்கள் சிறுசிறு கூட்டங்களாகப் பலதரப்பட்ட நாகரிக நிலையில் வாழத் தொடங்கிவிட்டனர் என நாம் கொள்ளலாம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் மெல்ல மெல்ல ஆரிய மக்களுடைய தொடர்பு தமிழ் மக்களுக்குஏற்படலாயிற்று.எனினும்நமக்குக்கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்கள், அகழ்பொருள்சான்றுகள் முதலியவற்றின் துணைகொண்டு பார்க்கும்போது சாதாரண தமிழ் மக்கள் தமக்கென அமைந்த தெய்வ வழிபாட்டுமுறையினையே கிறித்து அப்தத்தின் தொடக்கம்வரை பெரும்பாலும் கடைப்பிடித்து வந்தனர் என்று கூறத் தோன்றுகின்றது. சில சங்க இலக்கியங்களிலே ஆரியத் தெய்வங்கள் ஆங்காங்கு குறிக்கப்படுவது உண்மையே. அவை அரசர், வணிகர், சமயக்கணக்கர் முதலிய உயர் வகுப்பினரால் ஆங்காங்கு வணங்கப்பட்டிருக்கலாம். பொதுமக்கள் கொற்றவை, முருகன் முதலிய பழந்தெய்வங்களையே வணங்கிவந்தனர். பழைய இலக்கியங்களை நுணுகிப் பார்ப்போருக்கு இவ்வுண்மை புலப்படும்.12 கொற்றவை பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம். சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மையான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை. எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. இது பற்றி மார்ஷல் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.13
“அன்னை” அல்லது “பேரன்னை” பிற்காலத்திலே தோன்றிய சக்தியைத் தோற்றுவித்த மூலப் பொருளின் (பிரகிருதி) முதலுருவாகும். அவளுடைய பிரதிநிதிகளே கிராம தேவதைகள் அல்லது கிராமச் சிறு பெண் தெய்வங்கள். அவற்றின் பெயர்களூம். தலசரிதைகளும் கணக்கிலடங்கா. எனினும் அவை யாவும் ஒரே பொருளையே குறிக்கின்றன. அந்த மூலசக்தியே வளத்தின் தெய்வம். இப்பெண் தெய்வங்கள் யாவும் ஆரியர்க்கு முற்பட்ட, ஆரியரல்லாத இன மக்களிடையே செல்வாக்குடையவாயிருந்தன என்பதில் ஐயமில்லை. ஆரியருக்கு முற்பட வாழ்ந்த பூர்வீக குடிமக்கள் சிலர், சமயத்தை ஏற்கவில்லை. அத்தகைய மக்களிடையே பெண் தெய்வ (அன்னை, தாய்) வழிபாடு நிலைத்துள்ளது. மார்ஷல் அவர்களின் இக்கூற்றானது சிந்துவெளி நாகரிகத்துடன் பெண் தெய்வ வழிபாடு மறைந்துவிடவில்லை என்பதனை நினைவுறுத்துகின்றது. இதனை யொட்டி ஏரன்பெல்சு 14 என்பார் இந்தியாவிலுள்ள ஆதிவாசிகளிடையே நிலவும் முக்கிய பெண் தெய்வங்களின் நீண்ட பட்டியல் ஓன்றினைத் தயாரித்துள்ளார். பிலிமக்கா, புடுபுடிக்கி, தார்ஜி, டொம், கடவா, கங்கதிக்கரை, ஒக்கரை, கங்கை, கொல்லா, அத்தி, ஏலவை, இதிகை என்று நீண்டு செல்கிறது அப்பட்டியல்.
பழந்தமிழரது தலையாய தெய்வம் பெண் தெய்வமே என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்கள் பலவற்றில் கொற்றவை வழிபாட்டுமுறை கூறப்படுகின்றது. அச்சம் பொருந்திய பண்பையுடைய கொற்றவையை வெறியாட்டு முறையினால் பழந்தமிழர் வழிபட்டனர். பழந்தமிழர் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் வரைவிலக்கணமும் விளக்கமும் கொடுக்கும் தொல்காப்பியமும், கொற்றவைநிலை என்னும் தலைப்பில் கொற்றவைக்குப் பலிகொடுத்து வணங்குதலைக் குறிப்பிடுகின்றது. சிந்துவெளி நாகரிகப் பெண் தெய்வம் பிற்கால இந்துசமயத்தில் “சக்தி” யாக மிளிர்ந்தது என்று நாம் கொள்ள முடியுமானால், பழந்தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக. சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம், இதனைச் சிறிது ஆராய்வோம்.
பழந்திராவிடரின் மற்றொரு தெய்வம் முருகன் அல்லது வேலன். பிற்காலத்திலே கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்றெல்லாம் பெயர்பெறுகின்றான். ஆரியரது தந்தை வழி நாகரிகம் தமிழகத்திலே கலந்து கலாசாரப் பிணைப்பு ஏற்பட்ட காலத்திலேயே உருமாற்றம் ஏற்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு, 15 சிவனின் மகன் என்றும், தேவசேனாபதி என்றும், கார்த்திகேயன் என்றும், ஆரிய ஐதீகம் கூறும். எனினும் பல தமிழ் இலக்கியங்கள் இதே முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. இச்செய்தி மிக முக்கியமானது என்று நாம் கருதல்வேண்டும். “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறு” 16 என்றும் “மலைமகள் மகனே” என்றும் “இழையணி சிறப்பிற் பழையோள் குழவி” 17 என்றும் திருமுருகாற்றுப்படைப் புலவர் பாடுகின்றார். “பைம்பூட்சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்வி” 18 என்று பெரும்பாணாற்றுப்படை பாடுகின்றது. இத்தகைய பழைய குரல்களைக் கேட்கும்போது கொற்றவை, செல்வி, முதலியபெயர்களுடன் உயரிடம் வகித்த பழம்பெரும் பெண்தெய்வத்தின் பெருமிதத் தோற்றம் நமக்குத் தோற்றுகிறதல்லவா ? சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப்படும்பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம். தாய்க்கு முக்கிய இடத்தையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையிலேயே சைவம் தென்னிந்தியாவிலே அல்லது தமிழ்கூறு நல்லுலகத்திலே வளர்ந்தது என்று நாம் கொள்ளல் வேண்டும். சிவன் பரம்பொருளாகவும் முழு முதற்றெய்வமாகவும் வளர்ச்சி யடைந்ததைத் தொடர்ந்தே சைவசித்தாந்தம் தத்துவ வடிவில் உருப்பெற்றது என்பது உண்மையே. எனினும், பிற்காலத்திலே சைவம் சித்தாந்தமாக வடிவம் பெற்றபொழுது மறைமுகமாகப் பெண்தெய்வம் (சக்தி) முக்கிய இடம் பெற்றுவிட்டது. சிவனே முழு முதற் பொருளாகக் கொள்ளப்பட்டாலும் ''இறைவன்'' தனது சித்சக்தியைக் கொண்டே மாயையைத் தொழிற்படுத்துவான் என்பதே சைவ சித்தாந்திகள் கொள்கை. இறைவன் வேறு அவனது சக்தி வேறா என வினவலாம். ஓரு விதத்தில் இறைவனும் அவனது சக்தியும் ஒன்று. இன்னொரு விதத்தில் அவை இரண்டும் வேறு என அவர்கள் கூறுவர்.19 இந்த இடத்திலே சாங்கிய மதத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்குமுள்ள பல ஒற்றுமைகள் வேற்றுமைகள் சிந்திக்கற்பாலன.
பழந்தமிழ் நூல்களையும் அகழ்பொருள் ஆராய்ச்சிகளையும் சான்றாகக் கொண்டு தென்னிந்தியாவிலே சைவ சமயத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராய்ந்து நூலொன்று எழுதிய சி.வி. நாராயண ஐயர் ஓரிடத்திலே மேல்வருமாறு கூறுவார்.20 “தொல் காப்பியத்திலே வேதகாலத் தெய்வங்கள் சில மதிப்போடு கூறப்படுவதிலிருந்தே பொதுமக்கள் மத்தியில் அவை எவ்வளவு துாரம் இடம் பெற்றிருந்தன என்பது புலனாகும். (அக்காலப்) பொது மக்கள் புதிய தெய்வங்களில் நம்பிக்கை கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், அதே சமயத்தில் காலாகாலமாக வந்த தமது சொந்த வழிபாட்டு முறைகளையும் அவர்களாற் கைவிட முடியவில்லை. எனவே, புதிய தெய்வங்களையும் பனழய முறையிலே சேர்த்து வழிபட்டனர்,”
சிந்துவெளி நாகரிகம்பற்றிய செய்திகளும், சங்க இலக்கியம், தொல்காப்பியம் முதலிய நூல்களின் கால ஆராய்ச்சியும் தெளிவு பெறாத காலத்திலே சி.வி. நாராயண ஐயர் தமது நூலை எழுதினார். அதுமட்டுமன்று. தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் பலவற்றிற்குக் காலத்தால் முந்தியது என்னும் அடிப்படைத் தவறையும் அவர் கொண்டிருந்தார். அது அவரைப் பல தவறான முடிவுகளுக்குக் கொண்டுசென்று விட்டது.
சங்க இலக்கியங்களை நுணுகி ஆராயின் தமிழ் நாட்டிலே சமயம் எவ்வாறு வளர்ச்சியும் மாற்றமும் அடைந்து வந்தது என்பது புலனாகும் கொற்றவை, முருகன் ஆகிய பழந்தெய்வங்களோடு நாகரிகக் கலப்பின்பயனாகச் சில பழைய தெய்வங்கள் புதிய உருவிலும், சில புதி தெய்வங்கள் பழைய வடிவிலும் தோன்றுவதையும் காணலாம். இவற்றையெல்லாம் காலவகைப்படி 'பகுத்துப் பார்த்தாலன்றிச் சமய வளர்ச்சியின் படிமுறைகளைச் சரியான முறையில் அறிந்து கொள்ளல்முடியாது. அதுமட்டுமன்று ஆரியக் கலப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள் என்றும்,இலகுவான காரணம் கூறிவிடமுடியாது. எத்துணைப் பிற பண்பாட்டு கலப்பு வந்து சேர்ந்தாலும், இருந்த பண்பாட்டிலும் சில குறைபாடுகளோதேவைகளோ இருத்தல் வேண்டும். கொற்றவைக்கு அடுத்தபடியாக நாம் சுற்றுமுற்றும் பார்க்கும்போது முருகன் வடிவம் தென்படுகிறது.கூட்டாக மனிதன் வாழ்ந்த பூர்வீக (Primitive) நிலையில்வேட்டையாடுதல், மிருகங்களைக் கொல்லுதல் முதலிய செயல்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாயிருந்தன. அது உண்மை. அதேசெயல்கனைச் சில வேளைகளில் செய்து பார்த்தபோது கூத்து அல்லது ஆட்டம் பிறந்தது. உண்மை வாழ்க்கையில் செய்யும் ஒன்றைஅவிநயத்துச் செய்து பார்க்கும்போது மனதிலே எழுச்சியும் துணிவும் களிப்பும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஒருவன் செய்யும்போது அவனிடம் மந்திர சக்தி இருப்பதாகப் புராதன மனிதன் நம்பினான். அதற்கு அஞ்சினான். அடிப்படையிலேயே புராதன தமிழகத்திலே வேலன் என்னும் ஒருவன் தோன்றினான் என நாம் ஊகிக்கலாம். உண்மைநிகழ்ச்சி பொய்ம்மையாக, மன எழுச்சியுடன் மனிதனாற் செய்யப்படும்பொழுது கலையும் பிறந்து விடுகிறது. இன்றுகூடத் தாழ்ந்த சாதியினர் என்று கூறப்படுபவர்களிற் பலரும், ஆதித்திராவிடர் எனப்படுபவர்களும் வெறியாடுவதைக் காணும் போது பண்டைய வெறியாட்டு வழிபாட்டைப் பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்ளலாம்.
“மாரியம்மன் வந்து கரகமாடல், பேய் பிசாசுகளை அகற்றுபவன் ஆடும் ஆட்டம், கோயில்களில் மிருகபலி கொள்ளும் ஜயனார் ஆடும் ஆட்டம் முதலியன ,தெய்வமேறி ஆடுதவின் பாற்படும். இவ்விநோதக் கூத்துசக்கள் வேட்டுவர், இடையர், மழவர் முதலிய பாமர மக்களின் விநோதத்திற்கென வகுக்கப்பட்டன.” என்று கூறுகின்றார் பி.கோதன்டராமன்.21 பாமர மக்களுக்கென வகுக்கப்பட்டன என்பது சரியன்று. பாமர மக்களால் வகுக்கப்பட்டன என்பது பொருந்தும். இந்த உண்மையின் துணைகொண்டு பார்க்கும்போது பண்டையத் தமிழிலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாட்டு முறை (வெறியாட்டம்) மிகப் புராதனமானது என்பதும் சமுதாயக் கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியது என்பதும் புலனாகும்.“வெறியாட்டு என்பது, பெரும்பான்மை முருக பூசனை செய்யும் வேலன் என்பவனும், சிறுபான்மை தேவராட்டி என்னும் குறமகளும் தெய்வமேறி ஆடுங் கூத்தாகும். வேலன் ஆடுங்கூத்தை வேலனாடல் என்பர். முருக பூசனை செய்வோன் முருகனுக்குரிய வேலை அதைத் தனக்கு அடையாளமாகக் கொண்டிருப்பதால் அவனுக்கு வேலன் என்னும் பெயர் வந்தது. அவன் தெய்வமேறி ஆடுவதனால் வெறியாட்டாளன் என்றும், அந்த ஆவேசத்தால் குறி சொல்லுவதனால் படிமத்தான், தேவராளன், சன்னத்தக்காரன் எனப்பலவாறாகவும் அழைக்கப் படுகின்றான். அவன் ஆடும்போது கண்ணி, கடம்பம், காந்தள்கார்காலத்துக் குறிஞ்சி, அலரி, ஆகிய முருக்னுக்குரிய மலர்களுள் ஒன்றை அணிந்து கொள்வான். முருகனே அவன் உடலில் நின்று ஆடல்புரிகிறான் என்பது பக்தர்களின் கொள்கையாதலால் அவனை “வெறி புரி ஏதில் வேலன்” என்றும், “பொய்யா மரபினுார் முதுவேலன்”என்றும் நூல்கள் கூறும்.”22 “வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”என்றும், “ வேலகைக் கொடுத்து வெளிதுவிரித்துடீஇ”என்றும்“நெடுவேல் வாய்ந்த மார்பின்” என்றும் இவை போலப் பிறவும் சங்க இலக்கியங்கள் பல வற்றில் காணப்படுகின்றன. வேல் இரும்பினால் ஆக்கப்படுவது. சிந்துவெளி நாகரிக மக்கள் இரும்பு எனும் உலோகத்தை அறியாதவர். இரும்புக் காலம் தென்னிந்தியாவிலே ஏறத்தாழ கி.மு. ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே திடீரெனத் தொடங்குகிறது; புதிய கற்காலத்தின் தொடர்ச்சியாக அது காணப்படவில்லை என்று ஹைமண்டோவ் என்னும் ஆராய்ச்சியாளர் கருதுவர். மைசூர் இராச்சியத்திலுள்ள பிரம்மகிரி, சந்திரகிரி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ் ஆராய்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டே அவர் அவ்வாறு கூறுவர் . அதனைப் பிரமாணமாகக் கொண்டு ஓரு கணம் நாம் சிந்தித்துப் பார்த்தால் சங்ககால இலக்கியங்கள் நேர்முக வருணனையாகவோ அல்வது பழைய “இனநினைவுகளாகவோ” கூறும் செய்திகள், குறிப்பாக வேல்பற்றிய செய்திகள் கி.மு, ஏழாம் நூற்றாண்டிற்கு முற்படாமற் போதல் புலனாகும். முருக வணக்கத்தின் தொன்மையை இது உறுதிப்படுத்தும். வேட்டுவ வாழ்க்கை மனித வளர்ச்சியின் மிக முற்பட்ட நிலைகளில் ஒன்று உணவு சேகரிக்கும் நிலைஅது. அது குறிஞ்சி நில வாழ்க்கையாக- ஓழுக்கமாக-தமிழரிடையே குறிக்கப்பட்டு வந்துள்ளது. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்றோன்றி மூத்த குடி” தமிழர் தம்மைக் கூறிக்கொள்வதும் இதனை அடிப்படையாகக் கொண்டே. இத்தகைய குறிஞ்சி நில வாழ்க்கைக்குத் தெய்வமாக அமைக்கப்பட்டுள்ளான் முருகன்.
“சேயோன் மேய மைவரை உலகமும்”
என்று தொல்காப்பியத்திலே பிற்கால இலக்கண ஆசிரியர் குறிப்பிடுவர்.
கொற்றவையும், சேயோனும் (முருகன்) பழம்பெருந் தெய்வங்களாக இருந்தமையாற்றான் சிவவழிபாடு சிறப்புற்ற காலையில் கொற்றவை சிவனின் சக்தியான மலைமகளாகவும், முருகன் ஆலமர்ந்த கடவுளின் மகனாகவும் புதிய உறவுமுறையும் குலமுறையும் பெறுகின்றனர். தமிழ் நாட்டிலே சிவ வழிபாடு பெருவழக்காகப் பெற முருகவழிபாடு குறைவதாயிற்று.”23
“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை சூறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”24
என்று கிறிஸ்துவிற்குப் பின் ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டளவிற் றோன்றிய பழந்தமிழ்ப் பேரிலக்கணம் தமிழ் நாட்டுத் தெய்வங்களூக்கு நிலப்பாகுபாடு காட்டுகின்றது. மாயோன், சேயோன், இந்திரன், வருணன் ஆகிய நான்கு தெய்வங்களையும் கூறும் இந்நூல் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைக் குறிப்பிடவில்லை. சங்க நூல்களில் மிகச் சில இடங்களிலேயே சிவனைப்பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன.25 ஆனால் சிவன் என்னும் பெயரோ, அவன் இன்ன நிலத்துக்குரியவன் என்றோ கூறப்படவில்லை. இலக்கிய்த்திற்குரிய பொருளை அல்லது மனிதனையும், அவனது சுற்றுச்சார்பையும், வகுத்துப் பிரித்த தொல்காப்பியம் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பொருளைப் பாகுபடுத்துகிறது. பொருளின் அடிப்படையில் அமைந்த ஒரு பாகுபாட்டினை நாம் இங்கு காணலாம். கருப்பொருள் என்பது திணைகளுக்குரிய தெய்வத்தைத் தவிர, உணவு, விலங்கு,மரம், புள், பறை, யாழ், தொழில் என்பனவற்றையும் கூறுவதனால் இவ்வுண்மை புலப்படும்.
சைவசமயத்தின் தொன்மைதேடித் தொல்காப்பியத்தைத் துருவி ஆராயும்போது சிவன் கருப்பொருளிலே இடம்பெறாமையைக் கண்டோம். இது கவனிக்கத்தக்கது. ஏனெனில் ஆரிய வழக்கிலும் வேதகால முடிவிலேயே சிவன், விஸ்ணு, பிரம்மா முதவிய இட்ட தெய்வங்கள் சிறப்படைந்தன. பக்தி மார்க்கத்தின் தொடக்கத்தைக்காட்டுவதுபோலப் பகவத்கீதையில் கண்ணன் தனித்தெய்வமாக்கப் படுகின்றான்; அதைப்போலவே, சிவனும் காலகதியிலே தனக்கென ஒரு குலமுறை இணைக்கப்பெறுகின்றான். வேத வழக்கிற்குப் பிற்பட்ட இதிகாச புராண காலத்திலேயே சிவ, விஸ்ணு வழிபாடு சிறப்படைந்தது. எனவே தமிழ் நாட்டிலும் அவை பிந்திய காலத்தில் பெருவழக்கடைந்தால் வியப்பில்லையல்லவா? வேதவழக்கிலே சிவன் முதன் முதலிலே உருத்திரனோடு ஓன்றாகப் பேசப்படுவதை நாம் காணலாம். நந்தி, நாகம் முதலியவற்றோடு (இவை ஆரியருக்கு முற்பட்ட குலங்களின் சின்னங்கள்) தொடர்பு படுத்தப்பட்டுச் சிவன் தோன்றும் போது பெளராணிக வழக்கு வலுத்துவிடுகிறது. இந்தக் காலப் பகுதிக்குரிய சிவனையே பழைய தமிழிலக்கியங்களிலே நாம் காண்கிறோம்.
பத்துப்பாட்டிலே நான்கு இடங்களிற் சிவனைப் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம்.26 அக்குறிப்புகள்பெளராணிக மரபை நன்குணர்ந்து காணப்படுகின்றன. முப்புரம் எரித்தமை, கண்டத்திலே நீலநிறம் பெற்றிருத்தல், திங்களைத் தலையிலே தரித்தமை, நெற்றிக்கண் உள்ளமை, இடபக்கொடியை உடையராயிருத்தல், உமையொரு பாகனாயிருத்தல், ஐம்பூதங்களைப் படைத்தவனா யிருத்தல், ஆகியன சங்க இலக்கியங்களிலே சிவனைப்பற்றிக் கூறப்படும் குறிப்புகள். முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் புறநானூற்றிலே கூறப்படுகின்றது. எனினும் தெய்வங்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது சங்க இலக்கியங்கன் காட்டும் அக்காலப் பகுதியிலே சிவ வழிபாடு மக்கள் மத்தியிலே “அவ்வளவு செல்வாக்கு பெற்றிருக்கவில்லை” என்னும் முடிவிற்கு வரலாம். இதற்குக் காரணமும் இல்லாமவில்லை. குலங்களாகவும் குடிகளாகவும் (Tribes and clans) மக்கள் வாழ்ந்த புராதனக் கூட்டுமுறை வாழ்க்கையிலே கொற்றவை,வேலன், வருணன் முதலிய தெய்வங்களே சிறப்புடையனவாயிருந்தன.பூசாரிகள், குருமார் எவருமின்றி மக்கள் பலியிடுதல், வெறியாடல்முதலிய முறைகளினால் தாமே கூட்டாக வழிபட்ட நிலையிலே சமுதாயக்கடவுளர் தேவையாயிருந்தனர். ஓரளவிற்கு இந்திரன், பிரஜாபதி முதலிய தெய்வங்கள் வேதகால ஆரியருக்குஉகந்தவராயிருந்ததைப் போல சமூகத்திலே தனி உடைமையும், ஆட் சிநிலைமையும் தோன்றியபோது தனிப்பட்ட இட்ட தெய்வங்களுக்கும்வகுப்புகளுக்கான தனிப்பட்ட தெய்வங்களும் உருப்பெற்றன. அந்தநிலையிலேயே சிவன், விஸ்ணு முதலிய தெய்வங்கள் சிறப்புற தொடங்கின. கோயில் வழிபாடும், புறச்சமயங்களின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பக்திமார்க்கமும், சமுதாயத்திலே ஏற்பட்ட வர்க்க முரண்பாடுகளும் தனித்தெய்வங்கள் தோன்றுவதற்குஅனுசரணையாக இருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில்இப்பண்பு சங்கமருவிய காலத்தில் அதாவது கிறித்துவிற்குப் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் தோன்றுகிறது. சிவன், விஸ்ணு ஆகிய இரு தேய்வங்களும் சிறப்புற்ற காலையிலே, அவ்விரண்டும் தமக்கு முன்னிருந்த பல சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் தம்முடன் பல்வேறு வகைகளிலே தொடர்புபடுத்தி இணைத்து ஈடிணையற்ற தனிப்பெருந் தெய்வங்களாகப் பரிணமித்தன. இதற்கு கருவியாகப் பிராமணர் அமைந்தனர். ஆரியரால்லாத கூட்டத்தைச் சேர்ந்த, கிருஷ்ண (கறுப்பு)னும், சுமேரியத் தெய்வங்களோடு ஒப்பிடக்கூடிய நாராயண, வேதக்கடவுள், ஆகிய மூன்று வேறுபட்ட தெய்வங்களும் மகாபாரதத்திலே ஓரு தெய்வமாக இணைக்கப்பட்டு ஓன்று சேர்க்கப்படுகின்றன. அன்றைய இந்தியாவிற்கு இத்தகைய முயற்சிகள் கலாசார ஒருமைப்பாட்டை அளித்தன.27 இதைப்போலவே சிவனும் புதிய பழைய பண்புகளை யெல்லாம் சேர்த்துத் தனிப்பெருந் தெய்வமாகத் தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சிந்துவெளி நாகரிகத்தில் உதித்த சிவன் மிருகங்கள் புடைசூழப் பசுபதியாகி, கூட்டு வாழ்க்கையில் கணங்கள் சூழப் பூதகணங்களுக்குத் தலைவனாகி, பழைய பெண் தெய்வத்தை மணந்து மலைமகள் மணாளனாகி, மாதொரு பாகனாகி, கார்த்திகேயன் தந்தையாகி, பழைமையையும் புதுமையையும் தன்னுள்ளடக்குவதை நாம் காணலாம். தனியுடைமையை அடிப்படையாகக் கொண்டு சைவமும் வைணவமும் செழித்தோங்கிய படியாற்றான், உடைமைகளுக்கு எதிராக இருந்த சமண, பெளத்த சமயங்களுடன் மோதின. எனினும் இந்திய வரலாற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது காலப்போக்கிலே சிவ வழிபாடு பெரிய நிலக்கிழார்கள், பிரபுக்கள் முதலியவர்களுக்கு உரியதாயும், வைணவம் சிறுபொருள் உற்பத்தியாளர், விவசாயிகள் முதலியோர் மத்தியில் பெருவழக்குள்ளதாயும் இருப்பதைக் கவனிக்கலாம். சிவ-வைணவ மதப்பூசலின் எதிரொலி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது.28
சங்க காலத்தைப் பார்க்கும் போதும் இவ்வுண்மை தெளிவாகும். திராவிடரின் ஆரியருக்கு முற்பட்ட வேறுபட்ட வழக்குகளும், ஆரியரின் வேதவழக்கும் முட்டிமோதிக்கலப்பதைச் சில சங்ககால, சங்கமருவியகால இலக்கியங்கள் எமக்குக் காட்டுகின்றன என்பதுண்மையே. அது இயல்பான கலாசார இயக்க விதியின் பாற்படுவது. எனினும் சமணம், பெளத்தம் தமிழ்நாட்டிலும், மெல்ல மெல்லப் பெருவழக்குற்றத்தைத் தொடர்ந்து வைதிக சமயமும் வலுவடை வதற்குரிய வழி வகைகளைக் கண்டது. அந்தப் பண்பின் விளைவாகவே பக்திமார்க்கமும், இட்டதெய்வமும், தனிப்பெருந் தெய்வமும் தமிழ கத்திலும் தோன்றின. காரைக்காலம்மையார் பிரபந்தங்களில் தெளிவாக இப்பண்பினைக் காணலாம். அதற்கு முதற்படியாகப் பத்துப் பாட்டிலும் “இரட்டைக்” காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலையிலும் சமயங்கள் அருகருகேயிருந்து “போட்டி”யிடுவதை நாம் காணலாம். கோயில்கள். விகாரைகள், பள்ளிகள் பெருமளவில் கட்டப்பட்டதும் போட்டிக்கு ஏதுவாக இருந்தது. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலே அந்தணர் பள்ளியும், சமணப்பள்ளியும், பெளத்தப்பள்ளியும் சிறப்புற்று விளங்கும் மதுரை மாநகரை நாம் காண்கின்றோம்.சிலப்பதிகாரத்திலும் இதன் தருக்க ரீதியான வளர்ச்சியைக் காணலாம்.
இவ்வாறு “உடனிருந்து வாழும்”நிலையைப் பயன்படுத்திச் சமணமும்,பெளத்தமும் ஒருபடி மேற்சென்றபோதுதான் வைதிக சமயங்களுக்கும் அவைதிக சமயங்களுக்கும் இடையே நேரடியான துவந்தயுத்தம் மூண்டது. அதற்குரிய அடிப்படைப் பொருளாயதக்காரணங்களை ஆராய இது சந்தர்ப்பமன்று. எனினும் ஒன்றுமட்டும் கூறலாம்.
ஓயாத போர், கொள்ளை, மரணம், கட்டுப்பாடற்ற ஆண்பெண் உறவு, மிதமிஞ்சிய மது, மாமிச ஊண் முதவியவற்றின் இருப்பிடமான புராதனத் தமிழகம், சமணம், பெளத்தம் ஆகியன கொண்டு வந்தசாந்தம், சமாதானம், ஒழுக்கம், பெண் வெறுப்பு, அரசுநெறி, கட்டுப்பாடு,புலால் மது வெறுப்பு, பொருளாசை வெறுப்பு முதவிய பண்புகளைத் தொடசக்கத்தில் இலகுவாகவும் விருப்பத்துடனும் ஏற்றது. காலத்தின்தேவையை, வந்த சமயங்கள் நிறைவேற்றின. எனினும் இதே துறவச் சமயங்கள் ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் அடிப்படையில் மன்னருக்குஆதரவு அளித்துத் தமது பள்ளிகள், விகாரைகள் முதவியவற்றிற்காக பெரும் அளவில் பொருளும் நிலமும் சேர்த்த போது-தமது முற்போக்கையிழந்த போது-அது தமிழக மக்களுக்குச் “சுமை” யாக மாறியது.பள்ளிகள் பெரிய நிலவுடைமை நிறுவனங்களாக மாறின. சமனாத்தையும் பெளத்தத்தையும் சிறப்பாக ஆதரித்தவர் அக்காலத் தமிழக வணிக வர்க்கத்தினர். ஏனெனில் பலம் வாய்ந்த அரசாட்சியில் பொருளீட்டி வாணிகஞ் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதே சமயத்தில் கொல்லாமையையும் கடைப்பிடிச்,க முடிந்தது. நிதிக்குப்பை நிறைந்த செல்வர் சமணத்தை ஆதரிப்பதைச் சிலப்பதிகாரம் காட்டும். சமண, பெளத்த பள்ளிகள்பெரும் நிலவுடைமை நிறுவனங்களாகிச் செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் எழுதிய அங்கதநாடக நூலாகிய “மத்த விலாசப் பிரகசணம்” என்னும் நூல் மூலம் அறியலாம். தமது செல்வாக்கினால் அவர்கள் (சமண பெளத்தர்) நீதி பரிபாலனத்திற்கூடத் தலையிட்டனர் எனத் தெரிகிறது.
சமயக்குரவர் சமண பெளத்தரைத் தாக்கும் போது காணப்படும் வேகத்தின் அடிப்படை இங்கேதானிருக்கிறது. “ஆனைமாமலை ஆதியாயனிடங்களிற் பல அல்லல் சேர் ஈனர்கள்” என்றும், நாயன்மார் பின்னர் தாக்குவது இதன் காரணமாகவே என்பது தெளிவு.
இதற்கு முன்னோடியாக, விடிவெள்ளியாகத்தான் காரைக் காலம்மையார் தமது திருப்பதிகங்களிலே சிவனைக் கருணையின் பிழம்பாகவும், கோபத்தின் சின்னமாகவும், அழிவின் சக்தியாகவும் கொண்டாடுகின்றார். பொது மக்களும் பங்கு கொண்டு வழிபடும் வண்ணம் சிவனது பண்புகளைத் தமிழகத்து வழிபாட்டு முறைகளுக்கேற்ப பாடுகிறார் அம்மையார். அதுமட்டுமன்று. சிலப்பதிகாரம் முதவிய நூல்களிலே வரிப்பாடல்களாகக் காணப்படும் கிராமியக் கவிதைகளையும் அனுசரித்துக் கட்டளைக் கலித்துறை விருத்தம் முதலிய பாமரச் சுவை பொருந்திய இசைப்பாடல்களையும் பாடத் தொடங்கினார். சைவ சமய மறுமலர்ச்சி பக்திப் பிரவாசமாகத் தமிழகத்திலே ஓடப் போகிறது என்பதைக் காட்டி நிற்பவர் அம்மையார். அவர் வழியிலேயே நாயன்மார் சென்று பக்தி நிலையை உச்சிக்குக் கொண்டு சென்றனர். தமிழகத்திலே பக்தியானது பொருளாதார-சமூக- அரசியல்-சமயப் பேரியக்கமாக மாறியது. அது கண்டு மன்னரும் பக்கம் மாறினர்.
“வீடறியாச்சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தி லமண் பள்ளியொடு பாழிகளுங்
கூடவிடித்துக்கொணர்ந்து குணதர வீச்சுரமெடுத்தான்”
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப் பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கள் கட்டினான் என்று பெரியபுராணம் பாடும்.எனினும் அது பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்துக்குரிய உண்மையாம்.
“ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந் தாரக்
கன்பராகில் அவர் கண்டீர்.
நாம் வணங்கும் கடவுளாரே”
என்னும் நிலை ஏற்பட்டதும், சிவன் தென்னாடுடைய தனிப் பெருந் தெய்வமாக மாறி விடுகிறான்.
பெயர் தெரியாச் சிந்துவெளிக் கடவுள் பெயரும் குணமும் பெற்றுச் சிதம்பர நாதனாகி விடுகிறான்.
அழிவும் ஆக்கமும்
தமிழரைப் போன்று பழைய இலக்கியச் செல்வம் படைத்த பிற சமூக மக்கள் சிலரின் இலக்கிய வரலாற்றைப் படிக்கும் பொழுது, பொதுவாகச் சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், சிறப்பாக வீரயுகத்திலே அரசியலுக்கும் புலவருக்குமிகுந்த நெருங்கிய பிணைப்பைப் பற்றியும் சில உண்மைகள் எமக்குப் புலனாகின்றன. பண்டையக் கிரேக்கர், ஜெர்மானியர், கெல்தியர், செமித்தியர் முதலாய இனமக்களும் சான்றோர் இலக்கியத்திற்குச் சமமான இலக்கிய வளம் படைத்தவர்களே. வரலாற்றுத் தொடக்கக் காலத்திலே அம்மொழிகளிற் பாடிய புலவரும் அரசவைகளில் வீற்றிருந்து செய்யுட்கள் யாத்துள்ளனர்; தமிழ்ப் புலவரைப் புரவலர் போற்றியதைப் போலவே அப்புலவர்களையும் மன்னர்கள் சிறப்பாகப் போற்றியுள்ளனர். தமிழ்ப் புலவரைப் போற்றிய பழந்தமிழ் மன்னரின் இலக்கியஆர்வத்தையும், வள்ளன்மையையும் தமிழிலக்கிய வரலாற்றாசிரியர் பெரிதும் புகழ்வர். ஒப்பிலக்கிய நோக்குடன் நிலைமையை பார்க்கும்பொழுது, மேல் நோக்கிற்குத் தெரியும் கொடைச் சிறப்பிற்கு அடிப்படையாக ஆளும் வா்க்கத்திற்கு அனுசரணையாகப் புலவன்பிரசாரஞ் செய்த பணி தெரியவருகின்றது.
சான்றோர் இலக்கியங் காட்டும் தமிழர் சமுதாயம், நாகரிக உலகின் நுழைவாயிலிலே நிற்கும் சமுதாயமாகும். கிறித்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழகவரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக் குழுக்கள் (Tribes) சிதறிக் கிடந்தன. புராதன மனித வரலாற்றாசிரியர் அநாகரிக நிலையில் (Barbarism) இப்புராதனக் கூட்டுச் சமுதாயங்கள் இயங்கின என்பர். இச்சிறு கூட்டுச் சமுகங்களில் யாவரும் தமிழகம் ஒன்று என்னும் உணர்வுஎழாத காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை இங்கு வற்புறுத்துதல் அவசியமன்று. ஒவ்வொரு சிறு குழுவிலும் அடங்கியயாவரும் இரத்த உறவினால் பிணைக்கப்பட்டவர்கள். குழுவின் பொருளாதார அமைப்பைப் புராதன பொதுவுடைமை எனலாம். ஓளியர், ஆவியர், கோசர், அதியர், அருவர், மழவர், வழுதியர் முதலிய கூட்ட மக்களெல்லாம் இத்தகைய குலமரபுச் சமூக வாழ்க்கையிலிருந்தவரே. இவர்களது பெயர்கள் குலமரபுப் பெயர்களாம். நாளடைவில் இக்குலங்களிற் சில இரும்பு முதவிய உலோகங்களைப் பயன்படுத்தவும் வளர்ச்சி பெற்ற பண்டமாற்றிலீடுபடவும் பழகின. இது குலத்துக்குள்ளும், குலங்களுக்கிடையும் எற்றத்தாழ்வுகளை யுண்டாக்கியது. இப்பொருளாதாரப் புரட்சியை விரிவாக ஆராய இது ஏற்ற சந்தர்ப்பமன்று. மனித வரலாற்றில் நிகழ்ந்த பெரும் புரட்சியாகிய இம்மாற்றத்தினையே ஏங்கல்ஸ் “குடும்பம் தனியுடைமை, அரசு ஆகியவற்றின் தோற்றம்”என்னூம் நூவில் விவரித்துள்ளார்.
கி.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் இப்புரட்சி தொடங்கியது. இரும்பின் உபயோகம் கி.மு. ஏழாம் நூற்றாண்டளவில் தொடங்கியது எனக் கருதலாம். வெளிநாட்டு வணிகமும் இப்புரட்சியின் வேகத்தை அதிகரித்தது என்பதில் ஐயமில்லை. இப்புரட்சியின் விளைவாகச் சிதறிக் கிடந்த குலங்கள் ஓன்றுடன் ஒன்று மோதின. சில குலங்கள் உயர்ந்தன; சில தாழ்ந்தன;சில அழிந்தன; சில புதிய கூட்டுச் சேர்ந்தன. 'மாடுபிடி! சண்டையினாலும், ஊர்க் கொள்ளையினாலும், குலங்கள் கலப்பதனாலும் நாளடைவில் பெரிய அரசுகள் தோன்றின. ஏங்கல்ஸ் கூறுகிறார்:
“தொடர்புடைய கிளைகளின் கூட்டணி இன்றியமையாததாகின்றது. இக்கூட்டணி, கிளைகளின் நிலப்பரப்பின் கூட்டமைப்பாகவும் அமையவே, ஒரு தேசமாக மாறிவிடுகின்றது. மக்களின் போர்த்தலைவர் தவிர்க்க முடியாத நிரந்தரமான தலைமையாளராக நிலைக்கின்றனர்..... ஏனெனில் போரும் சமூகக் கட்டுக்கோப்பும் நாட்டின் நிரந்தரக் கடமையாகிவிடுகின்றன.”
நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து காலப் போக்கிலே தமிழகத்தில் மூன்று அரசுகள் உருவாகின. முடியுடை வேந்தர் தலைதுாக்கினர். தமிழகம் நாகரிக உலகில் நுழைந்தது. அதாவது அரசு தோன்றியது. அந்த நிறுவனத்தின் நிழலிலேயே, புலவனும் தோன்றுகின்றான் அல்லது தே்ாற்றுவிக்கப்படுகின்றான் என்று கூறலாம்.
அது எப்படி ?
(அழிந்த) பழைய குலங்கள் பன்னெடுங்காலமாக மரபு முறைப்படிவாழ்ந்து வந்தவை; நமது காலத்து முறையிற் கூறுவதாயின் அவற்றிற்குக் குலப்பெருமை இருந்தது. புதிய “பணக்காரரான” வேந்தர் போர், கொள்ளை, கொலை, முதலியவற்றினால் முன்னுக்கு வந்தவர்கள். அவர்கள் “வம்பவேந்தர்” (புறம் 345 : 7 )
“வந்தோர் பலரே வம்பவேந்தர்
பிடியுயிர்ப பன்ன கைகவ ரிரும்பின்
ஓவுற ழிரும்புறங் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
மையனோக்கிற் தையலை நயந்தோர்
அளியர் தாமேயில டன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரலல் லோர்க்குத் தரவோ வில்லெனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினு மன்னோ
என்னா வதுகொறானே .
பன்னல் வேவியிப் பணைநல் லூரே.”
பெண் கேட்டு நிற்பவர்கன் செல்வம் நிறைந்த மன்னராயிருந்தும்பழைய குலப்பெருமை, ஆண்மை முதவியவற்றால் ஓவ்வாதராதலின் அவருக்குப் பெண் கொடுக்க மறுக்கின்றனர், பெண்ணின் மூத்தோர். எனவே தவிர்க்க முடியரதபடி போர் மூள்கின்றது. பலவகைப் படை.கள் கொண்டு வந்து நிற்கும் 'வம்ப வேந்தர்' நிச்சமயாக வெற்றியுடைவர் என்று பாடலைப் படிக்கும் போது புலனாகின்றது. பெண்ணின் மூத்தோர்அதாவது இரத்த உறவினர் வாளும் கேடயமும் ஏந்திக் கழுவாததலையுடையராய் செருக்குடன் எதிர்க்கின்றனரேனும், 'ஜயோ, இவ்வழகிய நல்ல ஊர் என்னவாகுமோ தெரியாது' என்று ஏங்குகின்றார் புலவர். இத்தகைய பாடல்களை மகட்கொடை மறுப்பு, மகட்பாற் காஞ்சிஆகிய பிரிவுகளில் அடக்குவர் பின்வந்த இலக்கண ஆசிரியர்கள்.
இவ்வாறு பழைய மரபில் வந்த சில கிளைச் சமுதாயத்தினர் புதிய வேந்தருக்குப் பெண் கொடுக்கவும் மறுக்கும் சமுதாயமாற்ற நிலையில், புதிய வேந்தருக்குப் பக்கபலமாகப் பிரசாரஞ் செய்தனர் புலவர். கொள்ளையிலும் வணிக லாபத்திலும் கிடைத்த மிதமிஞ்சிய பொருட் செல்வத்தில் புலவருக்கும் உரிய “பங்கு” கிடைத்தது. புலவர், பாணர், அகவுநர், கூத்தர் முதவியோர் பல்வேறு வகைகளிலே மன்னர் பெருமையைப் புகழ்ந்து மக்கள் மத்தியில் அரசுக்கு ஆக்கந் தேடினர். பாணருக்குப் பொருள் வழங்குவதைப் “பாண்கடன்” என்று இலட்சியப்படுத்தினர் மன்னர், போர்க்களத்திலேயே கைப்பற்றிய செல்வப் பொருட்களைப் புலவருக்கு அள்ளி இறைத்தனர். பாவேந்தர் என்பது புற நானூறு, பதிற்றுப் பத்து முதவிய நூல் செய்யுட்களால் தெரியவருகின்றது.
நமது காலத்திலே முதலாளித்துவ சமூக அமைப்பில் வெகுசனப் பிரசார சாதனங்களான பத்திரிகை, வானொலி, திரைப்படம் முதலியன ஆளும் வர்க்கத்துக்குச் சாதகமாக உபயோகப்படுவதை நோக்கு பவருக்கு மேற்கூறிய உண்மை இலகுவில் விளங்கும். புலவர் செய்த நுண்ணிய பிரசாரப் பணியின் பண்பை இரு கூறாகப் பிரிக்கலாம். .
ஆண்ட மன்னரின் தோற்றம், வலிமை, உடையழகு கொடை முதலியவற்றைப் புகழ்தல், ஒருவழி; அம்மன்னரது குலப்பெருமையை விரித்து விதந்து கூறுவது மற்றொரு வழி. இவ்விரு முறைகளும் தொடர்புடையன. போரின் விளைவாகப் பல ஊர்கள் இரவு பகலாக எரிந்தன; கணவரையிழந்த பெண்கள் பலர்; வயல்கள், தோட்டங்கள், நீர் நிலைகள் பாழாயின. இவையாவும் வீரச் செயல்களாகப் புலவர் நாவில் உருமாற்றம் பெற்றன. போரிற் காணப்படும் குரூரங்களை அழகாக மாற்றி விடுகின்றனர். அக்காலப் புலவர்கள் தக்க உவமைகளைக் கையாள்வதன் மூலம் இந்த “ரஸவாத” த்தைச் செய்து முடிக்கின்றனர். ஓருதாரணம் பார்க்கலாம்:
“ விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடிதுறை நீரக் களிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்.
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் தோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத்
நுணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின் .
முருகற் கீற்றத் துருகெழு குருசில்..”
(புறம். 16: 4-12)
நெல்விளையுங் களனியைக் கொள்ளையூட்டி, வீடுகளின் மரமே விறகாகக் காவலுடைய நீர் நிலைகளிலே யானைகளைப் படிவித்து விளக்கமுண்டாக மூட்டப்பட்ட நாடு சுடு நெருப்பினது ஔிதான் செ க்கர் வானத்தைப் போலத் தோன்றுகின்றது. இதனைச் செய்து முடிக்கும் அசகாயனான மன்னனோ முருகக் கடவுளது சீற்றத்தையொத்த சினத்தையுடையவன். இவ்வாறு மன்னனைத் தெய்வத்தோடு ஒப்பிட்டும்,'நல்ல நாடு' கவாலித்து எரிவதைச் செக்கர் வானக் காட்சியுடன் ஒப்பிட்டும் புலவர் பாடும் பொழுது போரின் வெம்மையும் கொடுமையும் மறைத்து இயற்கை அழகைப் போல, ரசிக்கக்கூடிய தோற்றமாக அவை மாறிவிடுகின்றன. புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய நூல்களில் காணப்படும் பல செய்யுட்கள் அழிவின் அழகைக் காட்டுவனவே. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செ ழியன் படைகளுடன் காற்றென்னும்படி விரைவாகப் பரந்து சென்று பகைவர் நாடு கெடும்படி நெருப்பைப் பரப்பினான் என்று மதுரைக் காஞ்சி கூ.றும். அதே நூலிற் பிறிதோரிடத்திலே மன்னனது போர் வீரர் பகைவர் ஊரைச் சுடுகின்ற நெருப்பின் ஔியிலே பசுதிரைகளைக் காத்திருந்தவரை வெட்டி விட்டுப் பசுத்திரளைக் கவர்ந்து சென்றனர்' என்றுகூறப்படும். சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் என்னும் புலவர் சிறப்பித்துப் பாடும் பொழுது,
“எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை”
(புறம். 7 :7-9 )
“ஓளிறுவாள் அருஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” ( புறம்: 312 )
‘ஔிபொருந்திய வாளேந்திச் சென்று அரிய போரைச் செய்து யானைகளைக் கொன்று போதல் காளையாகிய மகனுக்குக் கடமை’ என்று தாய் வாக்காக இளைஞருக்கு இலட்சியமாக மூட்டினர் புலவர். இவ்விலட்சியத்தின் கொடு முடி போல அமைந்துள்ளது ஔவையார் பாடியதாகக் கொள்ளப்படும் புறப்பாடல் ஒன்று. தாயொருத்தியின் கூற்றாக அமைந்துள்ளது அது.
“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே”
(புறம்: 286 )
‘வெள்ளிய நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப் போலத் தன்னையொத்த இளைஞர் பலர் நிறைந்திருக்கவும், (உண்டாட்டின் போது) அப்பலர்க்கும் மேலாக எனது மகனுக்கு நீட்டித்தரப்பட்ட கள், அவனைக் காலில்லாத கட்டிலாகிய பாடையிற் கிடத்தித் தூய வெள்ளையாடையால் மூடுவியாதாயிற்று.’ என்பது பொருள். போருக்கு முன்னர் மன்னன் கள் வழங்குவது வழக்கம். மண்டையில் வழங்கப்படுவது பற்றிக் கள்ளினை மண்டை என்பர். அது ஆகுபெயர். அவ்வாறு மன்னனிடம் சிறப்பாகக்கள் பெற்ற தனது மகன், அம்மன்னன் பொருட்டுச் சாகும் வெற்றி பெறவில்லையே பாடையில் அவனைக் கிடத்தும் நிலை வரவில்லையே- என்று தாய் ஏங்குவதாகப் பாடல் கூறுகின்றது. “மன்னருக்கு உடம்பு கொடுத்தாரே மூத்தார்” என்று குறிக்கோள் சமைத்தவரும் அதனைப் பிரசித்தப்படுத்தியவரும் புலவரென்பதில் ஐயமில்லை. அதைப் போலவே தலைவன்- அடிமை என்னும் பாகுபாட்டின் அடிப்படையிலே மரபுமரபாகச் சிலர் மன்னனுக்காகச் சேவகஞ் செய்வதையும் சிறப்பித்துப் பாடினர் புலவர். குடிநிலையுரைத்தல் எனும் துறையின் பாற்பட்ட ஒரு பாடலாக ஒளவையார் பாடியது வருமாறு:
“இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர்
இனங்களிற் றியானை யியறேர்க் குருசில்
நுந்தை தந்தைக் கிவன்றந் தைதந்தை
எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன்
அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும்
உறைப்புகழ் யோலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவருவேலே.”
(புறம்: 290)
போர்ப்பறை கேட்டு மறவர்கள் குழுமினர். மன்னன் உண்டாட்டு ஒன்றினை நிகழ்த்தினான். அப்பொழுது புலவர் தனது கடமையைச் செய்கின்றார்: ‘மன்னனே! இக்கள்ளை முதலில் இவனுக்குத் தந்து பின்னர் நீ உண்பாயாக. இவன் தந்தைக்குத் தந்தை உனது தந்தை தந்தைக்குக் கண்ணிமையாது காத்து தச்சனால் ஆர்க்காலைச் சேர்த்து எறியப்பட்ட குடம்போலப் பகைவர் எறிந்த கலங்களைத் தான் தாங்கி நின்று மாண்டனன். அவன் பெயரைத் தாங்கும் இவனும் மழையைத் தடுத்துப் பாதுகாக்கும் குடைபோல உன்மீது குறிவைத்து எறியப்படும் வேலைத் தான் குறுக்கிட்டுத் தாங்குவான்; போர் பல கண்ட வீரப்புகழ் நிறைந்தவன் இவ்விளைஞன் என்று பாடுகிறார் புலவர். புறப்பொருள் வெண்பா மாலையிலும் இக்கருத்தையுடைய பாடலொன்று காணப்படுகின்றது. (பு. வெ. 19): இவ்வாறு தலைவனை உயர்த்தியும் அவனுக்குத் தலைப்பட்டு வாழ்ந்து மடிவது உன்னதமான குறிக்கோள் என்றும் ஒரு சமூக உணர்வை ஏற்படுத்தினர் அக்காலச் ‘சான்றோர்’ எனப்படும் புலவர்கள். (உண்மையில் அவரைச் சான்றோர் எனப் பிற்காலத்தவரே வழங்கலாயினர். வீரயுகத்திலே சான்றோர் என்னுஞ் சொல் போர் வீரரையே குறித்தது. காலக்கிரமத்தில் போரிற் புகழ் எய்திய தலைவர்கள் வீரராகவும் சான்றோராகவும் கருதப்படலாயினர்.) இவ்வுண்மையைப் பண்டைக் கிரேக்க இலக்கியவாயிலாகவும் அறியலாம்.
இப்புலவர்கள், மன்னரின் குலப்பெருமையையும் ஓயாதுரைத்து அவருக்கு நிலைபேறு தேடினர். புதிய மன்னரைத் தெய்வங்களுக்கு உவமித்துச் சாதாரண மக்களின் எல்லைசக்கு அப்பாற்படுத்தினர். முருகன், சிவன், மாயோன் பலராமன், மறலி முதலிய தெய்வங்களை யெல்லாம் மன்னரின் பண்புகளை விளக்க உவமித்தனர்.
“ஆலங் கானத் தமர்கடந் தட்ட
கால முன்பே”
(புறம் 23: 16-7)
என்று நெடுஞ்செழியனை இயமனுடன் ஒப்பிடுகிறார் கல்லாடனார்.
மன்னரின் குழப்பெருமையைப் பாடும்பொழுது, ஆக்கிரமிப் பையும் “முன்னோர் செயல்” முறைகளோடு இயைபுபடுத்திக் காட்டினர். உதாரணமாகப் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் கினளச் சமூகங்கள் பலவற்றை அழித்துப் பாண்டிய நாட்டை உருவாக்கிய மன்னருள் ஒருவன். ஏழு வேளிர்கிளைகளை ஆலங்கானத்துப் போரில் வென்றடக்கியவன்; அவனது போர்ச் செயல்களுக்கும் ஆதிபத்தியத் திற்குஞ் சமாதானங் கூறுவது போலப் பாடுகிறார் புலவியனார் என்னும்
புலவர்.
“முழுங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஓருதா மாகிய வுரவோ ரூம்பல்”
(புறம்:18)
‘கடலாற் சூழப்பட்ட பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தைத் தமது முயற்சியாற் கொண்டு, தமது புகழை உலகில் நிலைநிறுத்தித் தாமே ஆண்ட வலியோருடைய வழித்தோன்றினோய்’ என்று பாடும் புலவர் புதிய ‘வம்ப’ச் செயலுக்குப் பழைய மேற்கோள் காட்டி அனமதி காண்கின்றார். இவ்வாறு பழங்கால நினைவுகளையுஞ் சேர்த்து நிகழ்கால மன்னன் புகழ்பாடுதல் பொதுவாக அரசவைக் கவிஞர் யாவருக்குஞ் சிறப்பாக வீரயுகக் கவிஞரெல்லோருக்கும் அமைந்த பண்பு என்பது உலக இலக்கிய வரலாற்றில் நாம் காண்பதொன்று. பழைய வெல்ஷ் (Welsh) இலக்கிய வரலாற்றைப் பற்றி யெழுதும் ஓர் ஆசிரியர்மேல் வருமாறு குறிப்பிடுவர்.
“அரசவைகளில் வீற்றிருந்த வாய்மொழிப் புலவர்கள், இயன் மொழி வாழ்த்தாக மன்னர் புகழ் பாடினர். வெல்ஷ் மக்களின் இலக்கிய மரபும், இலக்கிய வெளிப்பாடும் முதன் முதலாகத் தெளிவான வடிவத்தில் இவ்வரசவாகைப் பாடல்களிலேயே காணப்படுகின்றன. மன்னரின் நிகழ்காலப் புகழுடன் அவர் தம் குலப் பெருமையையும் வமிசவழியும் புலவராற் பெரிதும் பேணப்பட்டன. இவற்றைக் கொண்ட பாடல்களே வரலாற்றுச் சான்றுகளாக அமைந்துள்ளன. அக்கால வரலாற்றசிரியர் அரசவைப் புலவரே; ஏனவே தான் இறந்தகாலமும் நிகழ்காலமும் பாடல்களில் இரண்டறப் பின்னிப் பிணைந்து காணாப்படுகின்றன. புலவர்கள் கூறும் சில குல முதல்வர்களின் பெயர்கள் கற்பனை போலத் தோற்றினும் அவற்றுள்ளும் வரலாற்று நிகழ்ச்சிகள் அடங்காமல் இல்லை.”
றேச்செல் புரொம்வீச் (Rachel Bromwich) என்னும் ஆசிரியை கூறுவன மனங்கொள்ளத்தக்கன. சங்க காலத்தில் புலவருக்குரிய பெயர்களில் ஒன்று அகவுநர் அல்லது அகவா. அவர்கள் பாடிய யாப்பே அகவற்பா என நிலைத்து விட்டது. அகவுநர் என்போர் யார்? உரைகாரரான நச்சினார்க்கினியர் நமசக்கு விளக்கங் கூறுகின்றார். “அகவரென்றார், குலத்தோரெல்லாரையும் அழைத்துப் புகழ்வரென்பது பற்றி: ஆகுபெயர்..... அகவிக் கூறலின் அகவலாயிற்று. இருசுடர் தொடங்கி இன்று காறும் வருகின்ற தம் குலத்துள்ளோர் புகழை அரசர் கேட்டதற்கு விரும்புவதரென்று கருதி (அகவர்) பாடுவரென்பது ஈண்டுக் கூறிற்றாம்.”
புலவர் பிறர் மனத்தையறிந்து அதற்கேற்பப் பாடும் திறன் படைத்தவர் என்று பழைய தமிழ்ப் புலவன் ஒருவனே சுருக்கமாகக் கூறியுள்ளான். “கொண்டது அறிக”(பொருந: 57) என்றால் ‘பிறர் மனத்துக் கொண்டதனைக் குறிப்பாய் அறிய வல்லாய்’ என்பது பொருள். இத்தகைய பிரசார வல்லமை படைத்த புலவர்கள் பழந்தமிழகத்திற் றோன்றிய புதிய அரசுகளின் ’புகழ் ஏந்திகளாக’ விளங்கினர். பழைய கிளை முறைச் சமுதாயங்களை நிர்மூலமாக்கித் தனியுடைமையின் மீது தனியாட்சி நிறுவிய அரசரைப் பாக்களிலே அமரராக்கினர். ஓருதாணரம்.
“கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண் மகன்”
(அகம்: 352)
“மிக்க வேகத்தினையுடைய குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினையுடைய அதியமான் அஞ்சியின் பழைய புகழை, நல்ல இசைகளை வரையறை செய்த பாட்டினால் நிலைநாட்டிய பாடகன்’ என்று நாகையார் என்னும் பெண்பாற் புலவர் பிறிதொரு புலவருக்கு “நற்சான்றுப் பத்திரம்” வழங்கியுள்ளார்.
இவ்வாறு புலவர் பிரசாரஞ் செய்வதற்கு வாய்ப்பாக அவர்களுக்குச் சமூகத்தில் இருந்த பெருமதிப்பாகும். மிகப் புராதன சமூகங்களிலே புலவர்களே சமய சடங்குகளைச் செய்த மாந்திரீகராகவுமிருந்தனர். நல்லது கெட்டது அறிந்தவராயிருந்தனர்; அதனாலேயே அறிவர் என அழைக்கப்பட்டனர். அவர் நாக்கிலே மந்திரசக்தி இருந்தது என மக்கள் நம்பினர்; பெண்களுக்கு வந்த நோயை அறிந்து சொல்லவல்ல கட்டுவிச்சியை “அகவன் மகள்” என்று பழம் பாடலொன்று (குறுந். 23) கூறும். இத்தகைய நம்பிக்கைய யினடியாகவே புலவரைப் “பொய்யா நாவினன்”, “செய்செந்நாவினன்”; “அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்”; “செந்நாப் புலவர்”; “பொய்யா மொழி” என்றெல்லாம் வழங்கினர். புலவன் மனம் நொந்து சினக்கப்பட்டவருக்குத் துன்பம் ஏற்படும் என்னும் நம்பிசக்கை பெரு வழக்கானதாகும். புலவன் அறம்பாடினால் அழிவுண்டாகும் என்னும் அடிப்படைக் கருத்தே நந்திக் கலம்பக வரலாறறுடன் தொடர்புடையது. புலவன் அறம்பாடினால் பாடப்பட்டவனுக்கு உடல் எரிவு ஏற்படுமென்றும், பாடப்பட்ட ஊர் வறண்டு போகுமென்றும் பண்டைய ஐரீஷ் (Irish) மக்கள் நம்பினர். இத்துணைச் சக்தி நிரம்பப்பெற்ற “அறிவர்” கூட்டம் அரசு தோன்றிய வரலாற்றுக் காலத்தில் அதன் “முழு நேரப் பிரசாரகராக” அமைந்தது. ‘நாம், நின்னைப் பழிப்போர் தலை சாயவும், புகழ்வோர் பொலிவு பெறவும் என்றும் பாடிப் பரவுவோம் உன்னை’ என்று சேழ மன்னன் ஒருவனை மூலங்கிழார் என்னும் அகவர் பாடுகிறார்.
“யாமேநின் இகழ்பாடுவோ ரெருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவு தோன்ற
இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும்”
(புறம்: 40)
இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது பண்டைய கிரேக்க, ஜெர்மானிய, கெல்திய சமூகங்களிலே அரசு உதயமாகிய வீரயுகத்திலே,புலவர்கள் மன்னர் குடை நிழலில் ஒதுங்கியதைப் போலவே தமிழகத்திலும் பாணரும், கூத்தரும், அகவரும் ஒதுங்கினர் என்னும் உண்மை உறுதிப்படுகின்றது. சில புலவர் சில மன்னருக்கு நெருங்கிய நண்பராயிருந்தனர். குறுநிலத் தலைவருக்கு நண்பராயிருந்தனர். பறம்புமலைத் தலைவன் இறந்தபோது அவன் மகளிர், கவிஞர் கபிலரிடம் ஓப்படைக்கப்பட்டனர் என்பது பழந்தமிழ்க் கதை. கிரேக்க காவியமான ஓதீசியில் (Odyssey) அகமெம்னன் என்னும் வீரன் போருக்குப் போகும் பொழுது தனது மனைவியாகிய கிளித்தை மெனஸ்திராவைப் புலவன் ஒருவனிடம் ஓப்படைத்து விட்டுப் போகிறான். இச்செய்திகள் யாவும் வீரயுகத்திலே ஆட்சிப்பீடத்திற்கும் அகவலருக்குமிருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன. சங்ககாலப் பகுதியிலே வீரரைச் சான்றோர் எனறனர்: சங்கமருவிய காலப் பகுதியிலே ‘சான்றோர்’என்னுஞ் சொல்லிற்கு ‘அறப்பண்புடையவர்’ எனும் கருத்தேற்பட்டது. பண்டைய வீரரை ‘ஹீரோ’ என்றனர் கிரேக்கர். காலப்போக்கில் ஹீரோக்கள் புகழ்பாடிய புலவரையும் ‘ஹீரோ’ எனலாயினர். ஓதீசியிலே அல்க்கி னூஸ் என்னும் மன்னன், அவைப் புலவனாகிய தெமொ தொக்கோஸ் என்பவனைக் காவியகர்த்தா ‘ஹீரோ’ என்றே அழைக்கின்றார்.
இவ்வாறு மன்னருடன் நெருங்கிய தொடர்புடைய புலவர்கன் நிரந்தரமாக அவைகளில் வீற்றிருக்கலாயினர். அரசு வளர வளரப் புலவர்தம் பெருமையும் கடமையும் அதிகரித்தன; புலவர் தொகையும் கூடியது. நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி தலைமையில் புலவர் அவையிருந்ததைப்போல புலவா் குழுக்களும் வேறு அவைகளில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள. இவையே பிற்கால மரபில் தமிழ்ச்சங்கங்களாகப் பேருருப் பெற்றன. சங்கச் சான்றோரின் “தமிழ்ப்பணி” குறித்துப் பெருமைப்படுகிறவர்கள் ஒன்றை நினைவு கூரலாம். பழைய தமிழ் இலக்கியம் எமக்குக் காட்டும் நாகரிகம் வானினின்றும் திடீரென வழுக்கி வீழ்ந்ததன்று. “யாதுமூரே யாவருங் கேளிர்” என்னுந் தத்துவ நோக்கானது கணியன் பூங்குன்றனார் என்னும் புலவரின் கற்பனையில் பிறந்ததன்று. குலமரபுகள் தனித்தனியாகக் குறுகிய வரம்புகளுக்குள் வாழ்ந்த நிலைபோய், அரசுகளும் தேச உணர்வும் தோன்றும் போதே ‘யாவரும் கேளிர்’ என்னும் பரந்தமனப்பான்மையும் உதிக்கின்றது. மற்றெக்காலப் பெருமாற்றங்களையும் போலவே சங்ககால நாகரிகமும் உக்கிரமான போராட்டத்தின்பயனாகும். அப்போராட்டத்தின் போது கணக்கற்ற படையெடுப்புக்கள்நடந்தன; ஊர்களும் கிராமங்களும் எரிபுகையில் மண்டின; வீடு வாசலிழந்த பல்லாயிரக்கனாக்கானோர் வெம்பி வெந்து புலம்பி சாம்பினர். அபலைகளின் ஒலமும் விதவைகளின் அவலமும் ஊர்களில்எதிரொலித்தன. துன்பமிக்க அப்போராட்டத்தை வழி நடத்தியதுஅக்கால வர்க்கப் போராட்டமாகும். இப்போராட்டம் புராதணப் பொதுவுடைமையிலிருந்து முதலாளித்துவம் வரைவரும் வர்க்கப் போராட்டமான சங்கிலிப் பின்னலின் ஒருபடியாகும். இதையுணராது கற்பனாவாதம் பேசுவது பழந்தமிழருக்கும் பெருமையன்று, எமக்குஞ் சிறப்பன்று.
வீர வணக்கம்
பழந்தமிழர் வழிபாட்டு முனறகளுள் வீர வணக்கமும் ஒன்று. போரிலே விழுப்புண்பட்டு வீழ்ந்திறந்த வீரரைத் தெய்வமாகப் போற்றினர். அவர்களைக் கல்லில் அமைத்து வழிப்பட்டனர்.
“ஓன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்ததெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.”
என்று பாடுகின்றார் மாங்குடிகிழார். பகைவர் முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து யானைகளைக் கொன்று வீழ்ந்துபட்ட வீரரது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது, நெல்லைச் சொரிந்து வழிபடும் தெய்வம் வேறொன்றுமில்லை என்பது பாடலின் பொருள். இதனால், வீரரைத் தெய்வமாகப் பரவுதல் எத்துணைச் சிறப்புடையதாயிருந்தது என்பது தெளிவாகின்றது. பொதுவாக நம்பிக்கைகளுக்கும் சிறப்பாகத் தெய்வ நம்பிக்கை முறைகளுக்கும் காரணங் காணுதல் இலகுவன்று. ஆயினும் தக்க காரணம் இருத்தல் வேண்டும் என்னும் உறுதியுடன் தேடின் ஓரளவாவது உண்மையை அணுக உதவியாயிருக்கும்.
வீர வணக்கமானது, திடீரெனத் தோன்றியதொன்றன்று. புராதனத் தமிழ் மக்களிடையே நிலவிய வேறு பல நம்பிக்கைகளுக்கும் இதற்கும் தொடர்புண்டு என நாம் நம்பலாம். பொதுவாகவே இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகள் வீர வணக்கம் தோன்றிய விளை நிலமாகும். தென்னகத்திலே இரும்புக் காலத்திற்கு (Iron Age) முன்பின்னாகக் காணப்படும் பெருங்கல் வளைவுப் புதைகுழிகள் (Megalithic Monuments) இறந்தவரை அடக்கஞ் செய்வதிலே அச்சமுதாயத்தினர் எத்துணை சிரத்தை காட்டினர் என்பதனைக் குறிப்பன. பெருங்கற்களைக் கொண்டு வட்டமாக வளைக்கப்பட்ட இடங்களையே அக்கால ‘மயானங்கள்’ எனலாம். ஆங்கு, தாழிகளிலோ அல்லது கல்லறைகளிலோ மனித எலும்புத் துண்டுகளும் இரும்பாயுதங்களும் மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. பெரும்பேர், சாணூர், அமிருத மங்கலம் போன்ற இடங்களில் புழைகுழிகள் காணப்படும்.2 தென்னகத்திலே இதுவரை கிடைத்த பொருள்களில் மிக முக்கியமான விஷயங்களைத் தெரிவிக்கும் ஆதித்தநல்லூரிலும் ஒரு பெரிய பழைய காலத்திய மயான வெளியிலிருந்து முது மக்கள் தாழிகளும் (Urns) அவற்றுடன் தங்கம், வெண்கலம், இரும்பு முதலியவற்றாலான அழகிய பானை சட்டிகளும் கண்டுபிடிக்கப் பட்டன.”3
இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது மிகப் பழங்காலத்திலிருந்தே இறந்தவரை அடக்கஞ் செய்வதிலும், அவர்களது தேவைக்காகப்பொருள்களைப் படைப்பதிலும் பண்டைக் கால மக்கள் மிகுந்த கவனம் செலுத்தினர் என்பது புலனாகும். நெடுங்காலங் கழிந்தபின்பு, அம்மக்களின் மனப்பாங்கைப் பூரணமாக அறிந்துகொள்வது கடினமே. ஆயினு!ம் கிடைக்கப்பெற்ற புதைபொருள்களிலிருந்து விஷயங்களை ஊகித்தும், சான்றோர் செய்யுட்களில் தாழி, அடக்கம் பற்றிக் காணப்படுஞ் சில செய்திகளை விளக்கிப் பொருள் கூறியும் அம்மனப் பாங்கினை ஓரளவிற்குப் புரிந்து கொள்ளலாம். பொதுப் படையாக ஒன்று கூறலாம். இறந்தவர்களுக்கும் தமக்கும்தொடர்பு அறவில்லை என்றே வாழ்ந்தவர்கள் நம்பினர். இவ்வுண்மையினைப் பழங்குடி மக்களிடையே நிலவும் நம்பிக்கைக்ளைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம். தென் அமெரிக்கஇந்தியருடைய நாகரிகத்தைப் பற்றி நூலெழுதிய காஸ்தென் என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
“ஓர் இந்தியன் இறப்பின் அவன் இல்லாது போய் விட்டான் எனமற்றையோர் கருதுவதில்லை, இறப்பானது வாழ்க்கையின் முடிவைக் குறிப்பதில்லை; ஒருவகை வாழ்க்கையிலிருந்து, பிறிதொரு நிலைக்குமாறுவதையே குறிக்கின்றது. அதைப் போலவே குழந்தையொன்று பிறந்ததும் அது புதிய உயிரொன்றின் தோற்றமாகக் கருதப்படு வதில்லை; மூதாதையர் ஒருவர் குழந்தையாகப் பிறந்துள்ளார் என்றே நம்புகின்றனர்.”4
புராதன மனிதன் இறப்பையும் பிறப்பையும் தொடர்புடைய னவாகவே நோக்கினான். ஒன்று மற்றொன்றாகவும் கருதப்பட்டது. இத்தகைய நம்பிக்கைக்கும் உயிர், கன்மம், மறுபிறவி ஆகியன குறிக்கும் எமது பிற்காலத் தத்துவத்திற்கும் ஒரு பெரும் வேறுபாடுண்டு. உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடு கூறினார் பிற்காலத்திலே சிலர்; உடல் அநித்தியமானது என்றும் ஆன்மா, அல்லது உயிர் நிரந்தரமானது என்றும் கூறினர். எனவே அழியும் உடலைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இதுவே கருத்து முதல் வாதத்தின் அடிப்படையாகும். ஆனால் புராதன மனிதனோ, அந்தளவிற்குப் பொருள் முதல்வாதி; பிரக்ஞை பூர்வமாக அல்ல, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில், அவன் உடம்பு வேறு உயிர் வேறு என்று பிரித்தறியும் நிலையிலில்லை. எனவே உடலையே உயிராகவும் மதித்தான். அதன் காரணமாகவே, ‘தாழி, கல்லறை முதலியவற்றுள் ஆயுதங்கள், உணவுப் பொருள்கள். கலங்கள் ஆகியனவற்றை வைத்தான்.
இவ்வாறு பார்க்கும் பொழுது புராதன அடக்குமுறைக்கும் மூதாதையர் வழிபாட்டிற்கும் நிரம்பிய தொடர்பிருப்பது புலனாகும். இவற்றுடன் சம்பந்தப்பட்டதே வீர வணக்கம் எனலாம். பொதுவாக இறந்த மூதாதையரைப் போற்றி அவருக்கு ஆவன செய்யும் முறையிலிருந்தே சிறிது பிற்பட்ட காலத்தில் போரிலே பட்ட வீரரை வழிபடும் முறை தோன்றியது,
வீர வணக்கமானது தமிழ் நாட்டிலே வீர யுகத்திலேயே பெருவழக்குற்றது என்று கருத இடமுண்டு. விரயுகம் என்பது போர்களின் மத்திமிலே தனி உடைமையினைடிப்படையில் தலைவரும் அரசுகளும் தோன்றும் காலம் எனலாம். எமது பழைய சான்றோர் செய்யுட்கள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. இவற்றிலே வீரவணக்கத்தின் இரு அம்சங்களைக் காண்கின்றோம்: சடங்கு சம்பந்தமானது ஒன்று. நினைவுச் சின்னம் சம்பந்தமானது இரண்டாவது. சான்றோர் செய்யுட்களிலே காணப்படும் செய்திகளுக்குத் தத்துவ விளக்கம் காண்பதுபோல அமைந்துள்ளது தொல்காப்பியச் சூத்திரம். புறத்திணையியலில் வெட்சித்திணைத் துறைகளைக் கூறுமிடத்து,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீரத்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிரூமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே”
என்று நடுகல் அமைப்பதற்குரிய வினையமைதிகள் ஆறனையும் ஆசிரியர் கூறுவார். யாவற்றிற்கும் வரம்பு கட்டி இலக்கணம் அமைத்த தொல்காப்பியர் பழந் தமிழரிடையே பெருவழக்காயிருந்த இவ்வழிப்பாட்டு முறைக்கும் இலக்கணம் வகுத்ததில் வியப்பெதுவுமில்லை.
(அ) காட்சி : போரில் இறந்த வீரனுக்கு நடுதற்கேற்ற கல்லைத் தெரிந்தெடுத்தல்.
(ஆ) கால்கோள் : அவ்வாறு தெரிந்தெடுத்த கல்லை எடுத்து வரலும், நடுதற்குரிய நாள் நிமித்தம் பார்த்தலும்.
(இ) நீர்ப்படை : எடுத்து வந்த கல்லினை நீரிலேகழுவுதல்.
(ஈ) நடுதல் : வீரன் வீழ்ந்துபட்ட இடத்திலோ அன்றி வேறிடத்திலோ கல்லினை நடுதல்.
(உ) பெரும்படை : கல்லிலே வீரனது பீடு பொறிப்பதும் மடைகொடுப்பதும் முதலியனவும்.
(ஊ) வாழ்த்துதல் : கல்லினைத் தொழுதல்
இறந்தவரைக் கல்லிலே அமைத்து வழிபடும் முறையானது, பண்டைக் காலத்தில் தமிழ் மக்களிடையே நிலவிய இழிவுவினைகள் பற்றிய நம்பிக்கைகளுடன் நெருங்கிய தொடா்புடையது எனக் கூறினோம். நடுகல் வழிபாடு தோன்றியதைப் போன்று கோயிற்கட்டிடக்கலையும் இழவு வினைகளை ஒட்டியே வளர்ந்திருக்கலாம் என அறிஞர் கருதுவர்.5 வட்டமான நிலப்படமுள்ள கோயில்களைக்கவனிக்கும்பொழுது, இவற்றின் தொடக்கம் பெருங்கல் வடிவுப்புதை குழிகளிலே அமைந்துள்ளது எனலாம். பிற்காலத்திலே வட்டமானநிலப்படம் உடைய கோயில்கள் புதைகுழிகளுடன் எத்தகைய தொடர்புமின்றிக் கட்டப்பட்டனஎன்பது உண்மையே. ஆயினும் பழைய தொடர்பினை நாம் முற்றிலும் மறந்துவிட முடியாது. சதுரமான நிலப்படமுள்ள கோயில்கள் சிலவும் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கல்லறைகள் மீது கட்டப்பட்டுள்ளன. ‘இவற்றைப் பள்ளிப் படை என்பர். சோழர் காலத்திலே பேரரசர், அவர்தம் குடும்பத்தினர் முதலியோருடைய புதைகுழிகளின் மீது கோயில்கள் கட்டப்பட்டன என்பதையும் நாம் அறிவோம். இவையாவும் வீர வணக்கத்தின் தொன்மையையும் முக்கியத்துவத்தையும் வற்புறுத்துவனவாயுள்ளன. நடுகல் வழிபாட்டு வினையமைதிகளான, கற்கோள், நீர்ப்படை முதலியன வீரர்க்கே மட்டுமின்றிப் பிற்காலத்தில் பிறருக்கும் ஏற்புடையதாயிற்றென்பது கண்ணகி வரலாற்றாலும் உணரப்படும். கற்புக், கடம் பூண்ட பொற்புடைத் தெய்வத்தின் படிவம் அமைத்தற் பொருட்டுக் கற்கொள்ளுதலை விரும்பியே, வடபேரிமயத்தை நோக்கிப் படை செலுத்தினன் சேரமன்னன் என்று பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலாய இலக்கியங்கள் கூறும்.
“கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து”
சிறப்புற்றதைச் சிலப்பதிகாரம் வருணிக்கும். எனவே வழிபாடு, வழிபடுமிடம் முதலியவற்றின் பரிணாம வளர்ச்சியில் கல்நட்டுப் பரவுதல் எத்தகைய பங்கை வகித்தது என்பதனை நாம் ஒருவாறறியலாம்.
இனி, நடுகல் வழிபாட்டினைச் சிறிது விரிவாக நோக்குவோம். தொல்காப்பியர் கூறியவற்றைப் பார்க்கும்பொழுது, இவ்வழிபாட்டு முறையைச் சில விதிகளுக்கேற்பவே கடைப்பிடித்தனர் என்பது தெளிவு. தொல்காப்பியரது வருணனையானது, பழங்குடி மக்களிடத்து இன்றுங் கண்ணாரக் காணப்படும் நடுகல் வழிப்பாட்டு முறையை ஒத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாம். அஸ்ஸாம் மாகாணத்துக் காஸி மக்கட் கூட்டத்தினரிடையே காணப்படும் நடுகல் முறை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.7 உலகின் வேறு பகுதிகளிலும் இவ்வழிபாட்டு முறையைக் காணலாம். தொல்காப்பியரது ‘இலக்கண’த் திறனும் நேர்மையும் எம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றது.
நடுகல்லானது செங்குத்தாக நாட்டப் பெற்ற கல்லாக விருந்தது; அக்கல்லிலே ஓர் உருவம் செதுக்கப்பட்டது; வீழ்ந்த வீரனை அது குறித்தது. காலப் போக்கிலே வீரனுடைய பெயர், அவன் வீழ்ந்துபட்ட சந்தர்ப்பம் முதவியனவும் அக்கல்விற் பொறிக்கப்ப்ட்டன. தென்னிந்தியாவிற் காணப்படும் பழைய நடுதற்களிலே ஆநிரைகவர்தலைக் காட்டுமுகமாக அது குறிக்கும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலே நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் ஒன்றில் ஆநிரை கவர்தலின்போது ஏற்பட்ட போரிலேயே அவ்வீரன் வீழ்ந்ததாகக் குறிக்கப்படும். பண்டைக் காலத்திலே பெரும்பாலான சண்டைகள் “மாடு பிடி” சண்டையிலிருந்து தொடங்கியது யாவருமறிந்ததே. பண்டைக் காலத்திலே பசுநிரைகளையும் எருது மந்தைகளையும் நிறையப் பெற்றிருந்தவனேசெல்வனாகக் கணிக்கப்பட்டான். அதன் காரணமாகப் பசுவுக்கும் எருதுவுக்கும் பொதுவாக வழங்கும் பெயரான ‘மாடு’ என்பது நாளடைவில் செல்வம் என்னும் பொருளையும் குறிப்பதாயிற்று.8 தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் மாடே அக்காலத்தில் செல்வப் பொருளாகக் கொள்ளப்பட்டு வந்தது. நாணயப் பழக்கம் ஏற்பட்ட பின்னரும், முன்னர் செல்வமாகவும் பண்டமாற்றுப் பொருளாகவும் விளங்கிய மாடு தொடர்ந்து செல்வம் என்.னும் பொருளில் விழங்கியது. செல்வத்தைப் பற்றிக் கூறவந்த பொய்யா மொழியர்;
“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவரக்கு
மாடல்ல மற்ற யவை” என்றார்.
இவ்வாறு அக்காலத்திலே செல்வப் பொருளாக மாடு அமைந்த காரணத்தினாலேயே அது சமுதாயத்திலே போருக்குக் காலாயமைந்தது.பசுவைக் கவருவோரும் கவருவோரைத் தடுக்க முனைவோரும் மூர்க்கமான போரில் ஈடுபட்டனர். புறநானூற்றுப் பாடல்களைக் கூட்டு மொத்தமாகப் பார்க்குமிடத்துக் கரந்தை, வெட்சி முதலாய திணைகளைச் சேர்ந்த பாடல்களே வீரத்தின் கொடுமுடியைக் காட்டுவனவாயமைந்துள்ளதைக் காணலாம். வீரயுகப் பாடல்களாகக் கொள்ளத்தகும் புறப்பாடல்கள் பலவும் “மாடுபிடி” சண்டையை மையமாகக் கொண்டனவே. மாடே, செல்வமாகவும், வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் இருந்ததால் அவற்றைக் காப்போர் தமது உயிரைக் கொடுக்கவும் பின்னிற்கவில்லை. வேறு மொழியிலக்கியங்களிலும் இதனைக் காணலாம். வீரம் விளைவதற்கான காரணமும் அதுதான். அவரே பெருவீரராகக் கருதப்பட்டனர். யாருக்கு நடுகல் வழிபாடு ஏற்பட்டது என்பதை அகப்பாடொன்றிலிருந்து அறியலாம்.
“அரம்போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.” 9
9. அகம்.67: 5-10
நெல்லிமரங்களையுடைய இடங்களில் இருளிலே கடுகிச் சென்று கூரிய முனையையுடைய பற்களையுடைய அம்பினையும் குறிபார்க்கும் பார்வையினையுமுடையவராய், தமது நிரையை மீட்கவேண்டி உக்கிரமான போரிலே வீழ்ந்துபட்ட மானமிக்க வீரர்களது பெயரையும் பெருமையையும் பொறித்து பாதைகளிலே மயிற்றோகை யணிந்து விளங்கும் நடுகற்கள் என்பது பாடற்பொருள். இங்கே நிரைமீட்கும் போரும் அதிலே தமது உயிரை யிழந்தவரும் கூறப்படுகின்றனர். அத்தகையோருக்கே நடுகல் உரியது.
“நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழத்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளோடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம்.”10
இதன் பொருள்: ‘கூரிய முனையுடைய நெடிய வேற்படையை யுடைய மழவர் போர் வென்று பசுக் கூட்டங்களை மீட்டு வெட்சியாரை மேட்டு நிலத்தே வீழ்த்தினர்; வில்லையே ஏராகக் கொண்ட சிறந்தஅம்பினையுடைய மறவர்கள் தமது வலிய ஆண்மையாலிட்ட பதுக்கைக் கண்ணுள்ள கடவுளை வழிபட்டதற்கு, அந்நடுகல்லில் மயிற்றோகைகளைச்சூட்டித் துடிப்பறையை யடித்து நெல்லாற் செய்த கள்ளொடு மறியறுத்துப் பலி கொடுக்கும், வழிப் போதற்கு இயலாத பிரிந்து செல்லும் பாதைகளையுடைய புலால் வீசும் அரிய காட்டுப் பாதை.’
இங்கே நடுகல்லிற்கு மயிற்பீலி முதலியன சூட்டுவதுடன் நெல்லாலாக்கிய கள்ளையும் செம்மறிக்குட்டியிறைச்சியையும் பலியாகப் படைப்பதைப் பார்க்கின்றோம்.
“நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்யின்.”11
என்று பிறருங் கூறுவது காண்க. இவற்றை நோக்கும்போது இறந்தவரைப் பேணிப் போற்றும் மனப்பான்மை நிலவியது புலனாகும். இவ்வாறு நடுகல்லானவர்கள் தம்மை வழிபடுவோருக்கு வேண்டும் ‘வரம்’ அளிப்பர் என நம்பினர். தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையுமுடைய அரிவையொருத்தி நாளும் தவிராமல் நடுகல்லைக் கைகூப்பித் தொழுது தனது கொழுநன் போரில் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டினாள் என்று அள்ளுர் நன்முல்லையார் என்னும் பெண்பாற் புலவர் பாடியுள்ளார். நடுகல்லாயினோர் குலதெய்வமாகவும், காவற் றெய்வமகவும் விளங்கினர். ஆநிரையைக் கண்ணுங் கருத்துமாகக் காத்தது போலவே தமரையுங் கண்காணிப்பர் என்பது நம்பிக்கை. எனவே, இந்நடுகற்கள் இறந்தவரின் உறவினராலோ, நெருங்கிய நண்பராலோ ஏற்படுத்தப்பட்டன என்று நாம் கருதவாம். மலரும், மதுவும், ஊனும், சோறும் நடுகற்களுக்குப் படைக்கப்பட்டதை நோக்குமிடத்து, பிற்காலத்திலே (இன்றுவரை) ‘தாழ்ந்த சாதியினர் எனக் கருதப்படுவோர்’ வேள்வி நடாத்தி மடைகொடுத்துச் சிறு தெய்வங்களை வழிபடுவது எமது நினைவிற்கு வரும். ஐயனார், மதுரை வீரன், இருளன், கறுப்பன், நொண்டி முதலியன நடுகற்றெய்வங்களை ஒத்தனவாயுள்ளன.13
பழந்தமிழரிடையே நிலவிய நடுகல் வழிபாடானது காலப்போக்கில் சமுதாய வளர்ச்சியை யொட்டிச் சில மாற்றங்களைப் பெற்றது. சமுதாயத்திலே உயர்ந்தோர் தாழ்ந்தோர் மேலோர் கீழோர் பெரியவர் சிறியவர் முதலாய பாகுபாடுகள் தோன்றி வளர்ந்ததைத் தொடர்ந்து மனிதரது நிலைமையைப் பிரதிபலிப்பது போலத் தெய்வங்களும் பெருந்தெய்வம் சிறுதெய்வம் எனப் பகுக்கப்பட்டன. இது வெட்டொன்று துண்டிரண்டான பாகுபாடன்று. ஆயினும் முக்கியமான பாகுபாடே. அதனைச் சிறிது விளக்குவோம்.
வீரயுகத்தின் முற்பகுதியினும் அதற்கு முன்னரும் தமிழ்ச் சமுதாயம் குலமரபுக் குழுக்களினடிப்படையில் அமைந்தது. இக்குழுக்கள் கூட்டு வாழ்க்கையிலீடுபட்டிருந்தன. குழுவிற்குள் வயது, அனுபவம் முதலியவற்றாலே தலைமை பெற்றோர்-முதலியவர்-இருப்பினும் பொதுவாகச் சமத்துவமும் ஒற்றுமையும் நிலவின. இத்தகைய குலங்கள், குடிகள் முதவியன முட்டி மோதிக் கலந்ததன் விளைவாகவும் போரில் அழிக்கப்பட்டதன் விளைவாகவுமே அரசுகள் தோன்றின. அதன் தோற்றம் தனியுடைமை, தனியாட்சி, தனியதிகாரம் ஆகியவற்றினடிப் படையிலமைந்தது. கூட்டு வாழ்க்கையிவிருந்த மக்கள் நடுகல் வழிபாட்டைக் குலமரபிற்கேற்பக்கைசக் கொண்டு வந்தனர். எனினும் புதிய அரசுகள் தோன்றியதும் குலமரபுக் குழுக்கள் நாகரிகத்தில் பின்தங்கியனவாகக் கருதப்பட்டன. அவற்றின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் முதவியன குறைவாக மதிக்கப்பட்டன. ஓருதாரண விளக்கம் பார்ப்போம். வீரயுகத்தின் பிற்பகுதியில் இளவரசன் ஒருவன் போரில் இறந்தால் அவன் துஞ்சினான் என்று மங்கல வழக்கினாற் கூறினர். அவன் துஞ்சிய (வீழ்ந்த) இடத்திலே அவனது புகழிற்கும் தகுதிக்கும் ஏற்பப் பெரிய பள்ளிப்படை எழுப்பியிருப்பர். அவ்வரசன் வீழ்ந்துபட்ட இடத்தையும் அவன் பெயரோடு சேர்த்து வழங்கினர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சியகிள்ளி வளவன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி முதலியன அத்தகைய சில பெயர்களாம். சோழப் பேரரசு நிலவிய காலத்திலே ஆதித்தன் போன்றாரது கல்லறைகளுக்கு மேல் ஆலயங்கள் கட்டினர்.
பின்தங்கிய சமூகங்களில் வீழ்ந்து பட்டவர்கள், ‘அநாமதேய’ங் களாய்த் தெருவோரத்திலும், காட்டுவழியிலும் ஊர்புறத்திலும் ஆங்காங்கு நடுகற்களாக நின்றனர்; கிராம தேவதைகளாக மாறினர். இப்பொழுது தமிழ் நாட்டிற் பலவிடங்களிலும் காணப்படும் ஐயனார் கோயில்கள் இச்சிறு தெய்வ வழிபாட்டை ஓட்டியெழுந்தவையே. நடுகல் வழிபாட்டுடன் தொடர்புடையதே இது.14 சிறு தெய்வங்கள் அச்சந்தருவனவாயும், கொடியனவாயும் பலி, மடை முதலியன கொடுத்துத் திருப்திப்படுத்த வேண்டுவனவாயும் கருதப்பட்டன. கீழுலகத் தெய்வங்களாக இவை விளங்கின (Spirits of the Underworld). சான்றோர் செய்யுட்களிலே நடுகல் வருணிக்கப்படுமிடத்துச்சில சமயங்களில் கற்களிடையே பாம்பு குடிகொள்வதாகக் கூறப்படும். இது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது புராதன கிரேக்க சமயச் சடங்குகளை ஆராய்ந்த ஜேன் ஹரிசன் (Jane Harrison) என்னும் அம்மையார் இதுபற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்.
“இறந்தவருக்கும் பாம்பிற்கும் தொடர்பு கூறப்படுவதன் காரணத்தைக் காண்பது கடினமன்று; நிலத்துவாரங்களிலிருந்து வருவதும் போவதும் அந்த ஜந்துவின் சுபாவம். பழைய கல்லறைகளிலே அது காணப்பட்டிருக்கலாம். புளூத்தார்க் என்னும் ஆசிரியர் கூறுவதைப் போல இறந்த மனிதனின் முதுகெலும்பு பாம்பைப் போல தோற்றியிருக்கலாம். இறந்தவருக்கும் பாம்பிற்கும் தொடர்பு கூறுவதுகிரேக்கர் மட்டுமல்லர். பேராசிரியர் பிரேசர் (Frazer) ) கூறுவது போல, ஆபிரிக்க மக்கள் கூட்டத்தினர் சிலர், இறந்த மனிதன் பாம்புருவிலேதனது இல்லத்திற்கு வருகின்றனஎன்று நம்புவர். இதன் காரணமாக அவர்கள் நாகங்களுக்குப் பால் வார்த்துப் பயபக்தியுடன் நடந்துகொள்வர்.15
ஹரிசன் அம்மையார் கூறுவது எமக்குப் புதியதொன்றன்று. பழங்காலத்திலிருந்தே நாகவழிபாட்டிலும் ஈடுபட்டு வந்த திராவிடா் மத்தியிலும் இத்தகைய நம்பிக்கைகள் வழக்கிலிருந்தன. ‘தாழ்ந்த மக்கள்’ தாழ்ந்த தெய்வங்களை வழிப்பட்டனர். அதே சமயத்தில் உயர்ந்தோர் ‘உயர்ந்த’ தெய்வங்களை வழிபடலாயினர்.
இதனை இன்னொரு வகையாகவும் நாமுணரலாம். இன்று நாம் தேவர்களின் உறைவிடமாகக் கருதும் மேலுலகத்திற்கே சான்றோர்கள் அல்லது வீரர்கள் மரணத்தின் பின் செல்வர் என்பது பண்டைய நம்பிக்கை. வீரசுவர்க்கம் என்று பிற்றை நாளில் இதனைக் குறிப்பிடுவர். வீரசுவர்க்கத்தைக் குறிக்கும் பழந்தமிழ்த் தொடர்கள் வருமாறு:
“உயர்ந்தோர் உலகம்; மேலோர் உலகம்; உயர்நிலை உலகம்; அரும்பெறல் உலகம்; தொய்யா உலகம்; வாரா உலகம்; பெரும் பெயர் உலகம்; தேவர் உலகம்.”
இதன் பொருள்: ‘புலவராற் பாடப்படும் புகழுடையோர் ஆகாயத்தின்கண் சாரதியினாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவார் என்று சொல்லுவர் அறிவுடையோர்.’
இவ்வுண்மையை நாம் அதிகம் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. வர்க்கப் பாகுபாடுள்ள சமுதாயந் தோன்றிய காலந்தொட்டே ‘உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ற ஒரு நியதி நிலைத்துவிட்டது. அதற்கேற்ப, மறு உலகமும் ‘உயர்ந்தோர் மாட்டே’ என்பது கூறாமலே போதரும்.
பழந்தமிழிலக்கியத்திற் காணப்படும் வீரசுவர்க்கமானது அதாவது உயர்ந்தோருலகமானது, பண்டைய வடஜெர்மானிய பழமரபுக் கதைகளிற் (Myths) காணப்படும் ‘வல்ஹல்லா’ (Val-halla) என்பதை ஒத்துளது, வல்ஹல்லா என்றால் (போரில்) இறந்தவர் மண்டபம் என்று பொருள். ஜெர்மனிய பழமரபுக் கதைகளிலே அம்மண்டபத்தைப் பற்றிய மோகனமான வருணனைகள் உள. காலையும் மாலையுமற்ற அம்மண்டபத்துள் சுத்த வீரர்கள் ஓயாது களித்துக் கொண்டிருப்பர். ஒதின் என்பான் அங்கு தலைமை வகிப்பான். ‘வல்க்கிறீஸ்’ எனப்படும் கன்னிப் பெண்கள் வீரருக்கு மனமுவந்து உபசாரஞ் செய்து கொண்டிருப்பர். இத்தகையதொரு நம்பிக்கை எமது நாட்டிலும் நிலவியதாகத் தெரிகின்றது. போர்களத்தே வீழ்ந்துபடின் வீரர்புகும் துறக்க வுலகத்துக் குற்றமில்லாத மகளிரை மணந்து எல்லையற்ற இன்பம் நுகரலாம் என்ற கருத்தைச் சாத்தந்தையார் பாடியுள்ளார்.16
“...............................படினே
மாசின் மகளிர் மன்றஎன்றும்
உயர்நிலை யுலகத்து நுகர்ப.”
இவற்றையெல்லாம் கூர்ந்து கவனிக்கும் பொழுது, தலையாய வீரர்களே உயர்ந்தோருலகஞ் செல்லுந் தகுதியுடையவராய்க் கருதப்பட்டிருப்பர் எனத் துணிந்து கூறலாம். சமூக அடிப்படையில் இதனை நோக்கின் பல செய்திகள் புலப்படும். ஏனெனில் தலையாயவீரராவோர் தலைமக்களாயுமிருந்தனர். அதாவது, வேளிர், கிழார், அரசர் போன்றவரே புகழ்பெற்ற வீரராயிருந்தனர். எனவே அவ்வுயர் குடிகளிற் பிறந்து புகழ்பெற்றவரே மேலுலகஞ் செல்லப் பெரிதும் தகுதியுடையவர் எனக்கொள்ளப்பட்டனர். போரில் இறந்த பவ சாதாரண மறவரும் வீரரும்தம்மை வழிபடுவோரைப் பாதுகாக்கும் சிறு தெய்வங்களாக (Tutelary Spirits) மண்ணுலகிலேயே கல்லாகவும் மரமாகவும், கற்குவியலாகவும் மண் படிவங்களாகவும் நின்றனர் போலும். முன்னர்க் கூறிய ‘வல்ஹல்லாவும்’ யாவரும் சென்று சேரசக்கூடிய, ‘அடையா நெடுங் கதவம்’ உள்ள மண்டபமன்று. தகுதி நோக்கியே அனுமதி கிடைத்தது; அழைப்பு வந்தது. எல்லிஸ் டேவிட்ஸன் அம்மையார் கூறியுள்ளது போல17 “ஒதினுடைய மண்டபத்திலே வாசஞ் செய்பவர்கள் அரசகுடும்பங்களைச் சேர்ந்த வீரர்கள், மன்னர்கள், சிறப்புமிக்கப் பிற தலைவர்கள் ஆகியோரேயாவர். ஸக்சோ (Saxo) என்னும் மத்திய கால ஐரோப்பிய இதிகாசகாரனும் இக்கருத்தையே கூறியுள்ளார். “வடிவேல் எறிவதும் வரிவில்லேந்துவதும் மன்னர்தம் குமரர்க்கன்றி மற்றவர்க்காகுமோ? போர்த் தொழில் உயர்குடிப் பிறந்தாரது தனிச்சிறப்புரிமையாகும்; தொல்குடிப் பிறப்பினரே போரினை நடத்துபவர்கள்.” நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே இப் பெயர்கள்அமைந்துள்ளன. உதாரணமாகப் பெயர்ச்சாத்தான்18 என்றொரு தலைவன் அழைக்கப்படுகின்றான். நீண்ட புகழையுடைய சாத்தன் என்பது பொருள். பெரும் பெயர் உலகம்19 என்பது வீரசுவர்க்கத்தின் பரியாயச் சொல். இரண்டவனுக்கும் உள்ள உறவு வெளிப்படை. இவ்வுலகத்திலே வாழும் புகழாளர்களே மறுமையிலும் புகழுலகில் வாழ்பவர் என்பது நம்பிக்கையின் அடிப்படை. புகழ் தலை மக்களது தனிச் சிறப்புரிமையாயிருந்தது. பாணர் பொருநர், அகவுநர் அக்காலப் புலவரெல்லாம் தலை மக்களைச் சார்ந்து அவர் வழி நின்றனர்;அவர்தம் புகழையே நாத்தழும்பப் பாடினர். புலவராற் பாராட்டப்படும் பெரு மக்கள் நேரே மேலோர் உலகம் செல்லுவர் என்னும் நம்பிக்கையும் நிலவியது.
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்ப…........”20
இதுகாறுங் கூறியவற்றால், வீரவணக்கம் என்பது பழந்தமிழர் வழி பாட்டுமு முறைகளில் ஒன்று என்பதும், அது பண்டையத் தமிழரின் இழவு வினைகள் பிரேத அடக்கமுறை முதலியவற்றுடன் தொடர்புடையதென்பதும், போரிலே வீழ்ந்துபட்டவரை வணங்கும் வழக்கம் காலகதியில் சிறு தெய்வ வணக்கமாக மாறியது என்பதும், இது சமுதாய மாற்றத்தை அடிநிலையாகக் கொண்டது என்பதும், உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்னும் கொள்கைக்கு ஏற்ப தெய்வ உலகமும் மாறியது என்பதும் பெறப்படும். எமது பழைய இலக்கியங்களில் எத்தனையோ சமுதாய உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. குறுகிய மனப்பான்மையை விடுத்து அவற்றைக் கண்டறிதல் எமது கடமை.
பேய்மகளிர்
பாரதியார் படைத்த பாஞ்சாலி சபதத்திலே திரெளபதை ஓரிடத்திற் பின்வுருமாறு கூறுகின்றாள்.
“பேயாசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.”
இக்கூற்றிலே பேய்களுக்கும் பிணத்திற்கும் ஒரு தொடர்பு கூறப்படுகின்றது. .
“பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்.”
என்று காரைக்காலம்மையாரைப் போற்றுகின்றது திருத் தொண்டத் தொகை.
செத்த பிணத்தைத் தெளியா தொருபேய்
சென்று விரல்சுட்டிக்
கத்தி யுறுமிக் கனல்விட் டெறிந்து
கடக்கப் பாய்ந்துபோய்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப்
பலபே யிரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு நட்டம்
பெருமா னாடுமே.”
என்று மூத்ததிருப்பதிகத்திலே பேயோடாடும் சிவனைப் போற்றிப் பரவுகின்றார் பேயார். சுடலைமாடன் வில்லுப்பாட்டிலே,
“பிச்சு நல்ல பிணத்தையெல்லாம்
மேலெடுத்துப் போட்டுக்கொண்டான்
பிச்சுப் பிச்சுத் தின்னலுற்றான்
பேய்களுக்கு விருந்தளித்தான்
தோளதிலே சிலது பிணம்
தொங்க மாலை போட்டுக் கொண்டான்
கையதிலே சிலது பிணம்
கட்டியாக எடுத்துக் கொண்டு
வாயதிலே ஊன் வடிய
வாரானே சுடலைக் கண்ணு”
என்று பிண நாற்றம் வீசவரும் சிவன் மகன் சுடலைக் கண்ணுவைக் காண்கின்றோம். .
பேச்சியம்மன் திருவடிவங்கள் பாண்டிய நாட்டின் சில பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலே கழுகுமலைக்கு அணித்தாகப் பேச்சியம்மன் மலையொன்றும் இருக்கிறது. அங்கு குழந்தையொன்றைக் கடிக்கும் கோலத்தில் பேச்சியம்மன் காணப்படுகின்றாள் என்பர். பேச்சிமுத்து, பேச்சியம்மாள் முதலிய பெயர்கள் இன்றும் தமிழ் மக்களிடையே பெருவழக்காயுள்ளன.
இவையெல்லாம் பிற்கால வழக்குகள், என்று நாம் கருதல் கூடுமாயின் தமிழ் மக்களின் மிகப் பழைய இலக்கியமான சங்கநூல்களுக்குப் போவோம்.
“களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி
விழக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்
குடரத்தலை மாலை சூடி யுணத்தின
ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் புலவென.
உருக்கெழு பேய்மக ளயர்”1
என்று புறநானூற்றுப் புலவர் கல்லாடனார் பாடியுள்ளார். பன்றியின் கோடு போன்ற வெள்ளிய பற்களாற் கடித்து ஈர்த்து, தசையோடு கலந்த வெள்ளிய கொழுப்பைத் தின்று சுவை காண்பவளாய், குடர்களைத் தன் தலையில் மாலையாக அணிந்து, ‘யாம் நிரம்ப உண்ணவும் தின்னவும் குறையாதவாறு மிக்க பிணங்களாகிய பெரிய வளங்களைக் கொடுத்த அரசன் பல்லாண்டு வாழ்வானாக’ என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் குரவைக் கூத்தாடுவதை நம் கல்லாடனார் காட்டும் ஓவியத்திற் காண்கின்றோம். புறநானூறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, திருமுரு காற்றுப்படை முதலிய பழந் தமிழிலக்கியங்களிலே இத்தகைய செய்திகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. தசையும் கொழுப்பும், குருதியும் குடரும் உண்டு, குரவைக் கூத்தாடும் பேய்மகள் அச்சத்தைத் தரும் வகையில் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றாள். பேய் மகள் சங்ககாலப் புலவன் கற்பனையிற்றோன்றிய பாத்திரம் என அமைதி காண்போமா? அல்லது பழந்தமிழ் மக்களின் மூட நம்பிக்கைக்கு உதாரணமாகவிருக்கிறது எனச் சமாதானங் கூறுவோமா? அல்லது உண்மையில் அது பேயைக் குறிக்கிறது என விளக்கம் விளம்புவோமா? உன்னதமான கருத்துக்கள் சிலவற்றையும் சங்க இலக்கியங்களிற் காண்கின்றோம். பிற்காலத்திலே கொல்லாமை நமது சமய அடிப்படைகளிலே ஒன்றாக அமைந்துவிட்டது. இந்நிலையிற் சங்க இலக்கியத்திலே ஆங்காங்கு காணப்படும் குரூரமான இப்பேய்மகள் யார் என்று அறிய முற்படுவது பயன்தரும் முயற்சியாகும் என்பதில் ஜயமில்லை.
“பேய்மகள் பற்றிச் சங்ககாலப் புலவர்தரும் செய்திகள் சிலவற்றை முதலிற் பார்ப்போம்.
“களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூவுங் கூகையோடு பேழ்வாய்
ஈமவிளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு சுடுகாடு”2
காடுபடர்ந்து கள்ளிமிகுந்து பகற் காலத்திலும் கூகைகள் கூவும் சுடுகாட்டிலே பிணஞ்சுடு தீ கொழுந்துவிட்டெரியும்; அங்கு அகன்ற வாயையுடைய பேய்மகளிர் காண்போர்க்கு அச்சம் உண்டாகும் முறையில் இயங்குவர் என்று பாடுகின்றார் கதையங் கண்ணனார்.
“பாறுபடப் பறைந்த பண்மாறு மருங்கின்
வேறுபடக் குரல வெவ்வாய்க் கூகையொடு
பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி
விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்
களரி விளக்கின் கால்பெயரத்தாடி
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு………………………………”
முற்றவும் கெட்டுத் தேய்ந்தழிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில், வேறுபட்ட குரலினையும் வெவ்விய வாயையுமுடைய கூகையொடுங் கூடி, பிணங்களைத் தின்னும். நரிகள் தசையொட்டிய பற்களையுடையவாய்த் தின்றுகொண்டிருக்க, பேய்ப் பெண்டிர். பிணங்களைத் தழுவிப் பற்றிக் கொண்டு, வெள்ளிய தசையைத் தின்றதனால். புலால் நாறும் மெய்யினை யுடையராய்ப் பிணம் வைத்துச்சுடும் களர் நிலத்தில் காலைப் பெயர்த்து வைத்துக் கூத்தாடும்சுடுகாட்டின் சித்திரத்தை நமக்குக் காட்டுகின்றார், காவிட்டனார்.
“பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி
னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி
ரிணையொலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணையூப மெழுந்தாட
வஞ்சுவந்த போர்க்கள(ம்)”4
போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைத் தலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவள் என்று பாடுகின்றார் மாங்குடி மருதனார்.
இத்தகைய பாடற் பகுதிகளிலிருந்து நாம் சில செய்திகளை அறிய முடிகின்றது.
1. பேய் மகளிர், காண்போர்க்கு அச்சத்தைக் கொடுப்பவர்.
2. அவர் பிணந்தின்பவர்; குருதி குடிப்பவர்.
3. சுடுகாட்டை விரும்புபவர்.
4. மிருகங்களின் பிணத்தையும் தின்பவர்; குடரை மாலையாகப் போடுபவர்.
5. கூத்தாடுபவர். (துணங்கை)
பேய்மகளிரைப் பாடும் சங்கச் செய்யுட்களிலிருந்து மேலும் பல செய்திகளை நாம் அறிகின்றோம். எனினும், முன்னர் கண்டவையே முக்கியமானவை எனக் கொள்ளலாம். இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, புராதன மக்கட் கூட்டத்தினரிடையே வழங்கிய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றின் துணையுடன் இத்தகைய பேய்மகளிரின் செயல்களுக்கு விளக்கங்காண முயலுவோம்.
முதன் முதலிலே, பேய் என்று பாடிய பழங்காலப் புலவன் யாது கருதினான் என்றறிய முயலுதல் பொருத்தமாகும். பெரிய புராணத்திலே காரைக்காலம்மையார் பெற்ற பேய்வடிவத்திற்கு விளக்கங்கூறும் உரைகாரர் மேல் வருமாறு குறிப்பிட்டுள்ளார். ,
“பேய்வடிவு- வாயுவவுடம்புடன் கூடித்திரிந்து மக்களை அலைத்து வரும் பேய்வடிவமன்று. அவை, ஐம்பூதச் சேர்க்கையாலாகிய உடற்கூட்டில் ஏனைப் பகுதிகள் மறைய வாயு ஒன்றுமே மிகுத்துக் கண்ணுக்குத் தோன்றாவகைதிரியும் பாசவுடம்புகள். இங்கு அம்மையார் வேண்டிப் பெற்றது, மானிட உடம்பினுள் ஏனையவை ஒழித்து எலும்புக்கூடு ஒன்றுமே காணப்பெற்றதும், காற்றுப் போற் கடிதுசெல்லும் தன்மை வாய்த்ததும், மண் என்ற ஓரு பூதச் செயல்மிகுந்த எலும்பு வடிவாயினும் களிம்பு நீங்கிப் பொன்னான செம்பு போலப் பாச நீக்கித் தூய்மையாக்கப்பட்ட சுத்தமாயாவுருவம் வாய்ந்ததும், ஆனால் மக்கள் கண்ணுக்குப் புலப்படுவதுமாகிய ஓர் ஔி பெற்ற திருவுடம்பு என்க”5
காரைக்காலம்மையர் பாசமாம் பற்றறுத்துச் சிவனருளாற் பெற்ற உடம்பு ‘இயலும் இசையும் பாடுதற்குரிய, வாக்கு முதவிய புறக்கரணங் களையும், மனம் முதலிய உட்கரணங்களையும் உடைய திருவடிவம்,’ என்பது உரைகாரர் கருத்து. ஔியுருவான மானவயாக்கை என்றுங் கூறுவர். ஆனால், சாதாரணமான பேய்களோவெனின் வடிவற்ற வாயுவுடம்பு அல்லது சூக்கும உடம்பு உன்டயன என்பது கருத்தாகும். அதுவே பொதுமக்கள் நம்பிக்கையாகவும் நிலவி வருகின்றது. சிவனருளால் காரைக்காலம்மையார் ஒளியுடம்பு பெற்றார் என நாம் அமைதி காணலாம். ஆனால், அத்தகைய சமய நம்பிக்கை நிலவாத காலத்திலே சுடுகாட்டிற் போய்த்தழுவிய பேய்மகள் சூக்கும வடிவமின்றிச் சாதாரண மானிடவுடம்பு பெற்றிருந்ததையே பழைய இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன, எனவே, சங்க இலக்கியங்கள் காட்டும் பேய்மகள் தூல உடல் பெற்றிருந்ததாகவே நாம் கொள்ள வேண்டும். அவ்வாறாயின் பேய் என்னும் சொல்லுக்கு வழக்கமாக நாம் கூறும் பொருள் இங்கு பொருத்தமாகாமற் போகின்றது. சங்க இலக்கியங்கள் காட்டும் பேய்மகளும் ஒரு காரைக் காலம்மையாரைப் போல, மக்கள் கண்ணுக்குப் புலப்படும் உடம் பினையே பெற்றிருந்தாள். அவள் உருவற்ற ‘ஆவி’யுமல்லள்; தெய்வ அருள் பொருந்தியவளுமல்லள். அப்படியாயின் பேய் மகள் என்பவள் யார்?
பேய்மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது ‘கொடிய’ செயலையும் கண்டு அக்கால மக்கள் அஞ்சினர் என்பது பாடல்களினின்றும் புலனாகின்றது. எனவே, பேய் மகளிர் பற்றியும் அவர்களுக்கிருந்த வல்லமை பற்றியும் மக்கள் சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகின்றது. அந்த நம்பிக்கையைப் பற்றிநாம் அறிந்து கொண்டாலன்றிப் பேய் மகளிர் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், நம்பிக்கையை விளங்கிக் கொள்வதற்குச் செயல்களே ஆதாரமாகவுள்ளன. புராதன மக்களின் நம்பிக்கைகளை, ஆராய்ந்தவர் பலரும் இவ்வுண்மையை வற்புறுத்தியுள்ளனர். சிமித் என்பார் இதுபற்றிக் கூறியுள்ளது மனங்கொளத் தக்கது.
“புராதனச் சமயங்களின் ‘சித்தாந்தம்’ கட்டுக் கதைகளிலேயே தங்கிமிருந்தது. இக்கட்டுக் கதைகள், சடங்குகளிலிருந்தே (riturl) எழுந்தன. சடங்குகள் செய்தல் புராதன மக்களுக்கு இன்றியமையாததாயிருந்தது. ஆனால், கட்டுக் கதைகளில் நம்பிக்கை வைப்பது தனிப்பட்டவரைப் பொறுத்திருந்தது. எனவே, புராதன சமயங்களைப் பற்றி அறிய முனையும் ஒருவர் கட்டுக்கதைகளை விட்டுச் சடங்குகள் அல்லது மக்களின் வழக்கங்கள் ஆகியவற்றை ஆராயத் தொடங்கல் வேண்டும்.”6
அக்காலத் தமிழ் மக்கள் பேய்மகளிரின் சக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று கூறிவிடின் ஆராச்சி தோன்ற இடமில்லாது போய்விடுகின்றது. பேய்மகளின் செயல்கள் ஏன் அவ்வாறு அமைந்தன எனக் கேட்டால் காரணகாரியத் தொடர்புடன் கருத்து வளர இடம் ஏற்படுகின்றது.
பேய்மகளிர் செயல்கள் சங்ககாலச் செய்யுட்களிலே குறிப்பிடத்தக்களவு தெளிவாகவும் விவரமாகவும் வருணிக்கப் பட்டுள்ளன என்பது உண்மையே. எனினும், சங்க இலக்கியங்களாக இன்று நாம் கொள்ளும் செய்யுட்கள் சில ‘இலக்கிய மரபு’களுக் கிணங்கவே இயற்றப்பட்டன என்பதையும், பேய்மகளிரின் செயல்கள்சமயச் சடங்குகள் முதவியவற்றைப் பற்றிக் கூறுவதையே தமது பிரமதான நோக்கமாக அவை கொண்டிருக்கவில்லை என்பதனையும் நாம் மறத்தலாகாது. வடமொழி வேதங்களையடுத்து வேள்விக் கிரியைகள் (சடங்குகள்) பற்றிக் கூறும் பிரமாணங்களைப் போலல்லாது சங்கச் செய்யுட்கள் இலக்கியங்களே. எனவே, பேய்மகளிரின் சடங்குகள் தற்செயலாவே அவற்றில் இடம் பெற்றுள்ளன என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்வது நலம். அவ்வாறாயின் பேய்மகளிரின் செயல்களைப் போல வேறு மக்கட் கூட்டத்தினரிடையே காணப்படின் அவற்றையும் நாம் சேர்த்து ஆராய்தல் பொருத்த முடையதாகும். பழந்தமிழரைப் போலப் புராதன வாழ்க்கை நிலையிலிருந்த மக்கட் கூட்டத்தினர் சிலர் மிகச் சமீப காலம்வரை அந்த நிலையிலிருந்திருக்கின்றனர். அவர்களிடத்து இத்தகைய வழக்கங்கள் காணப்படுகின்றனவா? காணப்பட்டால் எமது பழைய செய்யுட்கள் உண்மையே கூறின என்பது முற்றிலும் உறுதிப்பட்டுவிடுமல்லவா? அதற்குச் சான்றுகள் இல்லாமலில்லை.
அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தோனீசியா முதலிய தேசங்களிலே வாழும் திருந்தாத-நாகரிகங் குறைந்க மக்கட் கூட்டத்தினரிடையே பெண் மந்திரவாதிகளே பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர்.7 சைபீரியாவிலும் ( ரஷ்யா) ஒரு காலத்தில் பெண் மந்திரவாதிகளே இருந்தாகச் சில ஆராய்ச்சியாளர் கூறியுன்ளனர், பெண்களுக்கே முதன் முதலில் மந்திர சக்தி அளிக்கப்பட்டதாக அங்கு வாழ்ந்த மக்கள் குலங்கள் நம்பியதாகத் தெரிகிறது.8 புராதன மங்கோலியப் புராணக் கதைகளிலிருந்தும் பெண்களே நோய் தீர்க்கும் மாந்திரீகராக இருந்தனரெனத் தெரியவந்துள்ளது.9 வேறு பல மக்கட் கூட்டத்தினரிடையே ஆண்கள்மாந்திரீகராகக் கடமையாற்றும்போதும் பெண்ணுடையையணிந்து பெண்களைப்போல நடந்து கொள்கின்றனர்.10 முன்னொரு காலத்திற் பெண்களே அச்செயல்களைச் செய்தனர் என்பதை அது காட்டி நிற்கும்என ஆராய்ச்சியாளர் கருதுவர்.
இவ்வாறு பெண்கள் மந்திர சக்தி படைத்தவராக விளங்கும் மக்கட் கூட்டங்களிலே நடப்பதென்ன? மடகஸ்காரிலுள்ள தனலா என்னும் மலைச்சாதியினர் மத்தியிலே மந்திரவாதிகள் இருக்கின்றனர்; அவர் இரவிலேயே இயங்குவர்; தலைப்பாகை ஒன்றனைத் தவிரஆடையெதுவும் அணியார். இடுகாடுகளிலே திரிந்து நடனமிடும்இவர்கள் மனிதரைக் கொல்லும் தமது சக்தியை அங்கு அதிகரித்துக்கொள்வர். பிணங்களைத் தோண்டி எடுத்து அவற்றிலிருந்து (தாயத்து முதலாய) மந்திர உறுப்புப் பொருள்கள் செய்து கொள்வர். உடல் நலங்குன்றியிருக்கும் ஒருவர் வீட்டு வாயிலில் கூடி நின்று ஒப்பாரி வைப்பர். நோயாளியும் இறந்துவிடுவான்.11
தென்னாபிரிக்காவிலே திரான்ஸ்வால் பிரதேசத்திலுள்ள பவெந்தா என்னும் சாதியினரிடையே பெண்மாந்திரீகர் உள்ளனர். இவரின் கீழ்த்தரமான செய்கைகள் இரவு நேரத்திலேயே நடந்தேறுகின்றன. ஒரு பெண் ஆடையின்றித் திரிவாள். தழலைப்போல அவள் கண்கள் பிரகாசிக்கும்; சில பெண்கள் சேர்ந்ததும் அவர்கள்மனிதமாமிசந் தேடி விருந்துண்டு களிப்பர். இவர்கள் செய்யாத கொடுந் தொழிலில்லை என்றே கூறி விடலாம்.12
ஆஸ்திரேலிய ஆதிமனிதரிடையேயுள்ள மாந்திரீகராற் பிணத்தின் கொழுப்புப் பெரிதும் மதிக்கப்படுகின்றது. குடரையும் கொழுப்பையும் தமது உடலின் மீது போட்டுக் கொண்டு திரிவர். போரில் வெற்றி கிடைப்பதற்காக இச்சடங்கு செய்யப்படுகின்றது. செத்த மனிதனது கொழுப்புடன் அவன் சத்தியும், தமக்குக் கிடைப்பதாக இவர்கள் நம்புகின்றனர்.13
மேற்கு இரியானில் வாழும் மறின்டு சாதியினர் மத்தியிலே மாந்திரீகத் தொழில் பழகும் ஒருவருக்குப் பிணங்களிலிருந்துபிழிந்தெடுத்த சாறு பருகக் கொடுக்கப்படுகிறது. அச்சாற்றினை மூக்கிலும், கண்ணிலும் விடுவர். இதன் விளைவாகச் சாதாரண மக்களுடைய புலன்களுக்கு எட்டாத மணமும், காட்சியும் மாந்திரீகருக்குத் தோற்றும், என்று நம்புகின்றனர்.14
நயாசலாந்து நாட்டிலுள்ள வயாவோ சாதிமக்களும் வேறு குழுவினரூம் “பேய்கள்” பிணந்தின்னும் என்னும் நம்பிக்கையுள்ளவர்.15 இம்மக்கட் கூட்டத்தினரிடையே மாந்திரீகங்கற்கும் மாணவர் குழந்தையின் நெஞ்சை்யும் ஈரலையும் சுட்டுச் சாப்பிடல் வேண்டும்.16
மேற்கு இரியானிலேயுள்ள கெராக்கி சாதியினரிடையே ஒருவர் மனித பிணத்தைத் தின்பதனால் பிறர் கண்ணுக்குத் தோற்றாத உணவைப் பெறலாம் என்னும் நம்பிக்கை நிலவுகின்றது.17
மெலனீஷியாவிலே சில தீவுகளில் இருபாலையுஞ்சேர்ந்த மாந்திரீகர் பிணந்திருடித் தின்பதால் பிசாசுகளின் வல்லமையைப் பெறுவதாக நம்புகின்றனர். அப்பிணத்திற்குரிய ஆவியானது, உண்டவருடைய நெருங்கிய, நண்பனாகி, அவர் ஏவிய கட்டளையைச் செய்யும் என நம்புகின்றனர்.18
சன்சிபாரிலே முற்காலந் தொட்டு வாழ்ந்து வரும் வகதிமு என்னும் சாதியினரிடையே ‘பேய்மகள்’ ஒருத்தி இடுகாட்டிலே கிடக்கும் பிணத்தை எழச் செய்து அதைத் தன்னுடன் சேர்த்துப் பற்றிக் கொண்டு கூத்தாடுவாள். அதனைத் தொடர்ந்து அங்கு கூடிய மற்றைய பேய் மகளிருடன் சேர்ந்து பிணத்தைப் புசிப்பாள்த; பெருவிருந்து நடைபெறும்.19
மனிதவியல் ஆராய்ச்சியாளரும், சமூகவியல் ஆராய்ச்சியாளரும் விவரிக்கும் இத்தகைய பிணந்தின்னும் வழக்கம் சங்க இலக்கியங்களிலே காணப்படும் பேய்மகளிரின் செயல்களோடு ஒத்திருப்பதை இப்பொழுது காண்கின்றோமல்லவா? இலக்கியத்திலே தற்செயலாக இடம்பெற்றுள்ள செய்தியானது புராதன மக்களுடைய வழக்கத்தினால் அரண் செய்யப்படுகின்றது என்பதனையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் மேற்கே வட அமெரிக்காவரை ஒரு காலத்தில் நிலவிய புராதன சமூகங்களிற் காணப்பட்ட எண்ணற்ற பழக்க வழக்கங்களுள் ஓன்று பெண் ‘பேய்கள்’ பிணந்தின்னும் செயல். நரமாமிசம் உண்ணும் இம்முறைபற்றி வேறு பல ஆராய்ச்சியாளரும் குறிப்பிட்டுள்ளனர்.20
பெண்கள் (பேய்) பிணந்தின்னிகளாக இருப்பதற்குப் போதியஉதாரணங்களைப் பார்த்த நாம், இனி இச்செயல் தோன்றியதற்கான காரணம், அதன் பண்பு, ஆகியன பற்றிச் சிறிது நோக்குவோம். பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் பேய் மகளிர் செயல்கள் உண்மையில் ஒருமக்கட் கூட்டத்திலே காணப்படும் பொழுது அச்செய்கையை (Magic, Witchcraft)மந்திரச் சடங்கு அல்லது சூனியம் என்று மனிதவியல் ஆராய்ச்சியாளர் வருணிப்பர். இவ்விரண்டிற்கும் வேறுபாடுண்டு. எனினும், அதனைப் பின்னர் நோக்குவோம்.பேய்மகளிர் பெண் மாந்திரீகர் என்பது அவரது செயலால் தெரியவில்லை. ஆனால், அதே செயல்கள் உலகின் பிற பகுதிகளிலே மாந்திரீகமாகக் கொள்ளப்படுவதை நோக்கும் பொழுது பேய்மகளிர் மாந்திரீகராயிருந்திருப்பர் என்று கொள்வதில் தவறிருக்காது. அது மட்டுமன்றி, உலகின் பல பகுதிகளிலே புராதன மக்கட் கூட்டங்களிலே பெண்களே மந்திர சக்தி பெற்றவராக விளங்கினர். சுருங்கக் கூறின் மந்திர சக்தி புராதன சமூகங்களிலே பெண்களின் தனியுரிமையாயிருந்தது.21
இந்தச் சந்தர்ப்பத்திலே புராதன மக்கட் கூட்டத்தினர் மந்திரம் என்று கருதியது யாது என்பதனைக் கவனித்தல் தகும். இது பற்றி ஜா லின்ஸே என்பார் மேல்வருமாறு கூறியுள்ளார்.
“புராதன மனிதன் கூட்டு வாழ்க்கைமின் மூலமாகவும் விளைவாகவும் கருவிகளின் உபயோகத்தை மெல்ல மெல்ல அறிந்துகொண்டான், அந்நிலையில், தனக்குப் புறம்பாக இயற்கை இயங்குவதைக் கண்டான். தனக்குள்ள சிற்றறிவின் துணை கொண்டு தன்வசமிருந்த சில கருவிகளின் உதவியோடு இயற்கையைச் சமாளிக்க வேண்டிய வனாயிருந்தான். அவனது கருவிகள் திருந்தத்திருந்த இயற்கையின் உணர்வும் அதிகரித்தது. கருவிகள் செம்மைபடச் செம்மைபடக் கூட்டு வாழ்க்கையும்வவிமைபெற்றது.தனது கூட்டம் விரிவடைவதைப் போலவே இயற்கையும் பரந்து விரிந்து கிடந்ததைக் காணலுற்றான். அவனது அகலக்காட்சி விரிவடைந்தது. அதற்கியையச் சிந்தனையும் உணர்வும் விரிந்தன.
“ஒருபுறம் இயற்கையின் சிறு பகுதிகளில் தனது சக்தி பயன்படுவதைக் கண்டான். மறுபுறம் அவனுக்கு அப்பாற்பட்ட சிக்கல் நிறைந்த இயற்கைச் சக்திகள் அவனை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. அவற்றைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியவில்லை. தான் வெற்றி கண்ட பகுதியில் தனது செயல்கள் காரணகாரியத் தொடர்புடன் இயங்குவதைக் கண்டான். இவ்வுணர்வின் அடிப்பனடயிலே இயற்கையின் முழுத் தன்மையையும் அறிந்து கொள்ளும் பெருமுயற்சியில் இறங்கினான். தான் காணும் பிரபஞ்சத்தின் இரகசியத்தை அறிய விழைந்த மனிதன் ஏறத்தாழப் பின் வருமாறு சிந்திக்கலானான். தான் சில கருமங்களை நினைத்துச் செய்யும் நிலையிலிருந்தான். தனது உணர்ச்சி, தனது நோக்கம், முதலியன இயங்கியதைப் போலவே தான் வாழும் கூட்டத்தினரின் உணர்ச்சியும் நோக்கமும் இருந்ததை அவன் ஓரளவிற்குப் புறநிலையில் நின்று அறிந்து கொண்டான். தான் இவ்வாறு அறிந்து கொண்ட உண்மையின் அடிப்படையிலேயே எஞ்சிய பரந்த பிரபஞ்சமும் இயங்கவேண்டும் என எண்ணினான். தன்னைப் போவவே இயற்கைக்கும் உணர்ச்சிகளும், ஆசைகளும் இருத்தல் வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான். சூரிய ஔியில் குதூகலித்துப்புன்முறுவல் செய்தும், சூறாவளியிற் கடுஞ்சினமுற்றுக் கர்ச்சித்தும் இயற்கை இயங்குவதாக அதற்கு உணர்ச்சி நிலையும் உயிர் நிலையும் கற்பித்தான். இந்தக் கற்பனையிலிருந்துதான் மந்திரம் தோன்றியது. தனக்குள்ள ஆசாபாசங்கள், அச்சம், முதலியனவற்றைப் போலவே, இயற்கைக்கும் உண்டு என்ற நிலையில் தனக்கும் இயற்கைக்கும் பிணைப்பொன்றை ஏற்படுத்திக் கொள்கின்றான். தனக்குள்ளே இருந்து உணர்ச்சி, அச்சம், ஆசை முதலியவற்றைக் கொடுப்பது யாது என்று அவனுக்குத் தெரியாது. அது ஒரு “ஆவி” என்று எண்ணினான். எனவே, இயற்கைக்கும் பெரியதோர் ஆவி உண்டென்ற முடிவிற்கு வந்தான். மந்திரச் சடங்குகளினால் அந்த ஆவியைத் திருப்திப் படுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்று முனைந்தான். ஆனால், மந்திர சக்திகள் என்று அவன் கருதியதெல்லாம் அவனுடைய சிந்தனைக்குத் தப்பிய உணர்வுகளே. தனது அன்றாட வாழ்வில் கூட்டு வாழ்க்கையினால் பயன் பெறுவது கண்டு, மந்திரத்தையுங்கூட்டாகச் செய்ய முனைந்தான்.22
மனிதன் தன்னுடைய சக்தியை அடிப்படையாகசக் கொண்டு தனக்குப் புறம்பாக உள்ள இயற்கையிலும் அதே சக்திகளைக் கண்டுஅவற்றை உபயோகித்து அடக்கக் கண்ட கருவி மந்திரம் என்பதனை லின்ஸே மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அதே அரூபமற்ற சக்தியானது காலப்போகில் மனித வடிவம் பெறும் பொழுது மனிதர்க்குமந்திர கக்தி இருக்கிறது என்னும் கருத்துத் தோன்றுகிறது. அதன் தருக்கரீதியான இலட்சியமயமான கருத்துவடிவத்தினையே குறள் கூறுகின்றது.
“நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”23
ஆனால், குறள் நிலையான சமயங்களும் தத்துவங்களும் தோன்றி மக்களிடையே பரவியதன் பின்னர் எழுந்த ஒரு நூல். நாம்புராதன மனிதனது இயற்கையை உயிர் நம்பிக்கை நிலையில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு தோன்றிய மந்திரச் சடங்குகள் முதன் முதலிலே கூட்டு வாழ்க்கையில் நடைபெற்றன. குலங்களாகவும், சிறு சிறுகுழுக்களாகவும் வாழ்ந்த மனிதன் மந்திரத்தைக் கூட்டு வாழ்க்கைக்குப் பயன்படுத்தினான். புதிய தொரு மனிதப் பிறவியை உலகிற்குத் தருபவளாகக் காணப்பட்ட தாயும் அசாதாரணமான சக்திபடைத்தவளாக இருந்தமையால் பெண்ணிடமே அந்த மந்திர சக்தியும் இயல்பாகக் குடிகொண்டது. சக்தி வழிபாடு அல்லது பேரன்னை வழிபாடு உலகமெங்கும் ஒரு காலத்திலே தோன்றியதற்குரிய காரணமே, பெண்களைத் தலையாய மாந்திரீகராகவும் ஆக்கிவைத்தது.
“மனித வாழ்க்கை நிலைபேறுடைதாயிருப்பதற்குப் போதிய சந்ததி விருத்தியும், உணவும் தேவையாயுள்ளது. இதன் காரணமாகவே பழைய கற்காலத்திலிருந்து இற்றை நாள்வரை, உயிரைப் பாதுகாத்தலும் வளர்த்தலும் மனிதனது அடிப்படை உணர்ச்சிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இதுவே, மந்திரச் சார்புள்ள சமய நம்பிக்கையாகப் பல புராதன நிரந்தரமான வழிபாட்டு முறைகளில் இடம்பெற்றுள்ளது. உயிர் போற்றும் புராதன மந்திரச் சடங்குகளிலிருந்தே பெண்களுடன் நெருங்கிய தொடர்புள்ள நம்பிக்கை, அன்னை வழிபாடாகப் பரிணமித்தது என்பதில் ஐயமில்லை. பின்னர் பிறப்புடன் மட்டுமன்றி இறப்புடனும் அன்னை வழிபாடு தொடர்பு பெற்றது.உயிரை மட்டுமின்றிக் காலப்போக்கில் மனிதனுக்குத் தேவையான விலங்குகளையும் அவற்றின் வளத்தையும் பெருக்கவும் இவ்வழிபாட்டு முறை பயன்பட்டது.”24
அன்னை வழிபாட்டு முறையைப் போற்றி வந்த மக்கட்கூட்டம் ஒரு காலத்திலே மத்திய கிழக்கு முழுவதும் பரவியிருந்த்து. புர்வீகத் திராவிட மக்களும் இக்கூட்டத்தைச் சோ்ந்தவர்களே. திராவிட்களின் நாகரிகம் என்று கருதக் கூடிய சிந்து வெளி நாகரிகத்ததிலும் பெண் தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெற்று இருந்தது என்பது யாவருமறிந்த உண்மை. இந்த ஒரு பரந்த புராதன வரளாற்று வளர்ச்சிப் பின்னணியிலேதான் பேய் மகளிரின் மந்திர சடங்குகளை நாம் நோப்புதல் வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்திலே நாம் மீண்டும் சங்கச் செய்யுட்களைப் பற்றிச் சிறிது கூற வேண்டி இருக்கிறது. அன்னை வழிபாடு முதலியன புராதன சமுதாயங்களிலே காணப்பட்ட சமய நம்பிக்கை ஆகும். அது கிறித்துவிற்கு முன் ஜயாயிரம் ஆண்டளவிலே தொடங்கி ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் வரை நிலவிய ஓர் உலகளந்த சமய நெறி ஆனால் சங்க இலக்கியங்களோ, கிறித்துவிற்கு முன் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டளவிலும் கிறித்து அப்தத்திற்குப் பின்னர் சில நூற்றாண்டு அளவிலும் தோன்றிய சில இலக்கியங்கள். சங்க காலத்துச் சமூகம் முற்றுமுழுதான புராதனச் சமுதாயம் என நாம் கொள்ள முடியுமா? இல்லை ஏனெனில் தாய்வழிச் சமூகம் சங்க காலத்தில் மாறத்தொடங்கி விட்டது. சங்க கால தமிழகம் “நாகரிகப்” பாதையிலே நடைபோடத் தொடங்கியிருந்தது. அப்படியாயின் புராதனச் சமுதாயத்திற்குரிய மந்திரச் சடங்குகள் தமிழர் சமுதாயத்திலே செல்வாக்குப் பெற்றிருந்தன என நாம் கொள்வது பொருத்தமாகுமா? சங்க காலச் சமுதாயம் நகர நாகரிகத்தையும் அறிந்திருந்தது. அங்கு குலங்களும் குடிகளும் மறைந்து, அரசுகள் தோன்றி இருந்தன. அந்த நிலையிலே கூட்டு வாழ்க்கையிற் காணப்பட்ட மந்திரச் சடங்குகள் காணப்பட்டன என நாம் துணிந்து கூறலாமா? இத்தகைய முக்கியமான-பாரதூரமரன-கேள்விகள் நம்மை எதிர் நோக்குகின்றன. இவற்றிற்கு விடைகாண்பது இலகுவன்று.
இக்கேள்விகளுக்கு விடைகாண்பதற்கும் சில சங்கச்செய்யுட்களே எமக்கு வழிகாட்டுகின்றன. பேய்மகளிரின் செயல்களைக் கூறும் புறநாலூற்றுப் பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்,
“விசிபிணத் தடாரி விம்மென வொற்றி
ஏத்திவந்த தெல்லா முழுத்த
இலங்குவா ளவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துவி பொழிந்த கண்கூடு பாசறைப்
பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற்
கவிள விறகி னாக்குவரி நுடங்க
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட
மாமறி பிண்டம் வாலுவ னேந்த
வதுவை வழவிற் புதுவோரக் கெல்லாம் .
வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய் நின் ,
நிலவுத்திக வார முகக்குவ மெனவே”25
குறைவின்றி விளங்கும் வாளினுடைய மிக்க ஔி வெற்றியுண்டாக மழை மின்னும் போல மின்னி, அப்புகளாகிய மழையைப் பெய்த இடம் நிறைந்த பாசறைக் கண்ணே, பகைவர் உடலினின்றும் நீங்கிய அரிய தலைகளாற் செய்யப் பட்ட அடுப்பிலே, கூவிளங்கட்டையாகிய விறகிட்டெரித்து. ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடர்கள் பிழந்து பொங்க, தலையிற்பொருந்தாது நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னி மரத்தின் கொப்பையதிற் செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால் ‘ஈனாத பேய்கள் தோண்டித் துழாவிச் சமைத்த, மாக்களும் உண்ண மறுக்கும் ஊண் சோறாகிய பிண்டத்தை பேய் மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப்பானாய் ஏந்திக் காட்டப் போர்க்கள வேள்வி செய்த மன்னவனை பாடுகின்றார் மாங்குடிக் கிழார்என்னும் புலவர். இதே கருத்தும் நயமும் உள்ள வேறு செய்யுட்களும் உள.26 மற்றொரு செய்யுளிலே ஏர்க்களத்திலே நடப்பதைப் போலவேபோர்களத்திலும் நடப்பதாகப் புலவர் பாடியுள்ளார். அவை கவி நயம் வாய்ந்தவையாயுள்ளன என்பதில் ஜயமில்லை. அவற்றிக்கு உரை செய்த பழைய உரைகாரர், மறக்கள வேள்வி, மறக்கள வழி; ஏர்க்கள உருவகமுமாம் என்று குறிப்பெழுதிப் போயினர். இலக்கியக் குறிப்பிற்கு மேல் அவர்கள் எதுவும் கூறிலர். ஆனால் மேல் நோக்காகப் பார்க்கும் பொழுது இலக்கிய இரசிகருக்குத் தோற்றும் ஏர்க்கள உருவகத்திற்குப் பின்னால் ஆழ்ந்த உண்மை இருக்கிற தென்று நாமுணாலாம். இச்செய்யுளிலிருந்தும் இது போன்ற பிற செய்யுட்களிலிருந்தும் பின்வரும் செய்திகள் புலனாகின்றன.
1. போர் நடந்த இடம் களமாகக் கொள்ளப்பட்டது.
2. அங்கு களவேள்வி ஒன்று நடந்தது.
3. அதிலே ஈனா (பிள்ளை பெறாத அல்லது இல்லாத) மகள் ஒருத்தி வேள்வியிலே முக்கிய பாகந் தாங்கி நடத்தி வைத்தாள்.
4. அது ஏர்க்கள வேள்வியொன்றினைப் போலிருந்தது.
இந்த நான்கு சாதாரணமான செய்திகளுமே மிக முக்கியமான சமூகவியல் உண்மைகளைத் தம்முள்ளடக்கியுள்ளன என நான் கருதுகின்றேன்.
போர்க்களத்திலே நடந்த வேள்வியைப் பாடிய புலவன் உருவகத்தை அமைத்த பொழுது, அதனை எங்கிருந்து பெற்றான்? அதிலே பெண்ணொருத்தி சிறப்பான இடத்தை எவ்வாறு பெற்றாள்? இவ்விரண்டு கேள்விகளுக்கும் முதலில் விடை காண முயலுவோம். தொல்காப்பியப் புறத்திணையுள் வாகைக்குரிய துறை பதினெட்டையும் வகுத்துக் கூறிய ஆசிரியர்,
“ஏரோர் களவழியன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்”27
என்று இரு களவழிகளைத் கூறியுள்ளார். இதற்கு உரை கூறப் போந்த நச்சினார்க்கினியர் கூறியுள்ளவை மனங்கொளத்தக்கன.
“என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின்அளிக்குமாறு போல, அரசனும், நாற்படையையும் கொன்று களத்திற்குவித்து, எருதுகளிறாக வாண்மடலோச்சி அதிரித்துப் பிணக்குவையை நிணச் சேற்றொடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி, ஈனாவேண்மாள் இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும்பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தலாம்.”28
நச்சினார்க்கினியரது இவ்வுரை குறிப்பிடத்தக்க பல உண்மைகளைத் தெளிவாக்குகின்றது. போர்க்கள வேள்வியானது ஏர்க்கள வேள்வியை நோக்கி எவ்வாறு எழுந்தது என்பதனை விளங்கிக் கொள்வதற்கு உதவியாகவிருக்கின்றது. மறக்கள வேள்வி என்றொருநிகழ்ச்சியினைத் தொல்காப்பியர் கூறிற்றிலர் என்பதுண்மையே.எனினும் புறப்பொருளைச் சிறப்பாகக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலை வாகைப் படலத்துள் மறக்கள வழியை யருத்துக் களவேள்விஎன்றொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது.
“அடுதிற வணங்கார
விடுதிறலான் களம் வேட்டன்று
பிடித்தாடி யன்ன பிறழ்பறபே யாரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான்.முடித்தலைத்
தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து.29
இதிலிருந்து களவேள்வியென ஒன்றிருந்தது என்பது தெளிவாகும். அது மட்டுமன்று. மறக்கள வேள்வியானது ஏர்க்கள வேள்வியை நோக்கியே பிறந்தது என்றும் நாம் நிரூபிக்கமுடியும். நாகரிக வளர்ச்சிப்படி முறையை நோக்கினால் மருத நில மேம்பாட்டிற்குப்பின்னரே- உடைமைகளின் தோற்றத்தையடுத்தே-அரசுகள் தோன்றின என்பது போதரும். மருத நிலம் உழவுக்குரியது. எனவே, ஏா்க்களமே முதலிற் போற்றப்பட்டிருக்க வேண்டும். அரசுகளின் தோற்றத்தையொட்டியே போர்க்கள வேள்வி முதலியவற்றை மன்னர் செய்திருக்கலாம். இது மொழி வழக்காலும் இலக்கிய ஆதாரங்களினாலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை இது குறித்து எழுதியிருப்பதை ஈண்டுக் கூறுகின்றேன்.
“தமிழ் மக்கள் உழவுத் தொழிலில் பண்டைக் காலந்தொட்டே ஈடுபட்டவர்கள் என்பது,
‘பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே’
என்ற புறநானூற்றடிகளால் விளங்கும். அரசர் கொள்ளும் போர் வெற்றி உழவுத் தொழிலால் விளைவதாகும் என்பது பொருள். இதனால் நெற்களம் என்ற பொருளிலிருந்து போர்க்களம் என்ற பொருள் அடுத்துத் தோன்றியதாதல் வேண்டும்.... தொழில் ஒற்றுமைகளால், ஏர்க்களம் என்ற பொருள் பெறப்பட்டதெனல் வெளிப்படை களவழி, களவேள்வி என்பன இப்பொருளடியாகப் பிறந்த தொடர்கள். வாளேருழவர் (புறம். 368) வில்லேருழவர் (குறள் 872) என்பனவும் உருவக வகையாற் பிறந்தனவாம். இத்தொடர்களும் உழவுத் தொழிலின் அடியாகப் பிறந்து அத்தொழிலின் முதன்மையையும் பழமையையும் விளக்குகின்றன.”30
இத்தகைய முக்கியத்துவம் தொன்மையும் வாய்ந்த உழவுத் தொழிலின் ஆரம்பத்திற் பெண்களே அதில் முக்கிய பங்கு எடுத்துள்ளனர். இன்றும் சிறு தோட்டப் பயிர்ச் செய்கையிற் பெண்கள் ஆண்களோடு சரி நிகர் சமானமாகப் பங்கு கொள்வதை நாம் எங்கும் காணலாம். அன்றைய புராதன நிலையில் பெண்கள் கமத் தொழிலில் தலையாய பங்கு வகித்தனர். பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சன் மேல் வருமாறு கூறியுள்ளார்.
“உழவுத் தொழிலின் தொடக்க காலத்திலே பயிர்ச் செய்கை முறை வளர்ச்சியடையாத நிலையில், காட்டைத் திருத்திப்பாதுகாப்பது மிகப் பெரிய வேலையாக இருந்தது. குடிமிருப்புகளைச் சுற்றி எத்தனையோ இன்னல்கள் நிறைந்திருந்தன. தொற்று நோய்களும் வனவிலங்குகளும் உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் உண்டாக்கின. ஒருபுறம் காட்டைத் திருத்த மறுபுறம் அவை தாக்கிக் கொண்டிருந்தன. இத்தகைய சூழலிலே தனியொரு குடும்பம்குடியேறுவது முடியாத காரியமாக இருந்தது. தொகையிலேயே காப்பு இருந்தது. பெண்கள் பலவாறு கண்ணுங் காவல் செய்த பயிர்களைப் பிள்ளைப் பேறளிக்கும் பெண்தெய்வம் வாடவோ, வளரவோ செய்தது. இதன் காரணமாகப் பெண்களின் சந்ததி விருத்திச் சக்தி மந்திரவலிமை பெற்றதாகக் கருதப்பட்டது.”31
எமது பழைய இலக்கியங்களிலும் குறிஞ்சி நிலப் பெண்கள் தினைப்புனங் காத்தல், முதலிய தொழிலைச் செய்தனர் என்பதும் அதுவே இலக்கியத்தில் நாடக வழக்கிற் காணப்படுகின்றது என்பதும் ஈண்டு மனங்கொளத் தக்கது.
புராதன மக்கட் கூட்டத்தினர் கருவளத்தையும், பயிர் வளத்தையும் (fertility) ஒருங்கே பெறுவதற்காகவே மந்திரங்களை கையாண்டனர் என்றும் அதன் தருக்க ரீதியான முடிவாகப் பேரன்னைவழிபாடு தோன்றியது என்றும் முன்னர்ப் பார்த்தோம். அதற்கு இப்பொழுது தக்க விளக்கங் கிடைத்துவிட்டதல்வவா?
எனவே, போர்க்களத்திலே அல்லது சுடுகாட்டிலே- பிணங்களைத் தின்று தழுவிக் கூத்தாடும் பேய் மகளிர் செயல்கள்உழவுத் தொழில் வளர்ச்சியுனூடாகவே தோன்றியவை என்று நாம்கொள்ள இடமுண்டு. பிணந்தின்னும் வழக்கம் உழவுத்தொழில் வளர்ச்சிக்கு முன்னரும் இருந்திருக்கலாம். ஆனால், மறக்கள வேள்விஎவ்வாற்றானும் மருத நில நாகரிக வளர்ச்சிக்குப் பிந்திய தொன்றாகவே இருத்தல் வேண்டும்.
மனித உயிர்த் தோற்றத்திற்குக் காரணமாக அல்லது புதிய ஒருயிரைப் படைக்கும் கர்த்தாவாகப் பெண் காணப்பட்ட படியாலேயே, பயிர்கள், மிருகங்கள் ஆகியவற்றின் வளம் முதலியவற்றிற்கும் பெண் தெய்வமே காரணமாக அமையலாயிற்று என்று முன்னர்ப் பார்த்தோம். பிற்ப்பைப் போலவே இறப்பும் காலகதியில் பெண் தெய்வ வணக்கத்துடன் வந்து கலந்தது. இது கூட்டு வாழ்க்கையின் அடிப்படையிலேயே அமைந்தது என்பது அவதானிக்கத்தக்கது. பேராசிரியர் ஜேம்ஸ் இது பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார்.
“கூட்டு வஈழ்க்கையிலிருந்த மக்கள் இயற்கையதீதச் சக்திகளின் துணைக்கொண்டு பொது நலனுக்காகப் பாடுபடுத்தப்பட்டதையே இச்சடங்குகள் குறித்து நிற்கின்றன. உணவு தேடுதல், பிறப்பு, சந்ததி விருத்தி! இறப்பு முதலிய எந்தத் துறையிலாயினுஞ் சரி மக்கள் நலத்துடன் இவ்வுலகிலும் பின்னரும் வாழ விரும்பியதை மந்திர மரபு காட்டுகின்றது. எனவே, மக்களின் அன்றாட வாழ்க்கையிற்றோன்றிய ஆபத்தான, கவர்ச்சிகரமான, கவலைக்கிடமான அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு வாழ்க்கைப் பண்பினைப் பெற்று அதிலே காணப்பெறும் சிக்கல்கள், இன்னல்கள், தண்டனைகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையிலே தோன்றினவே இச்சடங்குகள்.”32
சிற்சில வேறுபாடுகளுடன் புகழ் பெற்ற மனிதவியல் ஆராய்ச்சியாளரான தூர்க்கைம் (Durkheim) என்பவரும் இதுபோன்ற கருத்தினையே கூறியுள்ளார்.33
தமிழ்நாட்டு வரலாற்றிலே மருத நில நாகரிகத்திற்கு முன்னதாகக் காணப்படும் மக்கள் வாழ்க்கை பெரும்பாலும் கூட்டு வாழ்க்கை முறையாகவே இருந்தது. அதாவது அரசுகள் தோன்று முன்னர் மக்கள் சிறுச்சிறு கூட்டங்களாக வாழ்ந்தனர்.34 தனியரசனோ, தனியுடைமைப் போட்டியோ, தனியொரு ஆண்தெய்வமோ தோன்றாத காலமது. குறிஞ்சி நில வாழ்க்கையிலும் ஓரளவிற்கு முல்லை நில வாழ்க்கையிலும் இப்பண்புகளைப் பிற்கால இலக்கியங்களான சங்கச் செய்யுட்களின் வாயிலாக ஒரளவிற்கு அறிந்து கொள்ளலாம். கடவுளர்களில் ஏற்றத்தாழ்வோ வரிசைக் கிரமமோவின்றிப் பூசை செய்யும் தனி வகுப்பாருமின்றி மக்கள் கூட்டாக வழிபடும் முறையே முருக வழிபாட்டு முறையாகும்.!வேலையுடைய ஒருவன் வெறி கொண்டு ஆடும் இடத்திற்கும் களம் என்னும் சொல் உபயோகிக்கப்பப்பட்டிருப்பது மனங்கொளத்தக்கது.
“..........................வேலன்
வெறியயர் வியன் களங்க கடுக்கும்
பெருவரை நண்ணிய சாரலானே”35
பூர்வீகத் தமிழ் மக்கள் முருகனுக்குப் பலி கொடுத்து வணங்கிய இடமும் வெறி அயர் களம் என்று பண்டைப் புலவர்களாற் குறிக்கப் பட்டிருப்பது பொருள் பொதிந்த பிரயோகமாகும். முருகனின் தாயாகிய கொற்றவைக்கும் பலியிடும் வழக்கம் பண்டைத் தமிழரிடையே யிருந்தது.
கொற்றவை பழந்தமிழரின் தலையாய பெண்தெய்வம். அவளுக்குரிய வழிபாட்டைப் பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொல்காப்பியமும் கூறுகின்றன.36
எனவே, இதுகாறுங் கூறியவற்றால்,புராதன உலகில் முக்கிய தெய்வங்களுள் ஒன்று பேரன்னை என்றும் அது தமிழர் (திராவிடர்) தெய்வமாக இருந்தது என்றும், அது மந்திரச் சடங்குகளினால்வழிபடப்பட்டது என்றும், அதன் பின்னர் அது உழவுத் தெய்வமாகவும் மாறியது என்றும், அவற்றின் அடிப்படைமில் இறப்பு, பிறப்பு முதலியவற்றின் தெய்வமாகப் பிற்காலத்தில் நிலவியது என்றும் காணலாம். பிற்காலச் செய்யுட்களான சங்க இலக்கியங்கள் அத்தகைய பழைய செய்திகள் சிலவற்றை ‘இனநினைவு களாகவோ, அல்லதுஎஞ்சியிருந்த வழிபாட்டு முறையாகவோ, எமக்குக் காட்டுகின்ற பேய் மகளிர் உண்மையான மகளிரே. ஆனால், பெண் தெய்வ வழிபாட்டிற்காகப் பிணந்தின்னிகளாகவும் இருந்தனர். அந்த வழக்கம் பின்னாளிலே சிவ வழிபாட்டுடன் கலந்தது. எனினும், அதனை யாராய இது ஏற்ற சந்தர்ப்பமன்று.
நாடும் நாயன்மாரும்
அறமும் அரசியலும்
ஜம்பெருங் காப்பியம் என்று வழங்கும் நூல்களுள்ளே காலத்தால் முற்பட்டன ‘இரட்டைக் காப்பியம்’ எனப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாம். வீரயுகத்திற்குப் பின்னர்த் தோன்றிய பேரிலக்கியங்களில் இன்று முழுமையாக எஞ்சியிருப்பன இவ்விரண்டுமே. இவற்றுடன் முன் பின்னாகத் தோன்றிய தகடூர் யாத்திரை பெரும்பகுதி மறைந்துவிட்டது. காவிய இலக்கணம் தமிழிலே வந்து புகுமுன்னரே தோன்றிய காரணத்தால் சிலம்பையும் மேகலையையும் ‘காப்பியம்’ எனக் கொள்ளாது தொடர் நிலைச் செய்யுள் என்பர். ஆயினும் தொடர்நிலை என்னும் வழக்கும் முதன் முதலிலே தண்டியலங்காரத்தில்தான் காணப்படும். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் தத்தம் படைப்பைப்பாட்டு என்றே கூறியமைந்தனர்.
“சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்”
என்று சிலப்பதிகாரப்பதிகமும்,
“மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென்”
என்று மணிமேகலைப்பதிகமும் கூறும்.பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை இவ்விரு நூல்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டளவிலே தோன்றின என்றும், ‘750 முதல் 1000 வரையுள்ள காலப்பகுதியாகிய முற்காவிய காலத்தைச் சேர்ந்தன என்றும் வாதிடுவர். வடமொழிச் செல்வாக்கினைத் தமிழிலே கண்டு காட்டுவதிற் பெரிதும் ஈடுபாடுடைய அவர் இங்கும் அம்முறையினைக் கடைப்பிடித்து, வடமொழிப் பரத சாஸ்திரம், பஞ்ச தந்திரம் முதலாய நூல்களுக்குக் காலத்தாற் பிற்பட்டது சிலப்பதிகாரம் எனக் காட்ட முயல்வர்.1 பல வழிகளில் சிறந்த ஆராய்ச்சியாளராக விளங்கிய அன்னார் தான் வகுத்துக் கொண்ட“காவிய காலம்” என்னும் காலப்பிரிவிற்குள் (கி.பி. 750-1200) பெருங்காப்பியங்கள் யாவற்றையும் அடக்க முற்பட்டதன் அனர்த்தமே மேற்கூறிய முடிபு எனலாம். காலவாராய்ச்சியிலே, நுண்ணிய உயர்ந்த கருத்துக்கள் பலவற்றைப் பிரசித்தப் படுத்திய அப்பேரறிஞர் தமிழ் நாட்டுச் சமூக வளர்ச்சியைச் சிறிது கூர்ந்து நோக்கியிருப்பரேல், இத்தவறான முடிபிற்கு வந்திரார்; இரட்டைக் காப்பியங்கள் வீரயுகத்தை (சங்க காலத்தை) அடுத்த காலப்பகுதியிலே தோன்றியிருத்தல் வேண்டும் என்னும் கருத்தையும் நிராகரித்திருக்க மாட்டார்.
மணிமேகலையைப் பற்றிக் குறிப்பிடும் இலக்கிய வரலாற்றா சிரியர் பலரும் அதிற்காணப்படும் சமயப் பிரசாரத்தை விதந்து கூறியுள்ளனர். பெளத்த காப்பியமான அது “பிற சமயங்களை இகழும் நோக்கமும் கொண்டது” என்பர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.2 சாத்தனாரை கவித்துவத்திற் சிறந்து விளங்கும் இளங்கோவடிகளும் சமணக் கொள்கையைப் பின்பற்றியே தனது பேரிலக்கியத்தை இயற்றியுள்ளனர்.இவ்விரு நூல்களும் தத்துவங்களை இலக்கியமாக்கியுள்ளன என்பதைமறுப்பவர் இலர். அந்த வகையில் பிற்காலத் தெழுந்த காவியங்களுக்கு இவை வழிகாட்டிகள் எனலாம். இவ்விடத்திலே எத்தகைய தத்துவங்கள் என்ன வகையிலே இந்நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதே எனது ஆராய்ச்சியாகும்.
சமண பெளத்த கருத்துக்கள் சான்றோர் செய்யுட்களிலேஆங்காங்கு காணப்படுகின்றன. ஆயினும் அக்காலத்திலே அவை பெருவழக்குடையனவாக இருந்திருக்க முடியாது.3 புறநானுற்றிலிருந்து ஒரு உதாரணம் பாக்கலாம்; பண்டைத் தமிழரின் பரந்த உளப்பாங்கிற்குச் சான்றாகப் பலராலும் எடுத்தாளப்படும் செய்யுள்.
“யாது முரே யாவரூங் கேனிர்
தீது நன்றும் பிறர் தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலுமிலமே மின்னொடு
வானந்தண்டுளி தலைஇ யானது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீரவழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே”4
கணியன் பூங்குன்றன் யாத்த இப்பாடல் முழுவதும் பலருக்கு தெரிந்திருக்க நியாமில்லை. ஏனெனில் பாடலின் முதலடியே பெரிதும் எடுத்தாளப்படுவது. எனவே பாடற் பொருளைப் பார்ப்போம்: நன்மையும் தீமையும் தாமே வருவனவன்றிப் பிறர் தர வருவனவல்ல, அல்வாறே நோதலும் அது தீர்தலும் தாமே வருவன; சாதலும் புதிதன்று. வாழ்தலை இனிதென்று விரும்பியது மிலம்; வெறுப்படைந்து அது இன்னாதது என்றும் கூறிற்றிலம். மின்னலுடனே விசும்பு குளிர்மையான துளிகளைப் பெய்தலால் கல்லை அலைத்துப் பாயும் வளவிய பேராற்றின் நீர் வழி யே மிதந்து போகும் மிதவைபோல அருமைமிக்க உயிரானது ஊழின் வழியே படுமென்பது நல்லோத்துசக்களினாலே அறிந்தோம்; ஆதலின் நன்மையால் மிக்கவரை பாராட்டுதல் செய்யோம்; சிறியோரைப் பழித்தலுஞ் செய்யோம்.’
சமண சமய தத்துவத்திலே அநுபிரேசைஷ அல்லது ஆழ்ந்து தியானித்தல் என்றொன்றுண்டு. உண்மையை அறிந்து கொள்ள இது ஏதுவாகும்.5 உலகம் நிலையற்றது; ஊழ்வினைப் பயனை அடைவதை எவரும் தடுத்தல் இயலாது; வினைப்பயனை அனுபவித்து அறுத்திடுதல் வீடாகும். எமது செய்கைகளுக்கும் அவற்றினால் இம்மையிலும் மறுமையிலும் வரும் இன்ப துன்பங்களுக்கும் நாமே பொறுப்பாளிகள்; பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம்; இவ்வாறெல்லாம் மனத்திற் கொண்டொழுகுவதற்குத் தியானம் அத்தியாவசியமாகும். இதுவே பூங்குன்றனாரின் செய்யுளின் உள்ளீடு என்பது எளிதிற் புலனாகும். இது சமண சமய தத்துவம் என்பது இதே கருத்தினைச் சீவக சிந்தாமணியாசிரியர் ஆண்டிருப்பதனாலும் உறுதி பெறும். நாமகளிலம்பகத்திலே சச்சந்தன் கூற்றாகப் பின்வரும் செய்யுள் அமைந்துள்ளது.
“சாதலும் பிறத்த றானந் தம்வினைப் பயத்தினாகும்
ஆதலு மழிவு மெல்லா மவை பொருட்கியல்பு கண்டாய்
நோதலும் பரிவுமெல்லா நுண்ணுணர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளியென்றான்”
சான்றோர் செய்யுட்களிலே மேற்கண்டவாறு சமண சமக் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பினும் அவை செல்வாக்குப் பெற்றிருந்தனஎனக் கூற முடியாது. பழைய குல மரபுக் குழுக்கள் தம்முள் முட்டி மோதிய போரின் விளைவாக வர்க்கங்கள் தோன்றிக் கொண்டிருந்த நிலைமைமையே பெரும்பாலான சான்றோர் செய்யுட்கள் பிரதிபலிக்கின்றன. “அகிம்சா பரமோதர்ம” எனச் சாந்தியும் சமாதானமும் போதித்த சமணத் துறவிகளுக்கு வீரயுகத்திலே வரவேற்பு இருந்திருக்கமுடியாது. ஆனால் இப்போர்களின் முடிவிலே அரசு எனப்படும் நிறுவனந் தோன்றிய பொழுது, அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அந்நிறுவனத்தைத் தாங்கிய வர்க்கத்தின் நிலைபேற்றிற்கும் அமைதி அவசியமாயிருந்தது. கொல்லுந் தொழிலினாலே நிறுவப்பட்ட அரசுகள் செழித்து வளருவதற்குக் கொல்லாமை உதவியாயிருந்தது. அது மட்டுமன்று. போர்களின் போது நடை பெற்ற கொள்ளை செல்வச்செழிப்பு ஆகியவற்றினடிப்படையிலும், போரிற் கைப்பற்றப்பட்டவர்கள் அடிமைகளாகத் தொழில் செய்ய நேர்ந்த முறையிலும் புதியதொரு சமூகமாற்றம் ஏற்பட்டது.சங்கச் சான்றோதியற்றிய அகப்பாடல்களிலேயே பொருட் செல்வத்தைத் தேடியலைந்த ‘வீர புருஷர்’காணப்படுகின்றனர் அன்றோ! வினையே ஆடவர்க்கு உயிர் கூறப்படுவதெல்லாம் பொருள் வயிற் பிரிந்த தலைவரைப் யென்பது மனங்கொளத்தக்கது. உலக வரலாற்றில் ஏங்கல்ஸ் சுருக்கமாகக் கூறுகின்றார்.
“பொருட் செல்வம் வேகமாக அதிகரித்தது.ஆனால் தனிப்பட்டவர்களுடைய செல்வமாக இது இருந்தது.துணி நெய்வது, உலோகங்களை உருக்கி வார்த்துப் பொருள்களாகச் செய்வது முதலிய கைத் தொழில்களும் இவை போன்றதொழில்களும் மேலும் மேலும் சிறப்பான திறமை வாய்ந்த தொழில்களாயின. அந்நிலையிலே படைக்கப்பட்ட பொருள்களின் தரமும் கலைத்திறனும் உயர்ந்தன;பல்வேறு வகையான இச்சிறப்புத் தன்மை பெற்ற தொழில்களை ஒரே மனிதன் செய்தல் முடியாத காரியமாயிற்று. இரண்டாவது மாபெரும் வேலைப் பிரிவினை இந்நிலையில் நிகழ்ந்தேறியது. விவசாயத்திவிருந்து கைத்தொழில்கள் வேறாகிப் பிரிந்தன;... விவசாயம், கைத்தொழில் என்னும் இரு துறைகளாக உற்பத்தியிற் பிரிவினை உண்டாகியதைத் தொடர்ந்து, பொருள்களை விற்பனைக்காக உற்பத்தி செய்யும் முறை தோன்றியது. அதாவது சரக்கு உற்பத்தி முறை பிறந்தது, (commodity production). சிறப்பாகப் பரிவர்த்தனைக்காக என்றே சரக்குகளிற் கணிசமான பகுதியை உற்பத்தி செய்யும் நிலைமை வளர்ந்தது. நாளடைவில் தனித்தனி உற்பத்தியாளரிடையே பரிவர்த்தனை நடப்பது பெருகிப்போய் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தவுடன் பரிவர்த்தனையாவது சமுதாயத்திற்கு இன்றியமையாத அடிடப்படைத் தேவையாகிவிட்டது. அத்துடன் வியாபாரஞ்செய்வதும் உடனிகழ்ச்சியாக அமைந்தது. ஒரு மூன்றாவது வேலைப் பிரிவினையும் வந்து சேர்ந்ததுத; அதாவது உற்பத்தியிலே பங்கு பற்றாமல் உற்பத்தி செய்த பொருள்களைப் பரிவர்த்தனை செய்வதில் மட்டும் ஈடுபடும் வர்க்கம் சிருஷ்டிக்கப்பட்டது. அந்த வர்க்கந்தான் வணிக வர்க்கமாகும்.”
ஏங்கல்ஸ் விவரிக்கும் மாபெரும் வேலைப்பிரிவானது, நகரத்திற்ரும் நாட்டுப்புறத்திற்குமிடையே வேறுபாட்டை அதிகப்படுத்தியது என்பதனையும் நாம் மறுத்தலாகாது. வணிக வர்க்கம் நகரத்தைக் களமாகக் கொண்டது. தமிழ் நாட்டைப் பொறுத்தளவில், முசிறி, காவிரிப் பூம்பட்டினம், மதுரை முதலிய பட்டினங்களிலும் நகரங்களிலும் மேற்கூறிய வணிக வர்க்கம் தழைக்கத் தொடங்கியது எனலாம். வீரயுகத்தின் கடைக் காலத்தைப் பிரதிபலிக்கும் பத்துப் பாட்டு இதனைக் காட்டும். பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலிய பாட்டுக்களில் வணிகரைப் பற்றிய குறிப்புக்கள் முதன் முறையாக நீண்ட அளவிற் காணப்படுகின்றன. வீரயுகத்தின் இறுதிக் காலத்தில் தமிழ் நாடு பிற நாடுகளுடனும் வணிகஞ்செய்யத் தொடங்கியது. யவனரின் கலங்கள் பொன்னைக் கொணர்ந்து மிளகை எடுத்துச் சென்றன.6 காவிரிப்பூம் பட்டினத்தை “முட்டாச் சிறப்பிற்பட்டினம்” என்று பட்டினப்பாலை வருணிக்கும்.7 இந்நகரங்களிலிருந்த வணிகர் ‘கொலை கடிந்துங்களவு நீக்கியும்த8 வாழ்கின்றனர்’ என்று பட்டினப்பாலை கூறுகின்றது. தொடக்கத்திலிருந்தே சமண சமயம் வணிகருக்கு உகந்தசமயமாக இருந்து வந்துள்ளது . அன்றும் இன்றும் கொல்லாமையை கடைப்பிடிக்கும் ஒருவன் வணிகத் தொழிலொன்றையே திறம்படச்செய்ய முடிகிறது.
சான்றோர் செய்யுட்களிலே தோற்ற நிலையிற் காணப்படும் வணிக வர்க்கமானது சில நூற்றாண்டுகளிலே பெருவளர்ச்சியுற்றுச் சமுதாயத்தின் தலையாய வர்க்கமாக விளங்கியது. அதன் விளைவாக, அதாவது வணிகத்தின் பயனாக வணிக வர்க்கத்தினர் அரசியலிலும் சமூகத் துறையிலும் மேம்பாடெய்தினர். எய்தவே, அவர்களது ஒழுகலாறாகிய சமணமும் பெருஞ்சிறப்புற்றது. இதற்கெல்லாம் அடிப்படை, வணிக மக்களது நகர வாழ்க்கையும் அதன் மூலமாகநாட்டையும் நாடாள்வோனையும் அவர்கள் தமது செல்வாக்கிற்குள் வைத்திருந்ததுமேயாகும்.
“கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட் காற்றுந்துணையாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர்.”9
என்று சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்தை வருணிக்கின்றார்.
“வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்”10 என்றும் .
“செல்வி பாரக்குஞ் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்”11
என்றும் இளங்கோ அடிகள் மதுரையை வருணிக்கின்றார். இதே காதையிலே இரத்தினக் கடைத்தெரு கூறுமிடத்தே 180-200 அடிகளிலே நவமணிகளின் தன்மை கூறப்படுவதும் நோக்கத்தக்கது.
இத்தகைய செல்வச் செழிப்பின் மத்தியிலே சமுதாயச் சிக்கல்களும் முரண்பாடுகளும் ஏற்படலாயின. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் காட்டும் மாந்தரைப் பார்க்கும் பட்டினப்பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் யாம் கண்ட செல்வநிலை பன்மடங்கு அதிகரித்ததுடன் சீரழிவு பெறும் ஒரு நிலையையும் காணக்கூடியதாயுள்ளது எனலாம், இந்நிலையிலேயே சமணமும் பெளத்தமும் வாழ்க்கைக்கு மருந்து கூற முனைகின்றன. ஒருவர் இருவரல்ல சமுதாய முழுவதுமே நெருக்கடியில் ஆழ்ந்திருந்தது. இந்நிலையினைத் தனிப்பாடல்களிற் பாடுதல் பொருந்தாது. எனவேதான் தனி நிலைச் செய்யுளன்றித் தொடர் நிலைத் செய்யுள் தோன்றுகின்றது. உதாரணமாகச் சிலம்பு தனிமனிதனொருவனது வாழ்க்கையையோ, வாழ்க்கைச் சம்பவங்களையோ மட்டும் கூறுவதன்று. பட்டினப்பாலையும், பொருநராற்றுப்படையும் அவ்வாறே வீரபுருஷனான கரிகாலன் புகழைப் பாடின. ஆனால் இளங்கோவின் தொடர்நிலைச் செய்யுளில், கண்ணகி மாதவி, தாய்தந்தையர், மன்னன், பொற்கொல்லன், சமணத்துறவி, முதலியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். குடிமக்களும் தோற்றமளிக்கின்றனர் ஆகவே தனிமனிதனுக்கன்றித் தமிழ்ச் சமுதாயத்திற்கே பொதுவான சில பிரச்சினைகள் பாட்டில் அலசப்படுகின்றன. தத்துவம் அதற்கு அடிநிலையாக அமைகின்றது. பல பிரச்சினைகளை உள்ளடக்கி இவ்விரு இலக்கியங்களும் எழுந்தமையாலேயே, இன்று வரை பலவிதமான கண்ணோட்டங்களுக்கும் விளக்கங்களுக்கும் இவை இடந்தருவனவாயுள்ளன.
இரு நூல்களும் இரு சமயங்களைப் போதித்தன என்று கூறுதல் போதுமானதன்று. ஒவ்வொரு குறிப்பிட்ட தத்துவத்திற்கேற்ப மனித வாழ்க்கை அமைகின்றது என்பதனைக் காட்ட இரு நூல்களும் முயல்கின்றன. உதாரணமாக, ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது இரு நூல்கட்கும் பொதுவான நம்பிக்கையாகும். புத்தசமயச் சார்பினால் ஏது நிகழ்ச்சி வாய்க்கப் பெற்றுத் துறவறத்தில் நின்று பவத்திறம் அறுக எனப் பாவை நோற்றது மணிமேகலை காட்டும் மனித வாழ்வும் இலட்சியமுமாம். அரசியல் பிழைத்த அரசன் அழிவான்; பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; என்பன சிலம்பு வற்புறுத்தும் நம்பிக்கைகள். இத்தகைய கருத்துக்களைத் நூர நின்று அறவுரைகளாகப் போதனை செய்யலாம் (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் போல, மனித உணர்ச்சிகளும் உலகியலும் பொருந்திய நெடுங்கதைகளாகக் கூறினர் இரு புலவர்களும். இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சி அன்று. தத்துவத்தின் ஒளியில் வாழ்க்கை முழுவதையும் விளக்க முனைந்ததன் பயனாகும்.
சிலப்பதிகாரம் எழுதி எண்ணற்ற அறிஞருள் சிலர் அதற்கும்வணிக மக்களுக்குமுள்ள நெருங்கிய பிணைப்பைச் சுட்டிக் காட்டியுள்ளனர். உதாரணமாக “இது வணிக மக்கள் சிறப்படைந்த காலத்துக் காப்பியம் ஆகலாம்” என்பர் தெ. பொ. மீ.12 அது உண்மையே அதே சமயத்தில் வணிகருக்கும் சிலம்பின் தத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது போன்ற கேள்வியையும் எழுப்புதல் வேண்டும் பதிகத்தில் மட்டுமின்றி நூலினுள்ளும் பல சந்தர்ப்பங்களிலே இளங்கோ ஊழின் வவியையும் இயல்பையும் அழுத்திக் கூறியுள்ளார்.
“வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரானாகி13 எனவும்,
“வினைவ உம்மைந் துருத்த காலைச்
செம்மையிலோரக்குச் செய்தவம் உதவாது”14 எனவும்,
“செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்”15
எனவும் எடுத்துரைப்பர். இளங்கோவிற்கு முன்னோரான பொய்யில் புலவரும் திடமாகக் கூறினர்.
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”16
இவ்வாறு வணிகரது தனிப்பெருஞ் சமயமான சமணத் திற்கும் ஊள்என்னும் கோட்பாட்டிற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையாது? மனிதர்களின் பெளதீக வாழ்க்கை நிலைமைகள் தான் அவர்களின் உணர்வை நிர்ணயிக்கின்றன என்ற மார்க்சின் கூற்றை நாமறிவோம்இதற்கு உதாரணமாக விளக்கந்தருகின்றார் ஏங்கல்ஸ்.
`
“கல்வின் (calvin) போதித்த சமயக் கருத்துக்கள் அன்றைய பூர்சுவாக்களிலே துணிவும் முயற்சியுமுள்ள பகுதியினருக்கு ஏற்றனவாயிருந்தன. அவர் நிறுவிய ஊழ்வினை என்ற கோட்பாடு குறிப்பது யாது? போட்டி மயமான வர்த்தக உலகத்தில் வெற்றி தோல்விகள் தனிப்பட்டவரின் செயல்களையோ திறமையையோ பொறுத்தவையல்ல, அவனுடைய சக்திக்கு அப்பாலுள்ள சூழ்நிலைகளைப் பொறுத்துள்ளது என்னும் பெளதீக உண்மைதான் ஊழ்வினை என்னும் மதக் கோட்பாடாக வெளியிடப்படுகின்றது.”17
வர்த்தகத் தொழிலிலே ஏற்றஇறக்கங்கள் சகஐம். வர்த்தகமும் போட்டியும் உடன்பிறவிகள். பெரிய வியாபாரியைக் கூடச் சில சமயங்களில் நெருக்கடி விழுங்கி விடுகின்றது. இது அவர்கள் எதிர்பாராத விஷயம். ஆகவே யாவரையும் ஆட்டிப் படைக்கும் சக்தி ஒன்று அதாவது விதி, என்பன இருப்பதாக நம்புகிறார்கள். சில சந்தர்ப்பங்களிலே திறமையற்றவனும் நன்கு ஈட்டிக் கொள்கின்றான். இதுவும் ஊழ்வினைப் பயன் என்று கருதப்படுகிறது. வள்ளுவர் தத்ரூபமாக இதனைக் கூறுகிறார்.
“அகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி”18
பரியமேலழகர் விளக்கங்கூறுகின்றார்: ஒருவற்குக் கைப் பொருள் ஆதற்குக் காரனாமாகிய ஊழால் முயற்சி உண்டாகும்; அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழால் மடி உண்டாம்’ பொருளினது. வருகையையும் போகையையும் எடுத்துக் காட்டுவதன் மூலம், “சமுதாய வாழ்நிலைதான் நமது உணர்வை நிர்ணயிக்கிறது” என்னும், மார்க்சீயக் கூற்றுக்கு இலக்கணமாக அமைந்துவிட்டது குறள்.
வர்த்தகத் துறையிலிருந்து தோன்றிய இவ்வுண்மையை வாழ்க்கை முழுவதிற்கும் பொருத்துமாறு அமைத்து விளக்கக் கூறுவதே சிலம்பு கூறுஞ் செய்தியாம். அதன் சித்திரிப்பே காவியப் பாத்திரங்கள். சூழ்வினைச் சிலம்பு காரணம். இரட்டைக் காப்பியங்களைப் பற்றி எழுதும் ஆசிரியர் சிலர் அவை “அரசர் முதலியோரைக் காப்பியத் தலைவராகக் கொள்ளாமல் பொதுமக்களையே தலைவராகக் கொள்ளும் குடிமக்கட்”காப்பியங்களாக விளங்குகின்றன என்பர்.19 இக்கூற்று ஒரளவு உண்மையே. கோவலனும் கண்ணகியும் அவர்தம் தந்தையரான மாசாத்துவானும் மாநாய்கனும் சாதாரண பொதுமக்களல்லர் மாசாத்துவானை ‘இருநிதிக் கிழவன்’ எனவும் ‘உயர்ந்த செல்வத்தான்’ எனவும் கவிஞர் வருணிப்பர். கோவலன்-கண்ணகி மணத்தை ஊருக்கு அறிவித்து மங்கல நாண் வலஞ் செய்தபோது “வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன” என்றும் கூறுவர். அதாவது வெண்குடைகள் அரசன் உலாவெழுந்த படியாக எழுந்தனவாம். வணிகர் கேவலம் சாதாரண குடிமக்கள் அல்லர். தொல்காப்பியரும் மரபியற்சூத்திரங்களில் அரசருக்கும் வணிகருக்குஞ் சில சிறப்புக்கள் கூறுவா். இத்தகைய செல்வச் செருக்குள்ள வணிக வர்க்கத்தினர் தாஞ் சிறப்புற்ற காலத்தில் அரசனையுந் தமது செல்வாக்கிற்குள் “அடக்கி” வைத்திருக்கவே விரும்புவர். மன்னனை முதலாகக் கொண்டு அவன் மூலமாகத் தமது வர்க்கச் செயல் பாட்டை நடத்துவரேனும் மன்னனைகட்டுப்படுத்தவும் கண்டிக்கவும் தயங்கமாட்டார் என்பதை இருநூல்களும் காட்டும். சுருங்கக் கூறுவதாயின் “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்” என்னும் கோஷத்திற்குப் பின்னால்வணிகரின் வலிய கரங்களைக் காணலாம். தவிர்க்க முடியாதபடி அரசியல் இலக்கியமாகிறது. தனியதிகாரம் செலுத்தும் மன்னனைக் கண்டிக்கும் அந்தளவிற்கு இந்நூல்கள்‘சனநாயகக்’ காப்பியங்கள் தாம். ஆனால் அது வணிக வர்க்கத்தினருக்கே “சனநாயகம்” முழுச் சமுதாயத்திற்குமன்று, பண்டைய கிரேக்கரிடையே பெருமளவில் நடந்த இத்தகைய “சனநாயகப் புரட்சி” ஒன்றனை ஏங்கல்ஸ், “புதிய வணிகர்கள், கைத்தொழில் உடைமைக்காரர்” ஆகியோரின் புரட்சி எனக் கூறுவர்.20 கண்ணகி மதுராபுரிக்குத் தீ முட்டியதைப் புரட்சி என்று கூற முற்படுவது குழந்தைப்பிள்ளைத்தனமாக இருக்கும். ஆயினும் கண்ணகி வழக்குரை காதை ஆட்சியை ஆட்டங்காண வைத்த நிகழ்ச்சி என்பது மனங்கொள்ளவேண்டியதொன்று.
மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் செங்கோன்மையைப்பற்றிய சர்ச்சை காணப்படுவது யாமறிந்ததே. புகார்ப்பட்டினத்து தனவணிகர் குலத்திலே தோன்றிய காவலனுக்கும் மாதவிக்கும்பிறந்தவள் மணிமேகலை. சோழ மன்னன் தனது மகன் கொலையுண்டது சம்பந்தமாக மணிமேகலையைச் சிறைசெய்வதும் பின்னர் விடுவிப்பதும் இரு காதைகளிற் கூறப்படுவன. சிலப்பதிகாரத்திலே வழக்குரை காதையில், கண்ணகி நெடுஞ்செழியனைத் “தேரா மன்னா செப்புவ துடையேன்” என்று விளித்துக் குற்றஞ் சாட்டுகிறாள்; அவ்விடத்திலே தன்னை அறிமுகப்படுத்தும் பொழுது “’இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகள், கோவலன் மனைவி, கண்ணகி என்பது என் பெயர்’ என்று பெருமையுடன் கூறுவதும் நோக்கத் தக்கதே. குற்றமிழைத்த நெடுஞ்செழியனும், “தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலனாக, “யானோ அரசன், யானே கள்வன்” என்கிறான். இது ஆழ்ந்து சிந்தித்தற் குரியது. வணிக வர்க்கத்தினரின் கையோங்கிய காலப் பகுதியிலேயே மண்ணாள் வேந்தன் மீது குற்றஞ் சுமத்தி வெற்றியும்காணும் மனத் துணிவு ஏற்படும். ‘வணிக மக்கள் சிறப்படைந்த காலத்துக் காப்பியம்’ என்று கூறும் பொழுது இதுவே சிறப்பின் அடிப்படை என்று நாம் கொள்ளல் வேண்டும்.
செங்கோன்மை, நீதி முதலாய பிரச்சினைகளைப் போன்றதே தமிழகத்தை ஒற்றுமைப்பட்ட நிலப்பரப்பாகக் கொள்வதுமாகும். வணிக வர்க்கத்தினர் தமது வியாபாரத் தொழிலுக்குப் பரந்த சந்தையை விரும்புவர். உள்நாட்டு வணிகமும் பிறநாட்டு வணிகமும் அக்காலத்திற் சிறந்திருந்தன எனக் கண்டோம். அதனுடைய பிரதிபலிப்பே மூவேந்தரையும் இணைக்கும் காப்பிய முயற்சியாம். “கவியரசர் மூவேந்தர்களையும் சமமாகப் புகழ்ந்து கூறியுள்ளார்” என்பது உண்மையே.21 சிலப்பதிகாரப் பாத்திரங்கள் முடியுடை மூவேந்தரது தலைநகருடனும் தொடர்புடையவர்கள்; மணிமேகலையும் வஞ்சிக்குப் போகின்றாள். இதன் அடிப்படையிலேயே சிலம்பு தமிழக வேந்தர்கள் மூவர்க்கும் உரிய தாய்ப் புகார், மதுரை, வஞ்சி ஆகிய முப்பெரும் நகரங்களைக் காண்டப் பெயரிற் கொண்டதாய் விளங்குகின்றது. யாதுமூரே யாவருங்கேளிர் என்ற தத்துவமும் நடைமுறை விளக்கம் பெற்றுவிடுகின்றது. மூன்று நாடுகளின் செய்திகளும் வாணிபச் சிறப்பு முதலியனவும், அயல்நாட்டுத் தொடர்புகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
வணிக வர்க்கத்தின் எழுச்சி ஏற்பட்டதற்கு முதற் படியாக ஒரு மாபெரும் வேலைப்பிரிவினை நிகழ்ந்தேறியது எனக் கூறினோம். சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கும் போது, வாழ்க்கைலும் முரண்பாடுகளும் வெடிப்புகளும் தோன்றுகின்றன. வேத்தியல் பொதுவியல் எனக் கலை பாகுபாடடைகின்றது. இவ்வாழ்க்கை கலைவாழ்க்கை எனக் குடும்ப வாழ்க்கை பிரிவினைப்படுகிறது . கலை வாழ்க்கையையே தொழிலாகக் கொண்ட கணிகையர்உருவாகின்றனர். சான்றோர் செய்யுட்களிற் காணப்படும் பரத்தையருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சிலம்பும் மேகலையுங் காட்டும் கணிகையர் ‘விலையுயர்ந்த’ கலைப் பொருளைப்
‘பரிவர்த்தனை’ செய்பவராகக் காணப்படுகின்றனர். கலை விலைப்பொருளாக மாறிவிட்டது. வேந்தன் முன் அரங்கேறி தலைக்கோலிப் பட்டம்பெறும் கணிகையர் திலகத்தைக் கோவலன் போன்ற வணிகவர்க்கப் பெருமகனே ஆயிரத்தெண்கழஞ்சுப் பொன் பரிசு கொடுத்து ‘வாங்குதல்’ முடியும். சுருங்கக் கூறின் மற்றைய பொருள்களைப் போலவே கலையையும் விலைக்குரிய பொருளாக மாற்றிவிட்டது வணிக வர்க்கம். உடன் பிறந்தே கொல்லும் வியாதியாக அது நெருக்கடியைக் கொண்டு வருகிறது. பரத்தமை ஒரு சமுதாய நிறுவனமாகத் தோன்றி நிலைத்ததன் பயனாகத் தனிப்பட்டவருக்கு மட்டுமன்றி, நாட்டிற்கே கேடு ஏற்படுகிறது. கோவலன் வாழ்வு சிதைகின்றது. ஊழ் என்று சும்மா இருந்துவிடவில்லை இலக்கிய ஆசிரியர்கள். சாத்தனார் நேரடியாகவே பரத்தமையைக் கண்டிக்கின்றார். அதற்கு மேல் அவர் என்ன செய்வார்! மணிமேகலையைப் பொறுத்தளவில் துறவு மார்க்கத்தை இலட்சியமாகக் காட்டி விடுகின்றார். பரத்தமையை அதாவது வணிக வர்க்கத்தின் பெளதீகப் படைப்பை அவரால் மாற்ற முடியுமோ? எனினும் தத்தம் நோக்கிற்கேற்ப இரு ஆசிரியரும் சமாதானங்காண முற்படுகின்றனர். துறவு மூலம் துன்பத்திலிருந்து விடுபட வழிகாட்டுகின்றனர். கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் சமணத்துறவை மேற்கொள்கிறான்; கண்ணகியின் தந்தை ஆசிவகத்துறவைக் கைக்கொள்கின்றான்; மாதவியோ பெளத்த துறவி ஆகின்றாள். மணி மேகலையும் அவ்வாறே தாயைப் பின்பற்றுகின்றாள். ஆனால் பரத்தமை நிலை பேறுடையது என்பதைக் காட்டுவது போல மணிமேகலையில் சித்திராபதி முழுமூச்சுடன் தனது குலத் தொழிலைச் செய்து அதிலிருந்து வழுகுவது தவறு என்றும் கூறுகிறாள். சித்திராபதி, மாதவி, மணிமேகலை, கண்ணகி ஆகிய நான்கு பெண்கள் இரு நூல்களிலும் முக்கிய பாகந்தாங்குகின்றனர். கண்ணகி சிலம்பின் தலைவியாயின் மணிமேகலை, மேகலையின் பாட்டுடைத் தலைவியாவாள்.
சித்திராபதி பிரக்ஞைபூர்வமான பரத்தை. மாதவி, மணிமேகலை ஆகியோரின் துறவுச் செயல் அவளுக்கு விசித்திரமானதாகத் தோன்றுகின்றது.
“பத்தினிப் பெண்டீர் அல்லேம் பலர்தம்
கைத் தூண் வாழ்க்கை கடவிய மன்றே”22
எனக் கொதித்துக் கூறுகின்றாள். அவளது உணர்வு வாழ்க்கை நிவையினின்றும் தோன்றுவது.
மாதவி கணிகையாயிருந்து வாழ்க்கைச் சோதனையில் அடிபட்டு குலத் தொழிலைவிட்டுத் துறவியானவள். அறிவின் துணை கொண்டவள் அல்லள். உணர்ச்சி உந்த உணர்வு பூர்வமாக மாறியவள்.
“காதலனுற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன்”23
என்று தனது மனப்போராட்டத்தினை வயந்தமாலைக்குக் கூறுகின்றாள். அந்தளவில் பத்தினிப் பெண்ணாக ஆக முடியாதவள்.
மணிமேகலையோ மாதவி செய்ய முடியாததைச் செய்யும் வாய்ப்புப் பெற்றவள். புற நிலையில் வைத்து உலகத்தை நோக்கியவள். அறிவு பூர்வமாக விடுதலை பெற்றவள். மந்திரங் கொடுத்த காதையிலே மணிமேகலா தெய்வத்தின் சொற்களால் தனது காவியத் தலைவியை வருணிக்கின்றார் சாத்தனார்.
“அறிபிறப் புற்றனை அறம்பா டறிந்தனை
பிறவற முரைப்போர் நெற்றியுங் கேட்குவை
பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன்
திருவற மெய்துதல் சித்தமென் றுணர் நீ”24
எனப் பாராட்டப்பெறும் மணிமேகலை அறிவால் தனது பொறியிலிருந்து விடுபட்டவள்.
கண்ணகி சமுதாய நெருக்கடிக்குப் பலியானவள். இலக்கிய விமர்சகர்கள் கையாளும் பரிபாஷையிற் கூளுவதாயின் ‘நன்மையின் அழிவைப், அவளிடத்துக் காணலாம். கோவலனொடு இணைந்த குற்றத்திற்காகக் ‘கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாகமாறியவள். மனித நிலையில் இவளுக்கு இடமில்லை. தியாகச் சுடராகவே அவள் இறப்பின் பின்னர் போற்றப்படுகின்றாள்
இவற்றையெல்லாம் உற்று நோக்கும் பொழுது காப்பிய ஆசிரியர் இருவரது உள்ளமும் ஏக்கத்திலே தோய்ந்தமை புலனாகும். சாதிப் பாகுபாடு, செல்வச் சீரழிவு, தார்மீக வீழ்ச்சி ஆகியன மக்களையும் மன்னனையும் கீழே விழ்த்தி விடும் என்றும் இதற்கு ஊழ்வினை முதற்காரணமாக உள்ளது என்றும் இளங்கோ அமைதி காண முயன்றுள்ளார். ஆயின் இவையாவும் வெளித் தோற்றங்களே; பிணியின் அறிகுறிகளே. அடிப்படை நோய் வர்க்கப் பாகுபாடாகும். அதிலிருந்து காப்பிய ஆசிரியரும் விடுபட்டவர் அல்லவே! எனவே எதிர்காலமாவது நன்கு அமைதல் வேண்டும் எனக் கனவு கண்டனர். உதாரணமாக மணிமேகலை சில சமூகச் செய்திகளை எமக்குக் காட்டுகின்றது. பொருளாதார முரண்பாட்டின் காரணமாக நாட்டிலே பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வரிசெலுத்த முடியாதவர்கள் சிறையில் வாடுகின்றனர்.25பசியுறும் ஆருயிர் மக்கள் பலராவர்.26இவற்றிற்கு எதிராகக் குரல் எழுப்பினார் சாத்தனார். சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றும் தார்மீகப் புனருத்தாரணத்திற்கு வழிகோலினார். பசிக்கு உணவு அளிக்கும் பணியிலே மணிமேகலைன்ய ஈடுபடுத்தினார். மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது சாத்தனார் போதனை. இலக்கிய கர்த்தாக்களானஅவர்கள் வணிக வர்க்க அமைப்பிற்குள் சமுதாயச் சீர்திருத்தஞ் செய்யவிழைந்தனர். ஆனால் சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட பெருஞ்சமுதாய மாற்றமே அன்று தேவைப்பட்டது. அதனையும் பல்லவர் கால மக்கள் செய்து முடித்தனர். அது வேறு கதை.27
பேரரசும் பெருந்தத்துவமும்
தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும், கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் சீனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர். இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே “சைவ சித்தாந்தம்” என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய் கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஓப்பமுடிந்த உண்மை.1 திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டினைத்தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம். பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.
பல்லவர் காலத்திலே பொங்கிப் பிரவகித்த பக்தி இயக்கமானது ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைத் தோற்றுவித்தது. ஆனால் திருவுந்தியாரோடு தோத்திர முறைமை நீங்கிச் சாத்திர முறைமை தோன்றுகின்றது.3 திருவுந்தியாரை முழுமையான சாத்திர நூலெனக் கொள்ளுதல் முடியாது. திருக்களிற்றுப் படியார் உந்தியாரினும் அதிகமாகச் சாத்திரப் பண்பு அமையப் பெற்றது. சிவஞான போதமே முழுமையான சாத்திரப் பெருநூலாகும். எனவே இவற்றுள் ஒருவிதமான வளர்ச்சியை நாம் காணலாம். தத்துவத் துறையில் இவ்வகையான வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது சமய நிறுவனங்களும் உருமாறிக் கொண்டிருந்தன. இதுபற்றிப் பேராசிரியர் நீல கண்ட சாத்திரியார் மேல்வருமாறு கூறியுள்ளார்.
“......மத்திய கால இந்து சமயம் தென்னிந்தியாவிற்கு அளித்த இருபெருங் கொடைகள் கோயிலும் மடமும் ஆகும். சோழரின் ஆட்சிக்காலப் பகுதியிலேயே இவ்விருநிறுவனங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து சூழ் நிலைக்கேற்ப மாற்றமடைந்தன; இவை பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்தன; பணக்காரரின் ஆதரவைப் பெற்றன; இக்கவனமும் ஆதரவும் கிடைக்கவும், இந்நிறுவனங்கள் பெளத்த விகாரைகளையும், சமணப்பள்ளிகளையும் மிஞ்சியெழுந்தது, உறுதியான நிலைமையை அடைந்தன; இன்றுவரை உயர்நிலையை அவை பெற்றுவந்துள்ளன; விசயாலயன் மரபுச்சோழர் ஆட்சியிலே தென்னிந்தியாவிற் சைவசமயத்தின் பொற்காலம் தொடங்குகிறது எனக் கூறலாம்.”பேராசிரியர் சோழர்கால வரலாற்றறிஞர்; முதுபெரும் புலவர். அவர் கூற்று நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சோழர் காலத்தில் உயர் நிலையெய்திய சைவம், பெரிய கோயில்களையும் மடங்களையும் கண்டது; செல்வந்தரின் பேராகரவைப் பெற்றது. பிற சமயத் தாபனங்களையெல்லாம் விஞ்சியது; புதிய சூழ்நிலைக்கேற்ப மாறியது. நுணுக்கமான முறையிலே சோழா் காலப்பகுதியிலே சைவசமயம் பெற்ற சிறப்பையும் மாற்றத்தையும் கூறிவிட்டார் பேராசிரியர். ஆனால் இந்த நிலமை ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்னுங் கேள்விக்கு விடை கிடைப்பதில்லை. விடை காண முயல்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகம்.
நமது கேள்விகளை முதலிலே தெளிவாக்கிக் கொள்வோம். பேரரசு ஒன்று தோன்றிய பொழுது உடநிகழ்ச்சியாகப் பெருந் தத்துவம் ஒன்று தோன்றியது தற்செயலாக நடந்த நிகழ்சியா? அல்லது பேரரசிற்கும் அத்தத்தவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா? இருந்தால் அவ்வுறவு எத்தகையது? தத்துவம் தோன்றியதால் ஏற்பட்ட விளைவு யாது? அது மக்கள் வாழ்க்கையில் என்ன பாத்திரமும் பங்கும் வகித்தது? இவையே நம்மை எதிர்நோக்கும் சில முக்கியமான கேள்விகள். வரலாறு என்பது தற்செயலாக நிகழும் சம்பவங்களின் கூட்டுக்கணக்கு அன்று, சமுதாயத்திலே ஏற்படும் மாற்றங்கள்- வளர்ச்சிகள்-சில திட்டவட்டமான நியதிளுக்கேற்ப அமைகின்றன. சோழர் காலத்தில் ஏற்பட்ட இம்மாற்றங்களைத் தருக்க ரீதியான சில இயக்கங்களின் விளைவாக ஏற்பட்ட வளர்ச்சிகள் என்று நாம் காணமுடியுமாயின், நமது கேள்விகஞக்குத் தக்க விடைகள் கிடைத்துவிடும்.
சோழர் காலத்திலேற்பட்ட மாற்றங்களை நன்கறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றிற்கு வித்திட்ட பல்லவர் காலத்திலிருந்து நாம் நமது ஆராய்ச்சியைத் தொடங்கல் வேண்டும். பல்லவர் ஆட்சிக் காலத்திலே தமிழ் நாடெங்கும் உயிர்த்துடிப்புள்ள இயக்கமொன்று நடந்தேறியது.5 அவ்வியக்கம் பெரும்பாலும் சமணராகவிருந்த வணிக வர்க்கத்தினருக்கும், வைதிகர்களாக (சிறப்பாகச் சைவராக) இருந்த நிலவுடைமை வர்க்கத்தினருக்கு மிருந்த பொருளாதார முரண்பாட்டின் விளைவாகும். பல்லவ மன்னர் சிலரும், பாண்டிய மன்னரும் சமண, பெளத்த மதத் தத்துவங்களுக்கு அடிமைப்பட்டு, வணிக வர்க்கத்தினருக்கு நாட்டின் பொருளாதார வாழ்விற் பெரும் பாத்திரத்தைக் கொடுத்திருந்த காலையில், நிலவுடைமை வர்க்கத்தினர், சமுதாயத்திலே கீழ் நிலையிலிருந்த பல சாதி மக்களையும் ஒன்று திரட்டி ஓரணியிலே நிறுத்திப் “போர்” தொடுத்தனர். இந்த வர்க்கப் போரே, தத்துவ உலகில் சமண-சைவ மோதலாகத் தோன்றியது. “புறச்“ சமயத்தவருக்கு எதிராகக் கலகக் கொடியை உயர்த்திப் பிரசார முழக்கஞ் செய்த அரனடியாரும், ஆழ்வாரும், தமிழக மெங்கும், தமிழுணர்ச் சியையும், தமிழ் நிலப்பற்றையும் பெருக்கினர். தமிழரல்லாரான பல்லவர் ஆட்சி புரிந்ததுவும், வடமொழி, பிராகிருதம் முதலிய பிறமொழிகள் அம்மன்னரால் உயர்த்தப்பட்டதாகவும் பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டிலே ஒரு விதமான “தேசிய” உணர்வு தோன்றக் காரணமாக இருந்தன எனக் கொள்ளலாம். சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கோனாடு, மழ நாடு முதலியவற்றிலிருந்தெல்லாம் சிவனடியார்கள் பல்லவர் காலப் பக்தி இயக்கத்திலே பங்கு பற்றினர் என்பதைப் பெரிய புராணவாயிலாக நாமறிவோம்; அந்தனர் குறுநில மன்னர், சைவர், இடையர், ஏகாலியர், குயவர், சாலியா்,பாணர், புலையர், செக்கார், சான்றார், நுளையர், வேடர், மாத்திரப் பிராமணர், மற்றும் மரபறியாதவர் பலரும் ஒன்று சேர்ந்து கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி நின்றனர், என்றும் திருத்தொண்டர் புராணத்தின் மூலம்நாம் அறிகின்றோம். சுருங்கக் கூறின் தென்னகத்திலே வலுவுள்ள சோழராச்சியம் தோன்றுமுன்னரே அதற்கான தேவைகள் தோன்றிவிட்டன. அந்தத் தேவைகளின் காரணமாகவே சோழப் பேரரசு அமைந்தது எனலாம். விசயாலயன் அரசுகட்டிலேறிய காலத்திலே இது தொடங்கிவிட்டது. இதனைஇன்னுஞ் சிறிது விளக்குவோம். பல்லவர் காலத்திலே தமிழ் நாடெங்கும் நிலவுடைமையாளர் வணிகருக்கெதிராகப் போர் தொடுத்தனர்.
அது எதற்காக?
சங்கமருவியகால மளவில் பெரு வளர்ச்சியுற்ற வணிக வர்க்கத்தினர் பல்லவர் காலத்தின் முற்பகுதியிலே உச்சநிலையை யடைந்தனர். அவர்கள் பொருள் உற்பத்தியிலே நேரடியான பங்கு கொள்ளாத மக்கள் கூட்டமான-வர்க்கமாக-இருந்தனர். புறத்திலாயினுஞ்சரி பட்டினங்களிலாயினுஞ்சரி வாழ்ந்த விவசாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளருக்கும் இடையில் “தரகு” வேலை செய்த வர்க்கம் அது. தான் இல்லாமல் பிறருடைய பொருள்கள் பரிவர்த்தனையாகா என்ற ஓர் இன்றியமையா நிலைமையைவணிக வர்க்கம் சிருட்டித்திருந்தது. அதன் சாக்கில் அது செல்வத்தைக் குவித்து அதற்கேற்ற அளவில் சமுதாயத்திலே செல்வாக்கும் பெற்றிருந்தது. அதுமட்டுமன்று.
பரிவர்த்தனை செய்வதற்கேற்ற வணிகப் பொருள்களை-சரக்கை- அதிகரிப்பதிலேயும், ஏற்றுமதி செய்யக்கூடிய சரக்குகளையே சிரத்தையுடன் உற்சாகப்படுத்துவதிலேயுமே முழு நோக்கமிருந்தால் சிறு கைத்தொழில், விவசாயம், உணவுப் பொருள் உற்பத்தி வாழ்க்கைக்குத் தேவையான பொருளுற்பத்தியில் அக்கறை செலுத்தவில்லை. சிலப்பதிகாரமும் திருக்குறளும் நாலடியாரும் நமக்குப் பல்வேறு வகைகளில் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. வளர்ந்து வரும்-புதிய வணிக வர்க்கத்தின் பண்பு பற்றி பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தெளிவாக வருணித்துள்ளார்.6
“………………..அத்துடன் உலோகப்பணம்-அதாவது, நாணயங்கள் உபயோகத்திற்கு வந்தது. இத்துடன் உற்பத்தியிலீடுபடாதவன் உற்பத்தியாளன் மீதும் அவன் செய் பொருள்களின் மீதும் ஆட்சி செலுத்துவதற்கு ஒரு புதிய சாதனமும் வந்து சேர்ந்தது. சரக்குகளுக்கெல்லாம் சரக்காக, மற்றச் சரக்குகளையெல்லாம் தன்னுள் மறைத்து கொண்டிருக்கிற ஒரு சரக்குக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. விரும்பத்தக்க எந்தப் பொருளாகவும் தேவைப்படுகிற எந்தப் பொருளாகவும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் தாயத்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. யாரிடம் அது இருந்ததோ, அவனே உற்பத்தி உலகை ஆண்டான்……..செல்வத்தின் அவதாரமாக இருக்கும் இத்துடன் ஒப்பு நோக்கும் போது மற்றச் செல்வ வடிவங்கள் எல்லாம், வெறும் நிழல்களே என்று நடைமுறையில் வியாபாரி நிரூபித்துக் காட்டினான்.”
உண்மையிலே “வெறும் நிழல்களாக” நிலவுடைமையாளரும், அவருக்கும் கீழே பழைய “நாகரிகத்தின் மிச்ச சொச்சங்களாக இருந்தவர்களுமே வியாபாரிகளுக்கு எதிராகப் போர் தொடங்கினர். இது தென்னகத்திற்குப் பொதுவாக இருந்த வர்க்க நிலமை; அல்லது பொருளாதார அமைப்பு என்று கூறிக் கொள்ளலாம். இந்தப் போரின் முடிவில் நிவவுடைமை வர்க்கத்தினர் வென்றனர்; சமணர் கழுவேற்றப்பட்டது உண்மையோ, பொய்யோ, அவர்தம் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்கிய வியாபாரிகள் வர்க்கம் நிலைகெட்டது என்பது உண்மையே. இத்தகைய ஒரு வரலாற்றுக் கட்டத்திலேதான் சோழப் பேரரசு அரும்புகிறது, அதுபேரரசு ஆகுவதற்குரிய அத்தனை தேவைகளும் அங்கேயே காணப்பட்டன. அவை யாவை ?
முதலாவது வெற்றிபெற்ற நிலவுடைமை வர்க்கத்திற்கு உறுதியும் நிலைபேறுமுள்ள அரசியல் நிறுவனம் ஒன்று தேவையாக இருந்தது. முத்தரையர் போன்ற பழைய குறுநில மன்னரும், நிருபதுங்கன் பலவீனமான பல்லவரும், சிறீமாற சிறீவல்லபன் போன்ற பாண்டியரும், விசயாலயன் போன்ற சோழச்சிற்றரசரும், கங்கமன்னரும் பிறரும்ஒயாமல் போரிட்டுக் கொண்டிருப்பது பாதகமானச் செயலாக்கப்பட்டது. உறுதியும் பலமும் கொண்ட நிலப்பரப்பு அவசியமாயிருந்தது. பண்டைப் புகழ்படைத்த பாண்டியரால் அதனைச் செய்ய முடியவில்லை. அன்றைய அரசியற் சதுரங்கத்தில் விசயாலயச் சோழனை அடுத்து வந்தவர்கள் அதனைச் செய்தனர். வடக்கிருந்து வந்து வந்து படையெடுத்த இராட்டிர கூடரைத் தடுத்து நிறுத்தி, வேங்கி இராச்சியத்தை இணைத்து, கங்கநாட்டை அடிபணியச் செய்து, வடக்கேயுள்ள துங்கபத்திரைக்குக் கீலே சோழர் தம் பலத்தைக் காட்டினர். கி.பி. 985-ம் ஆண்டில் அரசுகட்டில் ஏறிய அருள்மொழிவர்மன் எனப்பட்ட முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலே சோழப் பேரரசு சோழஏகாதிபத்தியமாக மாறத் தொடங்கி விட்டது. தன்னை எதிர்த்த பாண்டிய-சேர-ஈழ-நாடுகளின் ஒருமித்த முயற்சியை அவன் முறியடித்தான்; இரண்டு படையெடுப்பு களின் போது அவன் பாண்டியரை வென்று, சேரமன்னர் கர்வத்தையடக்கினான். காந்தளூரிலும் சேரர் பெருந்தோல்வியுற்றனர். அடுத்துக் கடற்பனடயெடுப்பின் மூலம் வட இலங்கையைக் கைப்பற்றினான். தலைநகராகிய அனுராதபுரத்தை அழித்துப் புலத்தி நகரத்தை- பொலன்னறுவையை ஈழமண்டலத்தின் தலைநகராக்கினான். வடக்கே நுளம்பபாடி, கங்கபாடி, தடிகைபாடி முதவிய பிரதேசங்களையும், இன்றைய மைசூரின் பெரும்பகுதியையும் கைப்பற்றினான். தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் மாலைதீவுகளையும் வென்றான். கிகி.பி. 1014-ல் கட்டி முடிக்கப் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் புகழ்மணந்த புவிச்சக்கரவர்த்தியின் புகழ்ச்சின்னமாக விளங்கியது. கி.பி. 1014-ல் பட்டத்திற்கு வந்த முதலாம் இராசேந்திரன் தந்தைக்கேற்ற தனயனாக மிளிர்ந்தான். அவன் ஆட்சியில் சோழ பேரரசானது அக்காலத்திலேயே மிகப் புகழ்வாய்ந்த பேரரசாகவும், தலையாய இந்துப் பேரரசாகவும் விளங்கியது.7 இராசேந்திரன் ஆட்சியிலேயே சோழக் கடற்படைகள் ஸ்ரீவிசயப் பேரரசுமீது படையெடுத்து மலாயா, ஜாவா, சுமாத்திரா முதவிய பகுதிகளில் தமது ஆதிபத்தியத்தை நிலைநாட்டின சீன தேசத்திற்குப பல ‘தூது’க்குளுக்கள் சென்று மீண்டன. வடக்கே கலிங்க நாட்டின் மீது படையெடுத்துக் கங்கைக் கரையில் அவன் படைகள் நீராடி மீண்டன. இத்துணை மகோன்னதமான வரலாற்று நிகழ்ச்சிகளும் சோழப் பேரரசின் அமைப்பைப் பாதித்தன. அவற்றைச் சற்றுத் தெளிவாக நாம் நோக்குதல் வேண்டும்.
விசயாலயன், பராந்தகன் முதலியோர் காலத்திலே பத்தொடு பதினொன்றாக சோழ இராச்சியம் சோழப் பெரு மன்னர்களாகிய இராசராசன், இராசேந்திரன் காலத்தில் ஏகாதிபத்தியமாக மாறியதனை- அதன் படிமுறை வளர்ச்சியை சுருக்கமாகப் பார்த்தோமல்லவா? தென்னக வரலாறு முன்பு கண்டு கேட்டறியாத இம்மாற்றங்கள் பல புதிய சக்திகளுக்கு ஏற்ற களமாக அமைந்தன. முத்தரையர், போன்ற பழைய குடும்பங்கள் மறைந்தன; பாண்டியர், சேரர் இழிநிலையெய்தினர்;நாடுகளின் எல்லைகள் தலைகீழாயின. புதிய பெயர்கள் தோன்றின. இவற்றைச் சோழரின் தரைப்படைகளும், கடற்படைகளும் செய்து முடித்தன. ஆனால் அவை தொடக்கத்திலே இருந்தன அல்லவே. சோழப் பேரரசு அகல அகலப் படைகளும் அதிகரித்தன. வீரம் செழிக்க விளை நிலங்கள் தோன்றின. இந்த இடத்திலேதான் பல்லவர் காலத்திலே வர்க்கப் போராட்டத்தில் தலைதூக்கிய நிலவுடைமையாளரை நாம் மீண்டுஞ் சந்திக்கப் போகின்றோம்.
கடலிலும் தரையிலும் நடந்த பல்வேறு போர்கள் எண்ணரிய வாய்ப்புக்களைப் பலருக்கு அளித்தன. போரிலோ நிர்வாகத்திலோ அரசசேவையில் அநேகம் பேர் ஈடுபடச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.பேரெழுச்சி ஒன்றனைத் தொடர்ந்து, தொடர்யுத்தங்கள் நடாத்தப்படும் பொழுது புதிய புதிய சேனைத் தளபதிகளும் நிர்வாகிகளும் சந்தர்ப்பத் தேவைகளினாலும் சூழ்நிலைகளினாலும் உந்தி மேலெறியப்படுவது உலக வரலாற்றிற்குப் புதியதன்று. அலெக்சாந்தர் மன்னனின் தொடர்யுத்தங்களின் விளைவாகப் புகழ்பெற்ற படைத்தலைவர் பலர்; நெப்போலியன் காலத்தில் பிரெஞ்சு நாடு அளித்த மகாசேனாதிபதிகள் பலர். அதைப் போலவே இராசராசனும், இராசேந்திரனும் தொடுத்த போர்களின் போது தமது வீரத்தையும் திறமைனயயும் துலக்கி மன்னர் பாராட்டைப் பெற்றோர் பலர். இவர்களிற் பெரும்பாலானோர் நிலவுடைமைக் குடும்பங்களிலிருந்து சென்ற தீரமிக்க இளைஞர்களே. தத்தம் செல்வாக்கில் இருந்த “ஆள்பலத்துடன்” போர்முனை சென்று, பின்னர், புகழ்பூத்த படைத்தலைவர்களாக வாகை சூடியோர் பலர். சுருங்கக் கூறின் சோழப் பேரரசு புதியதொரு நிலப்பிரபுத்துவத்தைத் தோற்றுவித்தது. அன்றைய ஆட்சிமுறையிலேயே நிர்வாகம், இராணுவசேவை, நீதிபரிபாலனம் என்ற வேறுபடுத்தப்பட்ட துறைகள் இருக்கவில்லை. ஒருவரே பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று துறைகளிலும் கடமையாற்ற முடிந்தது. இராசராசன் மகள் குந்தவ்வையைமணந்த வந்தியத் தேவர், கலிங்கப் போரில் களம் வென்ற கருணாகரத் தொண்டைமான், சிதம்பரத்திற்குப் பொன்னோடு வேய்ந்த நரலோக வீரன் முதலிய சோழர் காலப் பெரும் பெயர்ச் சேனைத் தலைவரெல்லாரும் மேற்கூறிய புதிய நிலப்பிரபுத்துவத்தைச் சேர்ந்தவர்களே. தமக்குச் சேவை செய்த அதிகாரிகளுக்கும் படைத்தலைவருக்கும் சோழப் பேரரசர்கள் விருதுகளும், பட்டங்களும் வழங்கி ஊக்குவித்தனர். மாராயன், பேரரையன், மூவேந்த வேளான், காடவராயன், நாடாள்வான், விழுப்பரையன், சேதிராயன், சோழகோன் முதலியன அவற்றுட் சில.9 திறமையுள்ள எவரும் உயர்நிலையடையச் சந்தர்ப்பங்கள் பல இருந்தனவாயினும், உயர்குடிப் பிறப்பும், செல்வ வசதியும் அரச சேவைக்கு ஒருவரை இலகுவில் அருகராக்கின என நாம் நம்பஇடமுண்டு.10 சோழர் காலத்திலே வேளாளர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நிலவுடைமையாளர் அவரே. நரலோக வீரன், பழுவேட்டரையர் போன்றோரெல்லாம் வேளான் குடி மக்களே. போரிலும்,நிர்வாகத்திலும், பிற அரசகருமங்களிலும் சேவை செய்தவர்களுக்குச் சோழப் பெருமன்னர் மானியமாகப் பல நிலங்களை வழங்கினர். சில்லறை (சிறுதரம்) உத்தியோகங்கள் பார்த்தவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்டதுண்டு. எனினும் பெரிய பிரபுக்கள் யாவரும் அரசனிடமிருந்து தம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத்தக்க முறையில் “நிலம்” பெற்றவராவர். நடைமுறையில் பேரும் புகழும் நிலவுடைமையாளர் சீவிதமான நிலத்தைத் தமது சந்ததியினரும் அனுபவிக்கத்தக்க, இறையிலியாகப்பெற்றனர். அது மட்டுமன்றித் தமக்கேயுரிய காணிகளும் அவர்களுக்கிருந்தன. அந்நிலங்களைக் குடியானவரைக் கொண்டு உழுதுவித்தும் வந்தனர். இதன் காரணமாக இவர்களைப் பெருங்குடிகள் என்றும் அக்காலத்தில் வழங்கி பிற்கால உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் உழுதுண்போர், உழுதுவித்துண்போர் எனப் பாகுபடுத்தியிருப்பது அவதானிக்கத் தக்கது.
சோழப் பேரரசின்கீழ் பூரணத்துவம் பெற்ற இந்நிலவுடைமை முறையினையே வரலாற்றாசிரியர் நிலமானிய முறை (Feudal order) என்பர். இந்த அமைப்பு முறையினை நாம் நன்கு அறிந்துணர்ந்து கொண்டாலன்றிப் பேரரசு தோன்றிய அக்காலப் பகுதியிலே பெருந்தத்துவமான சைவசித்தாந்தம் ஏன் தோன்றியது என்பதற்கு விடை காண மாட்டோம்.
நிலமானிய முறை என்றால் என்ன?
‘நிலம்’, ‘மானியம்’ என்னும் இரு சொற்களும் இம்முறையில் முக்கியமாயுள்ளன. மனிதன் தன்னுடைய நாகரீகப்படிகளின் பாதையில் சில பிரதானமான படிகளைக் கடந்து வந்துள்ளான்; புராதன மனித சமூகம் சிறுச்சிறு குழுக்களாக இயற்கையின் மத்தியில் வாழ்ந்த நிலையிலே கூட்டுமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கூட்டாக உபயோகிக்கும் புராதனப் பொதுவுடைமை நிலவியது; பின்னர் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியையொட்டி, அடிமைச் சமூகங்கள் தோன்றின; அங்கே வர்க்க வேறுபாடுகளும் வலுத்தன. மேலோராகக் கருதப்பட்ட ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராகக் கீழோராக மதிக்கப்பட்ட சாதாரண மக்களின் போராட்டம் நாளடைவில் வென்றது. அதன் விளைவாகவே நிலப் பிரபுத்துவம் தோன்றியது; அங்கே நிலவிய பொருளாதார அமைப்பினையே நிலமானிய முறை என்று கூறுகின்றோம். அது பொருளுற்பத்தியை அடிப்படையாகக் கொண்டதே.
மனிதனுக்குக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும்
மனிதர்கள், பொருள் உற்பத்திப் பணியில் ஒருவரோடு ஒருவர் உறவு
கொள்வதனையே சமூக விஞ்ஞானிகள் உற்பத்தி உறவு என்கின்றனர்.
அது ஒருவருக்கொருவர் மனமார விரும்பி உதவிக் கொள்ளும் உறவாக
இருக்கலாம் அல்லது, ஒருவர் பிறிதொருவர் ஆணைக்குக் கீழ்ப்படியும்
உறவாகவும் இருக்கலாம். எவ்வாறாயிருப்பினும், மனிதருக்கிடையே
பொருள் உற்பத்தித் துறையில் உறவு ஏற்படுகிறது. இவ்வுறவே சமூக
உறவாகவும் அமைந்து விடுகிறது. அடிப்படையின்
துணைகொண்டு பார்த்தால் நிலமானிய முறையிலே பொருள் உற்பத்தி
உறவானது நிலப்பிரபுவின் உடைமையாக உற்பத்திச்சாதனங்கள்
அமைந்திருப்பதிலே தங்கியுள்ளது. உலகமெங்கும் நிலவிய நிலமானிய
முறையை நன்கு ஆராய்ந்தவர்கள், நிலமானிய முறையானது மன்னர்கள்
தமக்குப் புணிசெய்தவர்களுக்கு தொடக்கத்திலே போரில்
மானியமாகக் கொடுக்கும் நிலவுரிமையினையே குறிக்கும் என்பர்.
நிலத்தில் உழவுத் தொழில் செய்த பண்ணையாட்கள் அரசனிடமிருந்து
மானியம் பெற்ற பிரபுவின் ஆணைக்குள் இருந்தனர். ஆயின் அவர்கள்
பிரபுக்களின் அடிமைகளாகக் கூறப்படவில்லை. சில தேசங்களில்
பண்ணையடிமைகள், வாங்கி விற்கப்படும் சரக்காகக் கணிக்கப்பட்டனர்.
எனினும் நிலப்பிரபுத்துவ அமைப்பில் பண்ணையாட்கள், குடியானவர்கள்,
நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனரே யன்றிப் பெரும்பாலும்
அடிமைகளாகக் கொள்ளப்பட்டவர்களல்லர். பழைய அடிமை
நிலையிலிருந்து விடுபடுவதற்காகவே வியாபாரிகளுக் கெதிராகவும்,
குழுத் தலைவர்களுக்கெதிராகவும் அடிமைகள் போர் தொடுத்திருந்தனர்.
நிலமானிய முறையிலே பண்ணை வேலையாள் பழைய அடிமை
நிலைக்கும் ‘சுதந்திர’ நிலைக்கும் இடை நடுவே இருந்தான். நிலத்தில்
தனக்கும் ஓரளவு அக்கறைஇருந்தமையால் ஊக்கத்துடன்
உழைத்தான். மன்னனுக்குப் பணிந்தும், உதவிகள் செய்தும்
நிலப்பிரபு தனது சுகம் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொண்டதைப் போலவே, நிலமானிய முறையில் வாழ்ந்த பண்ணையடிமைகளும், சில கைத்தொழிலாளரும், நிலப்பிரபுவிற்குக் கொடுத்து எஞ்சிய பொருள்களைத் தமதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இவர்களை ஒருவகையான வாரக் குடிகள் என்று இக்கால வழக்கில் வேண்டுமானால்நாம் கூறலாம். சோழர் காலத்திலே இதனைக் காராண்மை என்று வழங்கினர்.12 உழவுத் தொழிலையே தொழிலாக (குடும்ப மரபு) மேற்கொண்டு வந்த குடிகளுக்கு உள்ள நிலவுரிமையை “வெள்ளான்” வகை என்றழைத்தனர். அவற்றையெல்லாம் பின்னர் கவனிப்போம். இங்கே நிலமானிய முறையின் முக்கியமான அம்சங்களை நோக்குவோம்.
நிலமானிய முறை அமைப்பிலே உற்பத்தி உறவுகள் செம்மைப்பட்டமையால், உற்பத்தி பெருகியது. விவசாயம் பெருவளர்ச்சியுற்றது; புதிய புதிய நிலங்கள் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டன. செய்கை முறையிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட்டன. விவசாய வளர்ச்சியின் அருகருகே சிறு கைத்தொழல்களும் துரித வளர்ச்சியுற்றன. உழவுத் தொழிலுக்குத் தேவையான கருவிகள் பெருகின. பிரபுக்களும், வியாபாரிகளும், பேரரசும் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருட்கள் கூடியளவு உற்பத்தி செய்யப்பட்டன. போர்களையொட்டிப் போர்க்கருவிகளும் தளவாடங்களும் திருந்தின: கப்பற்போக்குவரத்து முன்னெப்பொழுதும் காணாத பெருநிலையையடைந்தது. இந்த மாற்றங்கள் யாவும் அக்கால வர்க்க அமைப்பைப் பெரிதும் பாதித்தன. நிலத்தை உரிமையாக உடையவர்கள் ஆளும் வர்க்கத்தினராக நிலைபெற்றனர், அவர்ளுக்கு எதிராகப் பண்ணையடிமைகள் மற்றொரு வர்க்கத்தினராக இருந்தனர். சுருங்கக் கூறின் ஆண்டான்-அடிமை உறவு உருவாகியது.
நிலமானிய முறையின் பொருளாதார அடிப்படை இவ்வாறிருக்க,
அதன் அரசியல்-ஆட்சிமுறை-வடிவத்தில் இருவளர்ச்சிப் படிகளைக்
காணலாம் என்று வரலாற்றாசிரியர் கருதுவர். தொடக்கத்திலே-
அதாவது முதலாவது கட்டத்திலே-நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழேயுள்ள
மக்களுடன் நேரடித் தொடர்புள்ளவராக இருந்தனர். தமது சிறுபடையுடன்
போர்க்களங்களுக்குச் சென்று மீண்டனர்; தமது சிறிய நிலப்பரப்பின் மீது
பூரண ஆதிக்கஞ் செலுத்தினர்; சுருங்கக் கூறின் நிலப்பிரபுக்கு ஒரு ‘குட்டி’
இராசாவாக இருந்தான். நாட்டின் வழமைகள் யாவரையும்
கட்டுப்படுத்தின. இரண்டாவது நிலையிலே-வளர்ச்சியுற்ற நிலையிலே-
ஆட்சி முறையானது அழகாக அமைந்த ஒரு கூர்நுதிக் கோபுரம் போலக்
காணப்பட்டது. அரசனுக்கும் பிரபுக்களுக்கு மிடையேயிருந்த உறவு
நன்கு பிணைக்கப் பெற்றது. உறவுகள் யாவும் சங்கிலிப் பின்னலாகத்
தொடர்பு பெற்றன. உச்சியிலே கலசம்போலப் பேரரசன் விற்றிருந்தான்.
கீழே வரவர, அகன்று அகன்று ஆகக் கீழ்க்கற்களாகப்
பண்ணையடிமைகளும் சாதாரண சிறு கைத் தொழிலாளரும் இருந்தனர்.
யாவும் மத்திய ஆட்சியின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. அதே
சமயத்தில் கீழே போகப்போக உரிமைகளும் கடமைகளும்
தெளிவாக்கப்பட்டன. சோழப் பேரரசின் மகோன்னதமான வளர்ச்சியிலே
இவ்விரு வளர்ச்சிப்படிகளையும் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.
விசயாலயன் காலத்துக்கு முன்னிருந்து சுந்தரச்சோழன் ஆட்சிவரை
முதற்படிக் காலமெனக் கொண்டால், இராசராசன் ஆட்சிக் காலத்தில்
இரண்டாம் படி தொடங்குகிறது எனலாம். இந்தப் படி முறை
வளர்ச்சியானது பெரும்பாலும் சுமுகமான முறையிலேயே நடைபெற்றது என்பர் வரலாற்றசிரியர்.14
அதற்குச் சமயமும் தத்துவமும் வெவ்வேறு வகைகளில் உதவியுள்ளன. மத்திய கால ஐரோப்பாவில் கத்தோலிக்க சமயமும், தத்துவமும் இம்முறைக்குச் சிந்தனைப் பக்கபலமாக அமைந்தன. சில பழைய கருத்துக்களும் புத்துயிர் பெற்றுக் கைக்கொள்ளப்படுவதுண்டு.
நிலமானிய முறை எந்த நாட்டிலே நிலவியிருப்பிலும் முதிர்ச்சிப் பருவத்திலே சில பொதுப்பண்புகள் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலே முதன் முதலாக நிலமானிய முறை பூரண வளர்ச்சியுற்றது இங்கிலாந்திலாகும். ஏறத்தாழ அதே காலப் பகுதியிலேயே தென்னிந்தியாவிலும் நிலமானிய முறை பெரு வளர்ச்சியுற்றது. பலவகைகளில் இரண்டிற்க்கும் நெருங்கிய ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. உவில்லியம் மன்னன் தலைமையில் போர்மானியர் பதினோராம் நூற்றாண்டிலே இங்கிலாந்தைக் கைப்பற்றியதோடு, அங்கு நிலமானிய முறை நடைமுறைக்கு வந்தது. குறுகிய காலத்தில் கைப்பற்றப்பட்டு, புதிய ஒரு அரசியல் முறை நிறுவப்பட்டதன் காரணமாகப் பல நாடுகளைவிட இங்கிலாந்தில் நிலமானிய முறை பெருவளர்ச்சியுற்றது.15 சோழப் பேரரசும் அவ்வாறே; சோழப் பேரரசு சிறப்பாயிருந்த காலத்தே இந்தியாவிலே வேறெந்த இராச்சியத்திலாவது உள்ளூர் ஆட்சி சோழர் ஆட்சியிற் காணப்பட்டது போல வளர்ந்ததில்லை. நிலமானிய முறைளின் நலன்கள் அங்கு தலைசிறந்து விளங்கின. இந்தச் சந்தர்ப்பத்திலே, இங்கிலாந்து நாட்டின் நிலமானிய அமைப்பின்
உச்சநிலையிற் காணப்பட்ட சில அம்சங்களைக் கவனிப்பது சுவை பயப்பதாகும். அது நமது ஆராய்ச்சிக்குப் பேருதவி புரிவதாகவும் இருக்கும். மாரியன் கிப்ஸ் என்னும் ஆசிரியர் மேல் வருமாறு கருத்துக்களைக் கூறியுள்ளார்.16
“விவசாயிகளை நிலப்பிரபுக்கள் சுரண்டுவதால் சமூகப் பிளவு ஏற்பட்டது. அதுவே முக்கியமான வர்க்கப் பிரிவாக இருந்தது. நிலப்பிரபுக்களில் ஒரு பிரிவினர் போர் வீரர்களாக இருந்தனர்: மற்றொரு பிரிவினர் மத குருமாராக இருந்தனர்: வாளும் சிலுவையும் அவர்கள் மக்களைப் பாதுகாத்தனர்; அதாவது சமூகத்திலே தமக்கிருந்தஉரிமைகளுக்கு சலுகைகளுக்கும் சமாதானமாக அவ்வாறே கூறினர். பண்ணை விசாயிகள் தத்தம் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்த அதே வேளையில், உழுது வித்துண்போரின்- நிலப்பிரபுக்களின்- பெரிய நிலங்களில் வலாற்காரப் படுத்தப்பட்டு அல்லது கூவிக்கு உழைத்தனர். நிலப்பிரபுக்களும், பெருங்குடிகளும் உற்பத்தியில் காட்டிய ஊக்கத்தினால் சரக்குப் பரிவர்த்தனை வளர்ந்தது; போகப் பொருள்களின் உற்பத்திமுறையும் உடன் வளர்ந்தது. உள்ளூர் வணிகமும், தூரதேச வணிகமும் காணப்பட்டன. ஆனால் நிலமானிய முறையின் உச்சிப்பொழுதிலே கூட, வியாபாரப் பெருக்கம் இராச்சிய ஒருமைப்பாட்டிற்கு அதிகம் உதவவில்லை. குக்கிராமங்களும், சிறு நகர்களும் நிறைந்த அன்றைய இங்கிலாந்தானது ஆங்காங்குச் சிதறுண்டு கிடந்த வயல்களையும், பள்ளத்தாக்குகளையும், நாட்டுப்புறங்களையுமே, ஆதாரமாகக் கொண்டியங்கியது. இவையே மக்கள் தம் அன்றாட வாழ்வில் ஒருமைப்பாட்டையளித்தன. மரபு வாழ்க்கையே தலை தூக்கி நின்றது. இதன் காரணமாக இன்றிருப்பதைவிடப் பன்மடங்கு அதிகமாகத் தலவாழ்க்கையே- தலஉணர்வே- காணப்பட்டன. இதன் விளைவாக வர்க்கப் போராட்டங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. நகரங்களிற் காணப்பட்ட சிக்கலான பல முரண்பாடுகளும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் பண்ணையடிமைகள் காட்டிய எதிர்ப்பும் ஆங்காங்கு வெளிப்படையாகவும் இலைமறைகாயாகவும் தோற்றினும் பொதுவாக வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டிருந்தது. விவசாயிகள் தனித்தனிப் பிரிவுகளில் வாழ்ந்தமையால் பரந்த இயக்கங்களில்லாமற் போயின. அவரவருக்குரிய இடம் வகுக்கப்பட்டது. பிரிந்து சிதறுண்டு கிடந்த இப்பெரிய விவசாய சமூகத்திற்கு எதிராகவும் நகரங்களிலேதமது பிரத்தியேகமான நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த நகரத்தாருக்கு மேலாகவும், ஒரு வர்க்கம் இருந்தது. பெருங்குடி மக்களும், குருமாரும், மன்னரும் அந்த வர்க்கத்தினராவர். அவர்கள் யாவரும் அரசியல் உணர்வு நிரம்பிய- தமது வர்க்க நலன்களை உணர்ந்த- கூட்டத்தினராக இருந்தனர்......இந்நிலையில் அவர்கள் கடல் கடந்த நிலப்பரப்புக்களின் மீது பார்வை செலுத்தினர்; இவ்வாறு பிளவுண்டு கிடந்த- வர்க்கபேதமுற்றுக்கிடந்த- சமுதாயத்தின் உறவுமுறைகளை அங்கீகரித்தும், இலட்சியபூர்வமானதாகக் காட்டியும்..... திகழ்ந்தது நிறுவன வடிவிற் காணப்பட்ட உரோமன் கத்தோலிக்க திருச்சபை. நீதியைப் பற்றி அது கூறியது; சகல துறைகளிலும் கருத்து மயக்கத்தை உண்டுபண்ணியது. சமுதாயத்தில் உயிர்த்துடிப்பைக் காட்டி.யது. கத்தோலிக்க திருச்சபையும் தன்னளவில் மிகப்பெரும் நிலவுடைமை நிறுவனமாகவே விளங்கியது; நிலப்பிரபுத்துவ அமைப்பின் பொருளாதார, சமூக, அரசியல் அமைப்புக்களினூடே பிரிக்க முடியாதபடி பின்னிப்படர்ந் திருந்தது கத்தோலிக்க திருச்சபை.”
ஆசிரியர் கிப்ஸ் இங்கிலாந்து நாட்டிலே நிலவிய நிலமானிய அமைப்பைப் பற்றிக் கூறியுள்ள இக்க்ருத்துக்கள் சில மாற்றங்களுடன் சோழர் காலத் தமிழகத்திற்கும் பொருந்தும் எனத்துணிந்து கூறிவிடலாம். கத்தோலிக்கத் திருச்சபைக்குப் பதிலாகத் “கோயில்” என்று கூறினால், மிகுதியாவும் பொதுவே.
இனி, சோழர்காலத் தமிழகத்தின் நிலப்பிரபுத்துவத்தைச் சிறப்பாக ஆராய்ந்து, உலகப் பொதுப் பண்புகளோடு ஓப்பிட்டு, அதிற்சமயத்தின் பங்கினை நிர்ணயிப்போம்.
சோழப் பேரரசு வளர வளர, நாட்டிலே புதிய நிலப்பிரபுத்துவமும் நிலமானிய முறையும் வளர்ந்தன என்றும், வேளாளர் கை ஓங்கியது என்றும் முன்னர் கண்டோமல்லவா? அதன் விளைவாகச் சோழப்பேரரசிலே நிலவுடைமையாளர்- வேளாளர்- வர்க்கமே தலையாய வர்க்கமாகியது. “உடையான்”, ‘கிழான்” முதலிய அக்காலச் சொற்கள் நிலத்தை உடையவன், நிலக்கிழான் என்றே குறித்து நின்றன. புவிச்சக்கரவர்த்திகளாக விளங்கிய சோழப் பெருமன்னரே தம்மை “உடையார்” என்று பெருமையுடன் கல்வெட்டுக்களிற் கூறியுள்ளனர். சோழ அதிகாரிகளைப்பற்றிக் கூறப்படும் இடங்களில், தத்தனூர் மூவேந்த வேளான், கம்பர் மூவேந்த வேளான், வேளான் குடி முதலான (நரலோக விரன்) என்றெல்லாம் கல்வெட்டுக்கள் சான்று தருகின்றன. கோன், நாடன், கூத்தன், ஏறு அரையன் முதலிய சொற்களைக் கொண்டு முடியும் பெயர்கள் பல அன்று செல்வாக்கோடு விளங்கிய வேளாளர் வா்க்கததைச் சோ்ந்தவா்களையே குறிப்பன.17 வேளாளா் மிகவும் நுண்ணிய முறையிலே தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். அதற்குக் கருவியாக அமைந்ததே கோயில். உண்மையில் சோழப் பேரரசில் தலையாய வர்க்கமாகத் திகழ்ந்த வேளாளரின் பொருளாதாரச் செழிப்பையும், அரசியல் மதி நுட்பத்தையும் நன்கறிவதற்குச் சோழர் காலக் கோயில்களைப் பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்வது அவசியம்.
சோழர் காலத்திலே நிலப்பிரபுக்கள் சீவிதமாகவும்
இறையிலியாகவும் பெருவாரியான நிலங்கள் பெற்றதைப் போலவே,
சிவன் கோயில்களும், திருமால் ஆலயங்களூம், மடங்களும் தானமாகப்
பெருமளவு நிலங்களைபெற்றன. சிவன் கோயில் நிலங்கள் தேவதானம்
எனவும், விஷ்ணு கோயில் நிலங்கள் திருவிடையாட்டம் எனவும்
மடங்களின் பூமிகாணி மடப்புறம் என்றும் வழங்கப்பட்டன. சோழப் பேரரசு வளர்ந்தகாலையில் கோயில்களுக்குரிய நிலம், சொத்து, பொன் முதலிய செல்வங்களும் பெருகின. மன்னரும் மற்றையோரும் போட்டி போட்டுக்கொண்டு தானங்கள் செய்தனர். பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் கூற்று, கவனத்தற்குரியது.
“அரசனும் அவனது பட்டமகிஷிகளும், அவர்தம்
உறவினரும் பெருமளவிவல் தானங்களைச் செய்து வழி
காட்டினர்; நிலப்பிரபுக்கள் பின்பற்றினர்; வணிகர்
தொடர்ந்தனர்; செல்வாக்குள்ள பிறகுலத்தவரும்
தாராளமாகத் தானங்கள் செய்தனர்.
உதாரணமாகத் தஞ்சைப் பெருங்கோயிலை எடுத்துக் கொள்வோம். இராசராசனின் புகழ்ச் சின்னமாகிய அக்கோயில் அக்காலத்திலே இந்தியாவிலேயே அதிக செல்வமுடைய கோயிலாக இருந்தது எனலாம்.19 உலகத்திலே வேறெந்தக் கோயில் கல்வெட்டுக்களிலாவது கோயிற் கணக்கு, வருமானம், பணியாட்கள் செலவு, முதலியன பற்றிய விளக்கம் தஞ்சைக் கோயிற் கல்வெட்டுக்களிற் காணப்படுவதைப் போல விரிவாக இருக்குமோ என்று சிலர் ஐயுற்றுள்ளனர்.20 தஞ்சைக் கோயிற் கல்வெட்டுக்கள் உண்மைமில் வரலாற்றுச் சிறப்புனடயனவே.21 தஞ்சைப் பெருக்கோயிலுக்கு இராசராசனின் அருமை “அக்கன்”- குந்தவ்வை மாத்திரம் பத்தாயிரம் களஞ்சுபொன் கொடுத்தார் என்று கல்வெட்டுக்கள் காட்டும். ஏறத்தாழ நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு களஞ்சு பொன் கோயிலுக்குக் கிடைத்தது.
இலங்கையிலுள்ள சில கிராமங்களின் நெல் உட்பட (116000) நூற்றுப் பதினாறாயிரம் களம் நெல் ஒரு வருடத்தில் அங்கோயிலுக்கு வந்தது. தஞ்சைப் பெருங்கோயிலில் 609 பணியாட்கள் வேலை செய்தனர். இவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் இசைக்கலைஞர். இவர்களைத் தவிர, கோயிலின் நிர்வாகத்திலிருந்த பிற நிறுவனங்களில் பணியாற்றியவரையும் நாம் சேர்த்துப் பார்த்தால் கோயிலின் ஆளுஞ் சக்தியும்- பொருளாதாரப் பிடிப்பும்- தெளிவாகும். தஞ்சைக் கோயில் தனித்த ஓர்உதாரணமன்று; இராசராசன் காலத்திலே திருவாழீசுவரத்திலிருந்த பெருங்கோயிலும் அதன் பண்டாரமும், பணியாட்களும் சோழப்படையின் ஒரு பிரிவான மூன்றுகை மகாசேனையின் பாதுகாப்பிலிருந்தன. கோலர் மாவவட்டத்தில் காணப்பட்ட கல்வெட்டொன்று பிறிதொரு கோயிலுக்குஐம்பத்து இரண்டு குடும்பத்தினர் பணியாட்களாக இருந்தமைய விரிக்கும். செல்வந்தர், தானமாகக் கொடுத்தவற்றை விடப் பல்வேறு வழிகளிலும் கோயில்களுக்குச் சொத்து சேர்ந்தது. கோயிலுக்குக் கொடுக்கவேண்டிய வரிகளைக் கட்ட முடியாதவரின் நிலத்தை எடுத்தும், கோயிற் சொத்தைக் களவாடியவர் நிலங்களைப் பறிமுதல் செய்தும், பக்திமான்களுடைய நன்கொடைகளைப் பெற்றும், பணங்கொடு நிலங்களை, வீடுகளை வாங்கியும், கோயில்கள் நிலவுடைமையை அதிகரித்துக் கொண்டன.22 சோழமன்னர்கள் சில சந்தர்ப்பங்களில் தேவதானமாகச் சில ஊர்களைக் கொடுக்கும்போது, அங்கு. வசிக்கும் குடிமக்களையும் சேர்த்துக் கோயிலுக்கு வழங்கிவிடுவதுண்டு அதனைக் குடி நீங்காத் தேவதானம் என்றழைத்தனர்.23
இவ்வாறு பலவழிகளில் உடைமை சேர்த்த கோயில்கள் என்ன செய்தன? கலாநிதி டி. வி. மகாலிங்கம் இதற்கு விடையளித்துள்ளார்.
“ஒரு தலத்திலுள்ள மக்களின் சமய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற உயிர்த்துடிப்புள்ள இடமாகக் கோயில் விளங்கியது மட்டுமன்றி, அது அவ்வூர் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களிலும் பங்கு கொண்ட சமூக நிறுவனமாக விளங்கியது. கோயில் தானே நிலப்பிரபுவாகவும் முதலாளியாகவும் (பலருக்கு வேலைவசதி கொடுத்ததால்) இருந்தது. கோயிற் பண்டாரம் (களஞ்சியம்) வங்கிபோல அமைந்து வைப்புப் பணங்ளைப் பெற்றும், கடனுதவி அளித்தும், மக்களுக்கு உதவியது; கிராமக் கைத்தொழில்களின் பெருக்கத்திற்கு உதவியது; அரசாங்த்திற்குச் செலுத்தப்பட வேண்டிய வரிகள் கோயில்களால் அறவிடப்பட்டன. தனிப்பட்டவர்கள் தமது நிலங்களுக்குச் செலுத்தவேண்டிய வரிகளும் (மன்னரால்) கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன; இவற்றைவிடக் கோயில்களும் மக்களிடமிருந்து வழக்கமான கடமைப் பணத்தையும் பெற்றன; ஊரிலேயுள்ள பெரிய நிலவுடைமை நிறுவனம் என்ற முறையில் கோயில், ஊரின் விவசாயத்தில் ஊக்கங்காட்டியது; வயல்களிற் பயிர் செய்விப்பதோடமையாது புதிய நிலங்களையும் உழவுக்குட்படுத்தியது; பாழ்பட்ட நிலங்களுக்குப் புனர்வாழ்வு அளித்தது;…கோயிற் பண்டாரமானது வங்கிபோலக் கடமையாற்றியபடியால், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும், ஊராட்சி மன்றங்களுக்கும், வட்டியுடனும், வட்டியின்றியும் உசிதம்போல உதவியது; விவசாயியின் தமது தொழிற்றேவைகளுக்காகக் கடன் பெற்றனர்; தமது பெண்களுக்குச் சீதனம் கொடுப்பதற்குக் கூடச் சிலர் கோயிலிலிருந்து கடன்பட்டனர். நாட்டின் பொருளாதார வாழ்விற் கோயில் நடுநாயகமாக வீற்றிருந்தது.24
தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கணக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும், பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் காசு வட்டிக்கோ அன்றிப் பொருள் வட்டிக்கோ கொடுக்கப்பட்டிருந்தன. சாதாரணமாகப் பன்னிரண்டு வீத வட்டி நியாயமானதாகக் கோயில்களினாற் கருதப்பட்டது.25
அன்றைய நிலமானியத் தமிழகத்திலே கோயில்களின் தானத்தைப் எழுதப்புகுந்த பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார், தனக்கே உரிய நடையில் மேல்வருமாறு கூறியுள்ளார்.
“நில உரிமைக்காரனாகவும், முதலாளியாகவும், பொருள்களை நுகர்வோனாகவும், சேவைகளைப் பெறுவோனாகவும் விளங்கிய கோயில், வங்கியாகவும், பள்ளிக்கூடங்களாகவும் பொருட்காட்சி சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், நாடக மன்றங்களாகவும் விளங்கியது; சுருங்கக்கூறின், அக்காலத்து நாகரிக வாழ்க்கையிலும், கலைகளிலும் சிறந்தனவெல்லாம் தன்னையே சுற்றி இயங்கப்பெற்றது மட்டுமன்றி, அவற்றையெல்லாம்தர்ம உணர்விலிருந்து உதித்த மனிதாபிமானத்தால் செம்மைப்படுத்தியதில், மத்தியகால இந்துக் கோயிலுக்கு நிகரான நிறுவனங்கள் உலக வரலாற்றிலே அருமையாகத்தான் உள்ளன எனலாம்.”26
பேராசிரியரின் கவிநயம் வாய்ந்த சொற்களை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் சிறப்பைக் காணும் நாம், அதே வேளையில் அரசியல் பொருளாதாரத் துறைகளில் கோயில்
எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து- சில சமயங்களில் ஆளூம் வர்க்கமாகவே- காட்சி தருகின்றது என்னும் உண்மையை மறக்க முடியாது. அது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் கருணையும், சாந்தமும், தெய்வ நீதியும் பூசிய காட்சிகளுக்குப் பின்னாலே பல அநாகரிகச் செயல்களும், மிக மோசமான மனிதக் கொடுமைகளும் நடந்தேறியுள்ளன. மன்னனும் வேளாளருஞ் சேர்ந்து கோயிலைக் கேடயமாகக் கொண்டனர். அதன் சொத்தும் கணக்கற்ற செல்வமும்வேளாள வர்க்கத்தினரின் செல்வக் குழந்தைகளாக இருந்தன; எந்தச் சமுதாயக் குற்றமும் பொறுக்கப்பட்டது. ஆனால். ஆனால் கோயிற் பணவிஷயத்தில் எள்ளளவு கருணையும் காட்டப்படவில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனிதனை- குடும்பங்களை- விலைகொடுத்து வாங்கின; பஞ்சகாலத்தில் தம்மைத்தாமே விற்றுக்கொண்ட “அடிமைகள்” பற்றி அநேகம் கல்வெட்டுக்கள் கூறும்.“காலஞ் சரியில்லை; மூன்று நாழியரிசி ஒரு காசுக்கு விலையயர்ந்தது. தன் குழந்தைகள் பட்டினியால் வாடினர்; எனவே கோயிற்காரனிடம் இருந்து நூற்றுப்பத்துக்காசு பெற்றுக்கொண்டு அக்குடும்பம் கோயில் அடிமையானது.”27 இத்தகைய சம்பவங்கள் பலவற்றைக் கண்ட வரலாற்றாசிரியரும் இவ்வுண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாகப் பண்ணையடிமைகள் நிலை பல இடங்களில் இருந்தது என்று நீலகண்ட சாத்திரியார் கூறுவுர்.
“அன்றைய சனத்தொகையில் குறிப்பிடத்தக்களவு பகுதி, சிறப்பாக விவசாயத் தொழிலாளர் மத்தியில்கணிசமானோர், அடிமை வாழ்க்கைக்கு அணித்தான நிலையில் வாழ்ந்தனர் என்று அக்கால இலக்கியம் காட்டும். மக்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு ஒரு புறமிருக்க, அவர்களைப் பொருள்களைப் போல விற்று
வாங்கும் முறை- தனிச் சொத்துரிமையிலேயே சகிக்க
முடியாத வழக்கம்- அன்று நிலவியது என்பதற்குப் பல
கல்வெட்டுக்கள் சான்று தருகின்றன.”
சேக்கிழார் பெருமான் காட்டும் சேரிகள் பல இவ்வுண்மைக்குச் சான்று; அவற்றில் ஆதனுார் ஒன்று. விற்று வாங்கிய ஆண்- பெண் அடிமைகளைத் தவிர, ஆலயங்கள் தேவரடியாராகவும் பல நூற்றுக்கணக்கான மக்களை வைத்திருந்தன. தேவதான நிலங்களுக்குத் திருச்சூலமும், திருவாழியும் அடையாளச் சின்னமாகப் பொறிக்கப்பட்டது போலக் கோயில் அடிமைகளுக்கும் சூலத்தால் குறிசுடப்பட்டது.29 கி.பி. 1235-ல் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலிருந்து, வீரட்டானேசுவரர் கோயிலில் நூற்றுக்கு மேற்பட்ட அடிமைகள் இருந்தனர் எனத் தெரிகின்றது.30
கோயில்களும், நிலப்பிரபுக்களும் இவ்வாறு நிலவுடைமை
யாளராகவும், பொருளுடைமையாளராகவும் நாட்டிலே விளங்கிய
அக்காலத்திலே, வணிகரும் பெருஞ்சிறப்புற்றனர். பலர் சமணம்,
பெளத்தம் முதலாய “புறச்” சமயங்களைக் கைவிட்டுச் சைவத்தை
மேற்கொண்டனர். சோழப் பேரரசு புதியதொரு நிலப்பிரபுத்துவத்தை
உண்டாக்க ஏதுவாயிருந்ததுபோல, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
வியாபாரஞ் செய்யும் பலம் வாய்ந்த நகர வணிகத்தினரையும் தோற்று
வித்தது. தவிர்க்க முடியாத நியதி அது. ஆனால் மாறிய சூழ் நிலைக்கேற்ப
அவர்களிற் பெரும் பகுதியினர் சைவராயினர். தமிழ்நாடு முழுவதும்
வாணிகம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெறவே அவர்கள் சைவத்தை
அனுசரித்தனர்.31 நகரங்களிலும், பேரூர்களிலும், சிற்றூர்களிலும்
தொழில் செய்து கொண்டிருந்த வணிகர் பலர், திருக்கோயில்களின்
வழிபாட்டிற்கும், விழாவிற்கும், திருவிளக்கினுக்கும் நிபந்தம் வழங்கிய செய்திகள் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.32 நிலப்பிரபுக்களைப் போவ வணிகர் இக்காலப் பகுதியில் அரசியற் செல்வாக்கோ, ஆதிக்கமோ பெற்றிருக்கவில்லை என்பது உண்மையே. ஆயின் அவர்தம் வாணிபத் தொழிலுக்கான சகல வாய்ப்புக்களையும் பேரரசு அளித்தமையால் அவர்தம் நோக்கு வியாபாரத்திலேயே யிருந்தது. மன்னர் பட்டயங்கள் வழங்கினர்; நிலப்பிரபுக்கள் இவர்களோடு நல்லுறவு கொண்டிருந்தனர். நகரங்களிலும் பட்டினங்களிலும் வணிகர் ஏறத்தாழப் பூரண செல்வாக்குடையராய் விளங்கினர். அக்காலத்தில் நகரத்தார் என்று வழங்கப்பட்ட வியாபாரிகள் “நகரம்” என்னும் பட்டினசபை அங்கத்தவராக இருந்தனர். நீலகண்ட சாத்திரியார் இது பற்றி மேல்வருமாறு கூறுவார்.33
“நகரம் என்பது சிறப்பாக வியாபாரிகளின் மன்றம் என்று கொள்ளலாம். பிரதான பட்டினங்களில் இருந்த சபைகளில் இதுவும் ஒன்று. வணிகரின் செல்வாக்குத் தலை தூக்கியிருந்த வியாபாரப் பட்டினங்களில் இதுவே முக்கியமான சபையாக இருந்திருக்கும்.”
நானாதேசிகள், அஞ்சுவண்ணத்தார், நகரத்தார், வளஞ்சியர்,மணிக்கிராமத்தார், திசையாயிரத்தைஞ்நூற்றுவர் என்று பல பிரிவினராய வணிகர் இக்காலப் பகுதியிலே உள் நாட்டிலும் கடல் தேசங்களிலும் தொழில் செய்தமையால், சோழப் பேரரசில் இறக்குமதி, ஏற்றுமதி பெருகின. வணிகத்தால் கிடைத்த சுங்க வரியும் அரசாங்கத்திற்கு நல்ல வருவாயைக் கொடுத்தது.
ஏகாதிபத்திய நாடுகள் யாவும் தமது சொந்த நாட்டிலே அமைதியையே கடைப் பிடிப்பன. யாவருக்கும் கடமைகளும் உரிமைகளும் பகுக்கப்பட்டு, விதிக்கப்பட்டு ஓர் ஒழுங்கு நிலை நாட்டப்படுகிறது. நாட்டின் சக்தி கடலையும்,
பிற நாடுகளையும் கட்டிஆள்வதற்குத் தேவையாக இருப்பதால் உள்நாட்டில் சுதந்திரமும், சமரச மனப்பான்மையும் வளர்க்கப்படுகின்றன. தீண்டாதவருக்குஞ்சரி, சிவப்பிராமணருக்குஞ்சரி சட்டங்களும் விதிகளும் வகுக்கப் பட்டிருந்தன. எனவே நிலப்பிரபுக்களும், வணிகரும் முரண்பாடின்றி வாழ்ந்தனர். சைவம் இரு தரப்பினரையும் பின்னிப் பிணைத்தது. பொதுதத்துவமாகியது.
ஆயினும் மேல் தோற்றத்தை விட்டுக் கூர்ந்துப் பார்ப்போமாயின் நிலவுடைமையாளரே- நிலப்பிரபுக்களே- தலையாய வர்க்கத்தினராக இருப்பது தெரியவரும். வேளாளர் கை நீதியையும் கட்டுப்படுத்துமளவிற்கு ஓங்கியிருந்தது. இதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
ஒரு சந்தர்ப்பத்திலே, வேளாளன் ஒருவன் குற்றவாளியாகக் கருதப்பட்டு அரசப் பிரதிநிதியொருவர் முன் விசாரிக்கப்பட்டான். அதிகாரி கோயிற் பட்டரை யோசனை கேட்டபோது அவர் வேளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றார்.34 இது வேளாளர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதற்குச் சான்று. வேளாளருக்கும் கோயிலுக்கும் எதிராகச் சிறு குற்றஞ் செய்தாலும் பிறர் வன்மையாகத் தண்டிக்கப்பட்டதற்கும் பல சான்றுகன் உள்ளன. ஒரு சந்தர்ப்பத்திலே, கீழையூரில் (தஞ்சை) இருவர், வேளாளருக்கும் கோயிலுக்கும் தொல்லை விளைவித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டனர். கலகம் செய்ததற்காக அவர்கள் விசாரிக்கப்பட்டனர். கோயிலுக்கோ அல்லது வேளாளர் வீட்டிற்கோ தீ வைக்க முனைந்த குற்றமும் சுமத்தப்பட்டது. விசாரணை முடிவில் ஆயிரம் காசு அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட எவரும் அவ்விருவருக்கும் உதவி செய்ய முன் வரவில்லை. எனவே அவர் தம் நிலங்கள் கோயிலுக்கு விற்கப்பட்டன. 1060 காசு கொடுக்கப்பட்டன. தண்டம் 1000 காசு. தண்டத்தைக் கொடுக்க முடியாமலிருந்ததற்காகஅபராதம் காசு. முழுப்பணமும், நிலமும் கோயிற் சொத்தாகின.
இவ்விரு சான்றுகளும் மிக முக்கியமானவை. ஏனெனில் சோழர் காலத்தைப்பற்றி எழுதும் ‘புகழ்பூத்த’ வரலாற்றாசிரியர் எல்லாம், அன்றைய நிலையில் வர்க்க முரண்பாடுகள் இருக்கவில்லையென்றும், வர்க்க அமைதியே காணப்பட்டது என்றும், செல்வம் கொழித்த அன்றைய நிவையில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்திலே ஒரு பாத்திரம் இருந்தது என்றும் பலவாறு எழுதியுள்ளனர். நாடு பிடித்தலாலும் பிற நாட்டு வணிகத்தினாலும், உற்பத்திப் பெருக்கத்தினாலும் சோழ நாட்டிலே செல்வம் பொங்கி வழிந்தது என்பது உண்மையே. பட்டினியால் மடியும் நிலை பரவலாக இருக்கவில்லை என்பது ஓரளவிற்கு (பஞ்ச காலங்களைத் தவிர) உண்மையே. ஆனால் நாட்டில் வர்க்க முரண்பாடோ மோதலோ இருக்கவில்லை என்றும், சுரண்டிய வர்க்கமும் சுரண்டப்பட்ட வர்க்கமும் இருந்தன என்பது ஏற்க முடியாதது என்றும் எழுதுவது ஒப்புக் கொள்ள முடியாததொன்று. பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் உட்படப்பலர், சோழர் காலத்தில் வர்க்க அமைதியே இருந்தது என்று எழுதியுள்ளனர்.
சமூகத்திலே அமைதி நிலவியது என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அமைதிக்குப் பின்னால் நோகாத முறையில் சுரண்டல் இருந்தது என்றும், அங்குதான் சமயம் கருவியாகப் பயன்பட்டது என்றும் நாம் நிரூபிக்க முடியும். பேரரசு தோன்றிய காலத்திலே பெருந்தத்துவமும் ஏன் தோன்றியது என்னும் கேள்விக்கு விடையும் அங்கேதானிருக்கிறது.
ஐரோப்பாவிலே நிலமானிய முறை நிலவிய காலத்திலே கத்தோலிக்க திருச்சபை சமூக வாழ்வில் எத்துணை முக்கிய பங்கு வகித்தது என்பதனை முன்னர்ப் பார்த்தோம். திருச்சபை என்பதற்குப் பதிலாகக் கோயில் என்று திருத்தி வாசித்தால் நிலைமை பொதுவாககவே இருக்கும் என்றும் கூறினோம். இக்கருந்து வேறு சில வரலாற்றாசிரியராலும் மேலெழுந்த வாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மத்திய காலத்திலே தென்னிந்தியாவில் எழுந்த கோயில்களை, ஐரோப்பிய கிறித்துவ தேவாலயங்களோடு ஒப்பிட்டாராய்வது சுவை பயக்கும். கிறித்துவ தேவாலயங்களைப் பற்றிக் கூறப்படுவன எழுத்துக்கு எழுத்து தென்னிந்தியக் கோயில்களுக்குப் பொருந்தும் எனக் கூறலாம். ஆக ஒரேயொரு வேறுபாடு. ஐரோப்பாவிலே தேவாலயங்களோடு சம்பந்தப்பட்டோர் மத குருமாரராக இருந்தனர். இங்கே சாதாரண மக்கள் இருந்தனர்.35
யார் இந்தச் சாதாரண மக்கள்? அவர்களே வேளாளர். நிலமுடைய பெருங்குடிகள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும், நாட்டினராகவும் அதிகாரம் பெற்றிருந்தனர்.36 நிலமானீய அமைப்பு முறை நிலவிய தமிழகத்திலே கோயில்கள் வகித்த தலையாய பாத்திரத்தை விரிவாகவே பார்த்தோம். கோயில்கள் என்று கூறும்பொழுது வெறும் கற்கட்டிடங்களை நாம் கருதுகிறோமா?வட்டிக்குப் பணம் கொடுத்தும், வங்கி நடத்தியும், நிலம் உழுவித்தும்ஆயிரந்தொழில் செய்வித்தவர்கள்யார்? கோயில் தர்மகர்த்தாக்களே; கோயில் முகாமைக்காரரே; கோயில் மேற்பார்வையாளரே. இவர்களிற் பெரும்பாலோர் வேளாளரே. எனவே கோயிலை ஆட்டிப்படைத்த இவர்கள் சர்வ வல்லமையுள்ளவராக விளங்கினர்த; இவ்வாறு இருந்த படியாலேயே கோயிற்பட்டற் வேளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றா். கோயிலின்பேரில் சாதாரண மக்களைத் தண்டிக்கவும், நிலங்களை விற்கவும், அடிமைகளாகப் பெறவும், நிலப்பிரபுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. சோழப் பேரரசிலே மிகப் பெரிய குற்றம் இராசத் துரோகமும் சிவத் துரோகமுமாம். அந்தளவிற்கும் நிலவுடைமையாளர் தமது அக்கறைகளில் கண்ணும் கருத்துமாயிருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையிலே மன்னன், நிலப்பிரபுக்கள் ஆகியோருடைய நிலைபேற்றிற்கும், தலைமைக்கும் முதன்மைக்கும் சித்தாந்தம் தத்துவ விளக்கம் கொடுத்தது.
வேளாளர் கையோங்கிய அன்றைய அரசியற் பகைப் புலத்திலே- படைத் தலைவரையும். நிர்வாகிகளையும், கோயில் தர்மகர்த்தாக் களையும் அளித்த அதே வேளாளர் வர்க்கம் சித்தாந்தப்பெரு நூலாகிய சிவஞானபோதத்தினை எழுதிய மெய்கண்ட தேவரையும் அளித்ததில் வியப்பு ஏதுவும் இல்லையல்லவா? ஆனால் அதனை நன்கு விளங்கிக் கொள்வதற்குப் பல்லவர் காலத்திலிருந்து வளர்ந்து வந்த சில சமயப் போக்குகளையும் பண்புகளையும் நாம் அறிந்து கொள்ளல் அவசியம்.
தமிழ், தமிழ்நாடு என்னும் உணர்வுகளை நாயன்மார் மக்களிடையே பரப்பினர் அல்லவா? விதி, சாதி, கர்மம் முதலிய யாவற்றையும் கடந்த பரம்பொருளாகச் சிவன் விளங்குகிறார் என்று அரனடியார்கள் போதித்தனர். சமணரையும் பெளத்தரையும் எதிர்த்த காலத்திலே சாதிப்பிரிவுகளைக் கடந்த- பரந்த- அணியொன்றினை வைதிகர் கட்டி வளர்த்தனர். நிலப் பிரபுத்துவக் காலத்திலே நிலவுடைமையாளரும் வேளாளர், பிராமணர் போன்ற உயர்சாதிக்காரருமே, மேனிலையிலிருந்தனர். எனினும் சோழப் பேரரசானது தமிழ்த் தேசியத்தினையும் சமூக சமத்துவத்தையும் வற்புறுத்திய இயக்கத்தின் பின் தோன்றியபடியால் அவற்றைப் பொய்மையாகவேனும் உருக்கொடுத்து வளர்த்தல் அத்தியாவசியமாயிற்று. தமிழ்நாடு முழுவதையும் ஒன்றுசேர்ப்பது போலவும் சாதிப்
பாகுபாடுகளைக் கடப்பது போலவும் ஒரு பொய்ம்மையினை உருவாக்கிய நூலழகளிற் சேக்ழார் பெரியபுராணத்திற்குத் தனியிடமுண்டு. . பத்திச்சுவை நனிச்செ்ாட்டச் சொட்டப் பாடிய கவிவல்லவரான சேக்கிழார் பெருமானும், தொண்டை மண்டலத்திலே குன்றத்தூரில் தோன்றிய வேளாளர் குலப் பெருங்குடி மகனே. தமிழ், தமிழ்நாடு என்ற உணர்வை உண்டாக்கி, அதன் மத்தியில் முழுமுதற் கடவுளாகிய சிபெருமானை நிறுத்தி எல்லாரும் அவன் அடிமைகளே என்னும் பொய்மையைச் சிருட்டிக்கப் பெரிதும் உதவியது தொண்டர் புராணம். சாதிப் பாகுபாடு மிகக் கடுமையாக அனுட்டிக்கப்பட்ட சோழர் காலத்தில், விதிகளும், சட்டங்களும் சாதிப் பிரிவினைக்கு அங்கீகாரம் அளித்த காலத்தில், இறைவனுக்கு முன் யாவரும் சமமே என்னும் மனச்சாந்தியை அளிக்கஉதவியது பெரிய புராணம் போன்ற நூல் நடைமுறைக்கும் அக்கருத்திற்கும் இமாலய வேறுபாடு இருந்தது. இறைவனே பரம்பொருள் என்ற கருத்தைக் கூறிக்கொண்டு அப்பட்டமான சுரண்டலில்- அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தனர் மன்னரும் வேளாளரும் இதனை ஓர் உதாரண மூலம் விளக்குவோம். கோயிற்றருமகர்த்தாக்கள்-நிலவுடைமையாளர்- கோயில் நிலங்களைக் குத்தகைக்கு விடும் பொழுது உறுதிகளில் சிவனடியாராகிய சண்டேசுவரர் பெயரே எழுதப்பட்டது. குத்தகைக்கு நிலம் எடுப்போர் தாம் கடவுளின் நிலத்தையே பெற்றிருக்கிறோம் என்று உனார்த்தவும், மனிதருக்கும் இதற்கு தொடர்பு எதுவும் இல்லையென்றுகாட்டவுமே இம்முறை மேற்கொள்ளப்பட்டது.37 கோயிலுக்கும் கடவுளுக்கும் தலையாய இடத்தைக் கொடுக்கவும், அவற்றுடன் தொடர்பு கொண்டவருக்கும் உயரிடம் கிடைப்பது இயல்பேயல்லவா ? பல்லவர் காலப் பக்தியியக்கத்தின்போது தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் இறையடியாராக உண்மையில் உயர்ந்து சிறப்பெய்தினர். ஆனால் சோழர் காலத்தில் உயா் சாதியீனரே உயரிடம்வகித்தனர். எனினும் கீழ்ச்சாதியினரும் இறையடியாராகப் புகழ் பெறுதல் முடியும்
என்னும் நம்பிக்கையை அளித்தது பெரியபுராணம். அந்த நம்பிக்கை பலரை அமைதியாக வாழச் செய்தது என்று வற்புறுத்த வேண்டியதில்லை. இந்தப் பின்னணியிலேயே சோழ மன்னர் பலருடைய திருப்பணிகளையும், சமயத் தொண்டினையும் நாம் துருவிப் பார்த்தல் வேண்டும். சேக்கிழார் பெருமான் காவியத்திற்குச் செய்த பணியை மற்றும் பலர் கல்லிலும் செம்பிலும் செய்தனர். சோழர் காலத்திலே நாயன்மாருடைய திருவுருவங்களும் வழிபாட்டிற்காகக் கோயில்களில் வைக்கப்பட்டன. அரசாங்கம் சமய வளர்ச்சியினைத் தனது முக்கியப் பணிகளுள் ஒன்றாகக் கருதியது. இது சமயத்துறையில் செல்வாக்கோடு விளங்கிய வேளாளருக்குச் செய்த உதவி என்றே நாம் கருதல் வேண்டும். சமயத்தால் நன்மை வரும் என்று கண்டுகொண்டே சோழப்பெரு மன்னர் பல வழிகளில் தம்மைச் சமய பக்தர்களாகக் காட்டிக் கொண்டனர். இது எல்லாக் காலங்களிலும் காணக்கூடிய ஒரு உண்மையாகும். முதலாம் இராசேந்திரன் ஆட்சியில் தேவார நாயகம் என்றொரு அதிகாரி நியமிக்கப்பட்டான். சிவன் கோயில்களில் தேவார பாராயணம் ஒழுங்காக- முறையாக- நடைபெறுகிறதா என்பதனைக் கண்காணிக்கும் அதிகாரியாக அவன் விளங்கினான். சிவன் கோயில்களில் திருப்பதிகம் ஓதவும், பெருமாள் கோயில்களில் திருவாய் மொழி ஓதவும் நிலதானம் விடப்பட்டது.38
நிலவுடைமை நிறுவனமாகிய கோயிலைச் சைவ சித்தாந் தத்தினின்றும், பிரிக்க முடியாத ஓர் அம்சமாக ஆக்கினார் மெய்கண்டார். பல்லவர் காலமுதல் வளர்ந்துவந்த கோயில் வளர்ச்சியினையெல்லாம் மனதிற்கொண்டு சிவ வழிபாட்டில் கோயில் எத்துணை பிரதானமானது என்று விளக்க முனைந்தார் மெய்க்கண்டார்.
“செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவுர் வேடமு
மாலயந் தானு மரனெனத் தொழுமே”
இதற்குச் சிற்றுரை கண்ட மாதவச் சிவஞான யோகிகள் மேல் வருமாறு கூறுவர்.
“அயராவன்பினரன் கழலணைந்த சீவன் முத்தனாவான் செங்கமலமலர்போல விரிந்து விளங்கிய முதல் வனது நோன்றாளை அணையவொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் அவ்வியல்பினை யுடைய மும்மல வழுக்கை ஞான நீராற் கழுவி அங்ஙனம் அயராவன்பு மெய்ஞ் ஞானிகளோடு கலந்துந்துகூடி மலமயக்க நீங்குதலான் அன்புமிக்குடைய அவரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் முதல்வனெனவே கண்டு வழிபட்டு வாழும் ……....காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல திருவேடத்தையுஞ் சிவாலயத்தையுமென்று பசரித்தார்.... அம்முதல்வர் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரினெய் போல விளங்கி நிலைபெற்று அல்லுழியெல்லாம் பாலினெய் போல வெளிப்படாது நிற்றலான் இனிப் பத்தரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் பரமேசுரனெனக் கண்டு வழி படுகவென மேற்கொண்டது.”40
சிவ வேடங்களையும் சிவாலயத்தையும் சிவனெனவே கொள்ளல் வேண்டும் என்று சைவசித்தாந்தப் பெருநூலாகிய சிவஞானபோதம் போதிக்கும் பொழுதுதான், கோயில்களையும் கோயிலுடன் சம்பந்தப்பட்டவரையும் நன்மை தீமைகளுக்கு அப்பாலே மெய்கண்டார் வைத்து விட்டமை நமக்குப் புலனாகின்றது. இக்கோயில்கள் நிலவுடைமையுள்ள பெரும் பொருளாதார நிறுவனங்களாக இருந்தனஎன்னும் யதார்த்த உண்மையின் ஔியில் மெய் கண்டார் கூற்றைப் பார்க்கும்போது உடைமைப் பாதுகாப்பின் பண்பு புலனாகிறது. அதே சமயத்தில் சேக்கிழார் மரபை, மெய்கண்டார் எவ்வாறு பேணுகிறார்- அவர்விட்ட இடத்தில் இவர் எவ்வாறு தொடங்குகிறார்- என்பதும் துலக்கமாகிறது.
நிலப்பிரத்துவத்தின் ஒரு முக்கியமான பண்பு அச்சமூகத்தின் தலைவர்கள் சமய அங்கீகாரத்துடன் நிலை பேறுடையவராய், இயல்பாகவே தலைவர் எனக் கொள்ளப்படுபவராக இருத்தல். “தலைவர் அவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று கம்பன் தனது காப்பியத்திலே கடவுள் வணக்கத்திற் கூறியுள்ளது அலகிலா விளையாட்டுடைய திருமாலைமட்டுமன்றி, அக்காலத் தலைவரை- வேளாளரையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. முதலிலே மன்னரை எடு.த்துப் பார்ப்போம். சோழர் காலத்திற்கு முன்னதாகவே அரும்பத் தொடங்கிய ‘அரச உரிமை தெய்வாம்சமானது’ என்னுங் கொள்கை சோழர் காலத்திலே பூரணத்துவம் பெற்ற ஆட்சிக் கோட்பாடாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்திலே இதனை DIVINE RIGHTS OF THE KINGS என்பர்.அரசனை கேவலம் மானுடனாகவன்றித் தெய்வமாகவே பாவிக்க இந்நம்பிக்கை வழி செய்தது. உலகமெங்கும் நிலமானிய அமைப்பிலே காணப்படும் ஓர் அம்சம் இது என்பதனை நாம் மனங் கொள்ளல் தகும். “திருவுடை மன்னரைக் கண்டால் திருமாலைக் கண்டேனே என்னும்” என்று பாடிய
நம்மாழ்வார் திருவாய் மொழியிலும், “அரிமாசுமந்த அமளியோனைத் திருமாவளவன் எனத்தேறேன்- திருமார்பின் மானமால் என்றே தொழுதேன்” என்ற பழம் பாடலிலும் அரசரின் கடவுட்டன்மை சுட்டிக் காட்டப்படுகின்றது. ஆனால் சோழர் காலத்தில் அதுவே பெரு நம்பிக்கையாக உருப்பெற்றிருந்தது.
“சோழ மன்னர்களை அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட சோழ இராச்சியத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே எண்ணிப் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தனர்.”41
சோழ அரச குடும்பத்தவரின் திருவுருவங்கள் பல கோயில்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டமையும், சோழ மன்னரின் புதை குழிகளுக்கு மேலே கோயில்கள் எழுப்பப்பட்டமையும் இவ்வுண்மைக்குச் சிறந்த சான்றாயமைந்துன்ளன.42 பின்னதைப் பள்ளிப்படைகள் என்பர். சுந்தர சோழன் மகள் குந்தவ்வையார் தஞ்சைக் கோயிலிலே மக்கள் வழிபாட்டிற்காகத் தனது தந்தையார் (திருமேனி) படிமம் ஒன்றை ‘எழுந்தருளிவித்தார்’. சிறிது காலத்தின் பின்னர், தனது தாயார் உருவமொன்றனையோ அன்றித் தனது உருவமொன்றனையோ அதே கோயிலில் வைப்பித்தார். இதற்குரிய கல்வெட்டிலே “தம்மையாக எழுந்தருளிவித்த திருமேனி” என்றே காணப்படுகிறது.
இராசராசன், அவன் மனைவி லோகமகாதேவி, இராசேந்திரன்,
அவன் இராணி சோழ மகாதேவி, உத்தமச் சோழரின் மனைவி செம்பியன்
மாதேவி முதலியோருடைய திருமேனிகளெல்லாம் பல கோயில்களில்
எழுந்தருளிவிக்கப்பட்டன. “எழுந்தருளி” என்ற சொற்றொடர்
அக்காலத்திலே மன்னருக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது
என்பதனையும் நாம் நோக்குதல் தகும். கலிங்கத்துப்பரணி போன்ற
நூல்களிலும் மன்னரைத் தெய்வ அவதாரங்களாக வருணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதற் குலோத்துங்க சோழன் வரலாற்றைக் காளிதேவி, பேய்களுக்கு உரைக்கு முகமாக அவனது அவதாரச் சிறப்புக் கூறப்படுகின்றது. மும்மூர்த்திகளில் காக்கும் தெய்வமான திருமாலே குலோத்துங்கனாக அவதரித்தான் என்று பாடுவார் செயங்கொண்டார்.
“அன்று இலங்கை பொருது அழித்த அவனே, அப்
பாரதப் போர் முடித்து, பின்னை
வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன்
என உதித்தான்; விளம்பக் கேண்மின்.”
“இருள் முழுதும் புவியகல, இரவிகுலம்
இனிது ஓங்க, இராசராசன்
அருள் திருவின் திருவயிறாம் ஆலிலையின்
அவதரித்தான் அவனே, மீள.”
என்றெல்லாம், முன்னொருகால், தேவர் குறையிரப்பத் தேவகியின் வயிற்றிலே பிறந்ததுபோலக் குலோத்துங்கன் மூவுலகுந் தொழத் திருவவதாரஞ் செய்தான் என்கின்றார் கவிஞர். இதைப்போலவே பிற்காலச் சோழ மன்னன் ஒருவனாகிய குமார குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ‘குலோத்துங்க சோழன்கோவை’ என்னும் நூலிலும், அம்மன்னனைத் திருமாலேயாகவும், திருமால் அவதாரமாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. “பண்டு இராவணனைக் கட்டாண்மை தீர்த்த குலோத்துங்க சோழன்” என்று இராமனையே சோழ மன்னாகக் காண்கின்றார் கோவைப் புவவர். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலா எனும் நூலின் பிற்சேர்க்கையாகத் திகழும் பழம்பாடல் ஒன்று, திவ்வியப் பிரபந்தச் செய்யுட்களிலே நாரணனைப் போற்றும் மொழியிலே, சோழ மன்னனைப் போற்றுகின்றது.
“கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே- வையம்
அளந்தா யகளங்கா வாலிலை மேற் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்“
கோதண்டம் ஏந்திக் குவலயத்தைக் காக்க மானுட வடிவில் இராமனும், உலகமுய்ய வந்துதித்த ஒரு திரு முருகனும், வென்றிலங்கு கதிராழி விசயதரன் என உதித்த குலோத்துங்கனும் ஒரே சுருதியில். புலவர்களால் போற்றப் படுவதும் கவனிக்கத் தக்கதே.
இரண்டாவதாக, தலையாய வர்க்கத்தினராக- உடையாராக- இருந்த வேளாளரை எடுத்துக் கொள்வோம். சோழர் காலத்திலேயே வேளாளரைப் பற்றிய தெய்வீகக் கதைகள் வேகமாக உருப்பெறலாயின. “சிவன் பார்வதி முயற்சியால், மனிதத் தன்மையும் தெய்வத் தன்மையும் சேரப் பொருந்திய ஒருவன் தோன்றினான். அவன் கையில் கலப்பையும் கழுத்தில் மலர் மாலைகளும் காணப்பட்டன. அவன் வழியினரே வேளாளர்” என்னுங் கருத்து உருவாகியது.43 சோழர் காலத்திலே உயர்நிலை எய்திய புதிய நிலப்பிரபுத்துவம் நிர்வாக வர்க்கம்- மிகக் குறுகிய காலத்திலே தம்மைப்பற்றிய புராதன மரபுக்கதைகளைச் சிருட்டித்துக் கொண்டது என்பதுபற்றி வரலாற்றாசிரியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.44
மன்னரும் பிரபுக்களும் சிவப்பேறுடையவராய்- தெய்வாம்சம் பொருந்தியவராய், இருந்தனர் என்று நம்பப்பட்ட அந்நிலையில் தென் தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது. தூய்மையான சிவலோகத்தில் யாவரும் வாழ்வதுபோன்ற ஒரு பொய்மை (Illusion) உண்டாக்கப்பட்டது. இதன் தத்துவார்த்த வெளிப்பாடே சிந்தாந்தமாகும். மேற்கூறிய பொய்ம்மையினை உண்மையே எனக் கொள்பவர்கள் இன்றும் நம் மத்தியில் உள்ளனர்.
“சிவஞானப் பேற்றில் பேரார்வமும், சிவத்தொண்டில்
பேரூக்கமும், திருத்தொண்ட.ர் வரலாற்றில் பேரன்பும்
மக்களிடையே பெருகின; நாட்டில் எவ்விடத்தும்
சிவன்கோயில்;எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவநாமம்; எவர் மேனியிலும் சிவவேடம்; எவர்பணியும் சிவப்பணி; எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின், தென் தமிழ் நாடு சிவலோக மயமாய்க் காட்சியளித்து.”45
சிவலோக மயமாய்க் காட்சியளித்தது சமயம் சிருட்டித்த பிரமை என்றே கொள்ளல் வேண்டும்.
ஒவ்வொரு நாகரிக நிலையிலும் மனிதன் தான் வழிபடும் தெய்வங்களுக்குத் தனது கால வாழ்க்கை முறை, அரசியல் அமைப்பு, சமுதாய ஒழுங்கு ஆகியவற்றினைப் பிரதிபலிக்கும் பண்புகளைப் பொருத்தி வழிபடுகிறான். இதன் காரணமாகவே சில காலங்களிலே பெரு வழக்காக இருக்கும் தெய்வங்கள் வேறு சில காலங்களிலே இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலப் பகுதிமிலே இந்திரன், பிரசாபதி போன்ற வீரமும் தீரமும். நிறைந்த தெய்வங்களை வழிபட்டனர். வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக்கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடைப்பதுபோல, எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடும்.46 ஆனால்வேதகாலத்துக்குப் பிற்பட்ட சமய வளர்ச்சியிலே வேதகால கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். சிவன், விஷ்ணு, பிரம்மா முதவிய புதிய தெய்வங்கள் முன்வரிசையிற் காணப்படுகின்றனர். அதைப்போலவே புராதனத் தமிழகத்திலே வணங்கப்பட்ட கொற்றவை பிற்காலத்திலே வேறு வடிவமும் குணமும் பெற்றுவிட்டாள். அதைப்போலவே சிவ வழிபாடும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே நிலப்பிரபுத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது.
இந்தியா எங்கணும் சைவம் பெருநிக்கிழார்களின் ஒழுகலாறாகவும், சிவன் அவர்களின் தனிப்பெரும் இட்ட தெய்வமாகவும் அமைந்தமை கவனிக்கத்தக்கது.47 சோழர் ஆட்சியில் இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்த சைசவ சமயாசாரியாருக்கும், சைவ சமய நிறுவனங்களுக்கும், தமிழகத்தின், இருந்த பெரியாருக்கும் நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு நிலவியது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.48
சோழர் காலத்திலே காணப்பட்ட சமுதாய அமைப்பும் அரசியல் முறையும் வாழ்க்கை ஒழுங்கும் சித்தாந்தம் காட்டும் இறைவனில்-சிவனில்- பதியில்- தமது சாயலைப் பொறித்துள்ளன என்று நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்திற்குமுள்ள தொடர்பு மேலும் தெளிவாகுமல்லவா? அறிந்தோ அறியாமலோ திராவிடமாபாடிய கர்த்தராகிய சிவஞானசுவாமிகள் நமக்குஇத்துறையில் வழிகாட்டியுள்ளனர். மெய்கண்டாருடைய சிவஞ்ஞானபோதச் சூத்திரங்களுக்கு ஈடிணையற்ற மாபாடியம் எழுதியவர் மூல நூலை அனுசரித்துப் பலவிடங்களில் இறைவனையும், ஆன்மாவையும் விளங்குவதற்கு அரசனையும் அவனைச் சார்ந்தோரையும் உருவகப்படுத்தியிருப்பது ஆழ்ந்து கவனிக் கத்தக்கது. எட்டாஞ் சூத்திர உரையிலே மேல்வருமாறு கூறியுள்ளார்.49
“வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும், சிங்காதனமும் மன்னவர்க்கேயுரிய சிறப்படையாளமாம். அதுபோலப், பிரபஞ்சமெல்லாவற்றிற்கும் மூல காரணமாகிய
ஒருபெரு வெண்கொற்றக் குடையும் எவற்றையும் ஒருங்கே ஓரியல்பான் அறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்சுடர் முடியும், எவற்றினையும் அங்கங்கே உயிர்க்குயிராய் நின்று செலுத்துமியல்பாகிய ஒரு பெருஞ் சிங்காதனமும் பிறர்க்கின்றித் தனக்கே உரிமையாகச் சிறந்தமை பற்றிப், பசுக்களுக்குப் பாசங்களை அரித்தலான் அரனென்னுந் திருப்பெயருடைய முதல்வனை மன்னவனாகவும், அம்முதல்வனது பேரானந்தப் பெருஞ் செல்வமுழுதுந் தனதேயாகக் கொண்டு், அனுபவிக்குஞ் சுதந்தர முடைமையுஞ் சித்தெனப்படுஞ் சாதியொப்புடையும் ஆன்மாவை மன்னவ குமாரனாகவும், அவ்வான்மாவை அறிவுப் பெருஞ்செல்வம் முழுவதும் ஆறலைத்துக் கொண்டு சிறுமையுறுத்துதலும் விதிவிலக்கை இழப்பித்து இழி தொழிலில் நிற்பித்தலுமாகிய இயல்பு பற்றி ஐம்பொறிகளை வேடராகவும் உருவகஞ் செய்தார். இஃதேக தேசவுருவகம்.”
மெய்கண்டார் சூத்திரங்களுக்கு மூலத்தையொட்டி நின்று விரிவுரைகூறும் சிவஞானமுனிவர் கூற்றுக் கவனிக்கத்தக்கது. ‘உருவகஞ் செய்தார்’ என்னும்பொழுது மெய்கண்டார், ‘காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறுகின்றார்’ என்றே உரைகாரர் உரைக்கின்றார். ஆனால் முதலூலாசிரியர் கண்ட உலகம் எது? அதிலேதான் காணப்படாத பொருளின் தன்மையும் தங்கியுள்ளது. ஒட்டக்கூத்தரும், கம்பரும், செயங்கொண்டாரும், சேக்கிழாரும் வாழ்ந்த அதே ஏகாதிபத்தியப் பேரரசின் பண்புகளைக் கொண்டே வேளாளராகிய மெய்கண்டார் மெய்ப்பொருளுண்மைகளை விளக்குகிறார் என்னும் உண்மையினை நாம் இலகுவில் மறுத்தல் இயலாது. சங்க காலத்
தமிழகத்திற் காணப்பட்ட சின்னஞ்சிறு நிலப் பரப்புக்களை ஆண்ட “குட்டி” மன்னர்களல்லர் சோழச் சக்கரவர்த்திகள்: அவர்கள் அவனி
முழுதுமாண்டவர்கள்: திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று தம்மைத் தாமே, தமது கல்வெட்டுக்களிற் குறிப்பிட்டுக் கொண்டவர்கள். அவர்களைப் பெரும்பாலான மக்கள் தெய்வமாகவே தொழுதவர்கள். அத்தகைய சூழலில் மெய்கண்டார் தெய்வத்தை விளக்குதற்குச் சோழமன்னரை உருவகஞ் செய்தது பொருத்தமானதன்றோ. பல்லவர் காலக் கவிஞர் சிற்றின்பஉறவுகளின் வடிவத்திலே பேரின்பக் கருத்துக்களைக் கூறி முடித்ததுபோல இதனை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். சாத்திர நூல்கள் முதல்வனாக இறைவனுக்குக் கூறும் பண்புகளைத் தலைமைபற்றி அவனுக்குள்ள இயல்பைக் கூறுவன. அக்கருத்துக்கள் மக்கள் நெஞ்சிலே, பொதுவாகத் தலைமை பற்றியும், நல்லெண்ணத்னதயும் உண்டாக்குவன. எனவே அவ்வுணர்வு தலைவராக நாடாண்டவருக்குச் சாதகமாக இருந்து உதவின. அரசனுடைய இல்லத்துக்கும் பெயர் கோயில்: தெய்வம் உறையும் ஆலயத்திற்கும் பெயர் கோயில்: எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காதனமும் தேவாலயங்களும் பரஸ்பரம் ஒன்றிற்கொன்று உதவிசெய்து வாழ்ந்தன என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர் கூறுவதில் எத்தனை உண்மை பொதிந்துள்ளது! கோயிலின் இரட்டைத் தோற்றங்கள் எவ்வளவு பொருத்தமாயுள்ளன!!
மற்றோர் உதாரணத்தைப் பார்ப்போம். தலைவனுக்கு எண்குணங்களைக் கூறுகின்றன சைவாகம,50 நூல்கள். எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவுஇல் ஆற்றல் உடைமை, வரம்புஇல் இன்பம் உடைமை என இவை, ஆளும் வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதங்களல்லவா? தலைவனுடைய இயல்பே, உடைமையும், ஆற்றலும், அறிவும் இன்பமும் உடையவனாயிருத்தல் என்று சித்தாந்த சாத்திரங்கள் விதிக்கும்பொழுது,
தலைமைப் பதவியிலிருந்து சமயச்சார்புடன் ஆட்சி புரிந்தவர்களுக்கு அச்சாத்திரத் தத்துவங்கள் தோன்றாத் துணையாக இருந்தன என்பதைக் கூறுவேண்டுமோ? சித்தாந்த சாத்திர நூல்களிலே பதியிலக்கணம் கூறப்படுமிடங்களில் அரசனை- பேரரசனை- மனத்திலிருத்திப் பார்ப்போமாயின் இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும்.
தலைவனை உயர்த்திய அச்சமுதாயம் சாதாரண ஏழை உழவர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்தது. இது அக்காலப் பொருளாதார முறையின்- சமூக உறவின்- பண்பு என்பதை முன்னர்க் கண்டோம். இதன் சாயல் தழுவிய முறையில் ஆன்மாக்களைப் பற்றிக் கூறியது சிவஞானபோதம். அதன் வழி நூல்களும் சார்பு நூல்களும் அதனையே மீண்டும் மீண்டும் வவியுறுத்தின. சுருங்கத்கூறின் பொருளாதாரத் துறையிலே காணப்பட்ட பிரதானவர்க்க வேறுபாட்டினையே- ஆண்டான் அடிமை உறவினையே- இறைவனுக்கு உயிருக்குமுன் உள்ள உறவாக வருணித்தது தத்துவம். சிற்றுரை மேல்வருமாறு கூறும்.51
“.........முதல்வனது வியாபகத்தை நோக்கி வியாப்பியமாகலின், அப்பாசங்கள் உடைமையாம்; பசுக்களாகிய நாம், அடிமையாவோம் அம்முதல்வன் மாட்டு...”
இறைவனின் அடிமைகள் பசுக்களாகிய ஆன்மாக்கள் என்று சித்தாந்தம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்தது. நிலப்பிரபு தனது அடிமைகளை வைத்து வேலை வாங்க இத்தத்துவம் எத்துணை உதவியாயிருந்தது என்பதனை எடுத்து விளக்கத் தேவையில்லை. ஆனால் அத்துடன் நின்றுவிடவில்லை சித்தாந்தம். அற்புதமான அதன் தருக்க இயல்பு ஆன்மாவின் சார்புத் தன்மையையும் அழுத்தந்திருத்தமாக வற்புறுத்தியது. விரும்பியோ விரும்பாமலோ உழவுத் தொழிலே உவமையாகக் கொள்ளப்பட்டுள்ளது.52
மீண்டும் சிவஞான யோகிகள் சொற்களையே துணைக்கொள்வோம்.
“….....அற்றேல், அவ்வினையே பயனாக வருமெனவமையும், முதல்வன் ஏற்றுக்கெனின்:- உழவர் செய்யுந் தொழிற்குத் தக்கபயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அத்தொழிறானே விளைவிக்கமாட்டாதது போல, உணவும் வித்துமாய்த் தொன்றுதொட்டு வரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்வனே அவ்வுயிர்கட்குக் கூட்டுவன்; அவ்வாறன்றி வினைதானே உமிர்கட்குப் பயனாய் வந்து பொருத்தமாட்டாது. வள்ளல் என்றார், தற்பயன் குறியாது வேண்டுவார் வேண்டியவாறே நல்கும் அருளுடைமை நோக்கி………..மேல் முதல்வனுக்கு வினைவேண்டப் படுமென்பதற்கு அரசனையுவமை கூறினார். ஈண்டு வினைமுதல்வனை இன்றியமையாதென்பது உணர்த்துதற்கு உழவுத் தொழிலையுவமை கூறினாரெனக் கொள்க.”
அடிமையின் இயல்பினைக் கூறப் புகுந்தவர் அவனது
செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முடியாது. ஆண்டானால்
கட்டுப்படுத்ததப்பட்டவனுக்குத் தனது தொழிலின் இலாபத்தை
அனுபவிக்கும் உரிமை கிடையாது. ஆண்டை கொடுப்பதைக் கண்டு
கொள்ள வேண்டியதுதான். அவன் வள்ளல், என்று தலைமை பேசுகிறது
சித்தாந்தம். இவ்விடத்திலே “வினைதானே உயிர்கட்குப் பயனாய் வந்து
பொருந்தமாட்டாது” என்று உரைகாரர் விளக்கந் தருவது கூர்ந்து
நோக்கத்தக்கது. பல்லவர் காலப் பக்தியியக்கம் ‘புறச்சமயங்’களான
சமண-பெளத்தத்தை எதிர்த்தன என்பது யாவருமறிந்த உண்னம.
சமணத் தத்துவமே தாக்கப்பட்டது. சமண தத்துவத்தின் அடிநிலைகளில்
ஒன்று வினைப்பயனின் நிலைபேறுடைமை.53
முன்பே செய்துகொண்ட பழவினைப் பயன்களை ஒருங்கே நுகர்ந்து கழிப்பதாகிய அது வீடு பேறாகும் என்று கூறும் சமணம். ‘ஊழ்வினை உருத்துவந் தூட்டும்’ என்றும் ‘வினைவிளை காலம்’ என்றும் ஊழ்வட்டம் வகுத்து அவர் செய்தொழில் வினைகளுக்கேற்ப வாழ்வும் தாழ்வும் அமைகின்றன என்று சமுதாய நியதி கூறியது சமணம். சிவிகையைக் காவுவானைக் காவச் செய்வதும் சிவிகையைச் செலுத்துவானைச் செலுத்த வைக்கும் சிறப்பைக் கொடுப்பதும் வினையே என்று காட்சியளவைக் கொண்டே சமுதாய நீதி வகுத்தது குறள் போன்ற சமணச் சார்புள்ள அற நூல் இந்தத்தத்துவ நியதியைத் துணையாகக் கொண்டு வணிகவர்க்கம் ஈன இரக்கமற்ற சுரண்டலை மேற்கொண்டது. பல்லவர் காலத்திலேபரந்துபட்ட முன்னணியொன்று அமைத்து வணிக வர்க்கத்தினருக்கு எதிராக இயக்கம் நடத்திய நிலவுடைமையாளர் தத்துவத்துறையிலே வினைப்பயனுக்கு எதிரான மாற்றுத் தத்துவம் நிறுவினர். அவனருளாலே அவன்தாள் வணங்கி, வினைகெட்டு நற்கதியடையும்பக்திமார்க்கத்தைக் கடைப்பிடித்து, வினைப்பொறியிலிருந்து ‘விடுபட வழி கண்டனர் அரன் அடியார்கள். எனவே, இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகியது ஊழ், வினைப்பயன்
என்று கூறிய சமணத்துவமும், அடியார்கள் செய்த கொடிய வினைகளை யொழிக்கின்ற கால வெல்லையுமாய் நின்று அவ்வினைகளைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றியருள்பவன் இறைவன் என்று உரத்துக் கூறிய சிவஞானமும் எதிர் மறைகளாக இருந்தன. இன்னொரு விதத்திலே கூறுவதாயின், “அவரவர் வினைப்பயனுக்கு அமைந்ததே வாழ்வு” என்று கூற இடமளித்த சமண சமயத் தத்துவத்தின் மத்தியில் பணக்காரன் மேலும் பணக்காரனானான். ஏழை தலைவிதியை எண்ணி நொந்து கொண்டு வாளாவிருக்க வேண்டியிருந்தது. “அப்படி யொன்றுமில்லை, விதியும் வினையும், பிறப்பும் இறப்பும் இறைவனால் அருளப்படுவனவே, ஆகையால் வல்வினைப்பட்டு ஆழாமற் காப்பானை அடைந்துகொள்ள என்று நாயன்மார் இயக்கக் குரல் எழுப்பிய பொழுது வேடரிலிருந்து குயவர் வரை யாவரும் காதலாகிக் கசிந்தனர். சமணப் பிடியிலிருந்து, அதாவது வணிக வர்க்கத்தினரின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து தப்பிச் செல்ல இதுவே உகந்த உபாயமாக இருந்தது. பக்தி இயக்கம் பொதுசன இயக்கமாகவும் புறச் சமயத்தவர்பால் வெம்மையும் வெறுப்பும் நிறைந்ததாகவும் இருந்ததன் உண்மையான காரணம் இதுவே. இவ்வாறு “யாம் எல்லோரும் அரனடியார்கள்; சேரவாரும் செகத்தீரே” என்று பொதுமை பேசிய அதே சைவ உணர்வானது சிறிது காலத்தின் பின்னர், அதாவது சோழர் காவப்பகுதியிலே நிறுவன வடிவம் பெறத் தொடங்கிய போது பலரை அடிமைகளாகவே வைத்திருந்தது. நுணுகிப் பார்க்கும் போது இது நூதனமாகத் தோற்றாது. ஏனெனில் இயக்க இயல்விதியின் பண்பு அது. முரண்பாடு என்பது இயக்க இயலின் ஒரு முக்கியமான எதிரெதிரான சக்திகளிடை நடக்கும் போர்தான் பரிணாமம் என்பது; ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறுகிறது மட்டுமல்ல; அது தனது எதிர் மறையாகவும் தன்னை மாற்றிக் கொள்கிறது.54 இதனையே எதிர்
மறைகளின் ஒற்றுமை என்று மார்க்ஸீய தருக்கவியல் கூறும். இது சம்பந்தமாகவே ஏங்கெல்ஸ் ஒரு சந்தர்ப்பத்தில் மேல்வருமாறு கூறினார். “இன்று எதை உண்மை என்று கருதுகிறோமோ அதில் அதன் பொய் அம்சமும் அடங்கியள்ளது. அந்தப் பொய் அம்சம் தன்னைப் பின்னால் வெளிப்படுத்திக் கொள்ளும்” சைவநெறி சோழர் காலத்திலே இப் பண்யினுக்கும் விதியினுக்கும் உட்பட்டுக் கொண்டிருந்தது.
பல்லவர் காலத்திலிருந்து கிடைத்த அருஞ் செல்வமாக பேணித் தத்துவத்தின் நூண்களில் ஒன்றாகச் சோழர் காலச் சித்தாந்திகள், இறைபணியினை அமைத்தனர். தமிழரின் பண்டைய அன்பு நெறியிலே முகிழ்த்த கனியே இக்கருத்து
என்று எளிதில் உணர்த்தி விடலாம். அன்பினைந்திணையிலேயே இவ்வுணர்வு ஆரம்பித்து விட்டது என்பர் தமிழறிஞர்.55
“நான் என்ற முனைப்பற்று, புனல் வழியோடும் மிதவைபோல, பால்வழி என்னும் இறைவன் வழியோடுவதே அன்பு என்பர் நக்கீரர். எல்லாவற்றையும் இயக்கும் ஆற்றலை எதிர்த்து நிற்காமல் முனைப்பற்றுத் திருவருள் வழி நிற்றலையே மெய்கண்டார் இறைபணி நிற்றல் என்பர். ‘உமது இராச்சியம் வருவதாக’ (Thy kingdom come) என்ற கிறித்துவ வேண்டுகோளும் இதுவே. ஆம்….திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் பற்றத்தான் பற்றினைப் பற்றிப் பற்றறுப்பதனையும் சித்தாந்தக் கருத்துக்களாகப் பாடிச் செல்கின்றன.”
“நக்கீரர் காலத்திவிருந்தே இக்கருத்து வளர்ந்து வந்துள்ளது என்று நினைவுறுத்துகிறார் பேராசிரியர் தெ.பொ.மீ. ஆயினும் சித்தாந்தத்திலே இது தத்துவத்தின் தூண்களில் ஓன்றாக அமைந்து விட்டது என்பதே நமது வாதமாகும். உள்ளது தான் வரும்: அது பெறும் வடிவமும் அழுத்தமுமே பிரதானமாகக் கவனிக்கப்படல் வேண்டும். சரி இனி இறைபணி பற்றிப் பார்ப்போம். சிவஞான போதத்திலே சிறப்பியல்பு- பயனியலில் ‘அவனே தானே என்று தொடங்குஞ் சூத்திரத்திலே இத்தொடர் காணப்படுகின்றது.55 அச் சூத்திரத்தினால் பெறப்படுவன இரண்டு “உண்மைகள் முதலாவது ஆன்மா அரனுடன் ஒன்றாகி நிற்கவேண்டும் என்பது; இரண்டாவது ஆன்மா தன் தொழிலெல்லாம் அரண்பணியென்று கொள்ள வேண்டும்.57 சிற்றுரைகாரர் கூறுவதைப் பார்ப்போம்,
“தன் செய்திக்கு முதல்வன் செய்தியை இன்றியமையாத ஆன்மாச் செய்வனவெல்லாம் அவனருளின் வழி நின்று செய்யுமாகலின் மாயேயமுங்கன்மமும் ஏகனாகிநிற்றற்குத் தடையாய்வந்து தாக்கா ஆகலான், அவை தாக்காமைப் பொருட்டுச் செய்யப்படு முபாய மாதல் பற்றி இனி இறை பணி வழுவாது நிற்கவென மேற்கொண்டது.”
பாசநீக்கத்திற்கு இறை பணியேவழி என்று கூறப்படுகிறது. இறை பணியே இன்பம் பயப்பது; அதுவே சிவப்பேற்றில் கொண்டு உய்விக்கும்; என்றெல்லாம் உணர்த்தப்படுகின்றன. ஆனால் இவையாவும் அடிமையின்- ஆன்மாவின்- பசுவின்- பண்புகளாகக் கூறப்படுவதை நாம் நினைவிருத்தல் வேண்டும். இருத்தவே இறைபணி, திருவருட் சார்பு முதவிய தொடர்கள் ஆண்டான்- அடிமை யதார்த்தத்திற்கு எத்துணை கருத்துவளம் அளிக்கின்றன என்பது புலனாகும். ‘கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே’ என்று மணிவாசகர் பாடும்போது திருவருட் சார்பின் இன்றியமையாமை உணர்த்தப்படுகின்ற தன்றோ. சுருங்கக் கூறின் சோழர் காலச் சமுதாயத்திலே பண்ணையடிமை என்ன நிலைமையிலிருந்தானோ, அந்நிலையின் இலட்சியமயமான சித்தி ரத்தைச் சாத்திரங்கள் ஆன்மாவுக்குரியனவாகக் கூறும் பண்புகளிற் காணலாம். மாபாடியகாரர் இதனை நன்கு விளக்கியுள்ளார்.59
“……….அம்முதல்வனது உடைமையாவே மல்லது சுதந்திரராவே மல்லேம்…….தம்பால் அடைக்கலமெனச் சார்ந்தாரைக் காப்பது உத்தமராயினார்க்குக் கடமையாகலான், முதல்வன் தன்னைச் சார்ந்தவரையே பாதுகாப்போனாகியும் இது பற்றிக் கோட்ட முடையனல்லனாய்த் தன்னைச்சார்ந்து
தன்னடிப் பணியின் நிற்கவல்ல அடியார் தானேயாய் நிற்குமாறு நிறுவி அவர்க்கு வரும் ஆகாமிய வினையைக் கொடுத்து, அது செய்யவல்லாத பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பானாகலான் அவ்விருதிறத்தோர்க்கும் உணவாகி நுணுகி வந்து பொருந்தும் பிரார்த்த வினையும் அவ்வாறே செய்வோர் செய்திக்குத் தக்க பயனாய் இருவேறு வகைப்படச் செய்வனென்க.”
சித்தாந்த சாத்திரம் கூறுவதென்ன? அடைக்கலம் என வந்தடைந்தோரைக் காத்தல் உத்தமர் குணம்; தன்னைச் சார்ந்தவரையும் தன்னைச்சாராதவரை ஒப்புநோக்கி உத்தமரான தலைவர், அவரவர் உய்ய வழிகாட்டுவார் என்பதே இங்கு வற்புறுத்தப்படுவது. அரசு நீதியின் சாயலை இவ்விடத்தில் நாம் எளிதிற்கண்டு கொள்ளலாமல்லவா? மெய் கண்டாரும் பின்வந்த உரைகாரரும் பயன்படுத்துஞ் சொற்களையும்., சொற்றொடர்களையும், பழமொழிகளையும் உற்று நோக்குபவருக்கு அவற்றின் மூலம் சமூதாயத்திலே காணப்பட்ட பெளதீகஅடிப்படையே என்பது புலனாகாமற் போகாது, “சுதந்திரன்”, “பரதந்திரன்” ஆகிய சொற்கள் சைவசித்தாந்த நூல்களில் பெருவழக்கமாக வருதல் காணலாம். உதாரணமாக “ஆன்மாப் பெத்தத்திற் பரதந்திரன், முத்தியிற்சுதந்திரன்” என்று வருதல் காண்க. சமூக உறவுகளின் அடிப்படையிலே - முரண்பாட்டின் அடியாகவே இத்தகைய கருத்துக்கள் தோன்றின என்பதை நாம் மீண்டும் நினைவு கூர்தல் தகும்.
இறுதியாக ஆன்மாவின் இயல்பு பற்றிச் சைவ சித்தாந்தம் கருத்துக்களை நோக்குவோம். ஆன்மாச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்புடையன் என்று கூறப்படும். சைவசித்தாந்தி பிறமதத்தினருடன் மாறுபடும் கொள்கைகளுள் முக்தி பற்றியது முக்கியமானது. இதற்குக் காரணம் ஆன்மாபற்றிய அடிப்படைக் கருத்து வேறுபாடே. ஆன்மாவின் இயல்பை விளக்குவதற்கு மெய்கண்ட தேவரும் பின்வந்த புடை நூலாசிரியரும், உரைகாரரும் பல உவமைகளைக் கையாண்டுள்ளனர். இவற்றுள் உமாபதி சிவாசாரியார் கூறியது சுவை பயப்பது.60 “இருள் ஔி அலாக் கண் தன்மையதாம்” என்பதே அது. ஆன்மாவனது, இருளோடு கூடிய வழி இருளாகாமலும் ஔியோடும், கூடிய வழி ஔியாகாமலும், இவ்விரண்டின் வேறாய் கண்ணின் தன்மையை ஒத்தது என்பதே குரவர் கூற்று. இதற்குத் தொடர்புடையதாய்ச் சைவ சித்தாந்தம் ஆன்மாவைப் பற்றிக் கூறுகையில், முத்திநிலையிற் கூட ஆன்மா தன் தனியியல்பை இழந்துவிடுவதில்லை என்று வாதாடும், பிறமதவாதிகளுடன் இது சித்தாந்தி வன்மையாக வாதிடுவது, தருக்க நிறைவும் கருத்துவளமும் காட்டும் முயற்சியாகும். ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும், தனித்துவத்தையும் ஒருங்கிணைத்து நிலைநாட்டும் வாதத்திற்குபின்னால் அன்றையப் பெளதீக அடிப்படையில் அமைந்த வாழ்நிலை இருந்தது என்று நாம் வாதாட முடியும்.
இதனை விளங்கிக் கொள்வதற்குச் சோழர்கால ஆட்சி முறையினையும் தனி மனிதனுக்கும் ஆட்சிப் பீடத்திற்கும் இருந்த உறவுமுறையையும் ஒரு சிறிது நாம் அலசிப் பார்த்தல் வேண்டும். பல நாடுகளை வென்று பேரரசு நிறுவியவர் சோழ மன்னர், அந்நாடுகள் யாவற்றையும் சோழ இராச்சியம் எனப் பொதுப்படக் கூறினராயினும், ஆட்சி வசதிக்காகவும், நிர்வாகத் திறமைக்காகவும் இராச்சியத்தைப் பல மண்டலங்களாகப் பிரித்தனர். முதலாம் இராசராசன் ஆட்சித்துறையில் பல பல புதுமைகளை, அதாவது காலத்திற் கேற்ற மாற்றங்களைப் புகுத்தியவன். அவனே இராச்சியத்தை மண்டலங்களாகப் பிரிக்கும் முறையினையும் தொடக்கி வைத்தான். சோழப் பேரரசு எட்டு அல்லது ஒன்பது மண்டலங்களாகக் கொண்டதாயிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகவும், ஒல்வொரு வளநாடும் பல நாடுகளாகவும்,
ஒவ்வொரு நாடும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் தனி ஊர்களாகவும், ஒவ்வொரு ஊரும் பல சிற்றூர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் தத்தம் அளவுக்கும் தகுதிக்கும் ஏற்ற ஆட்சி மன்றங்களைக் கொண்டியங்கி வந்தன. சோழர் ஆட்சியில் தலத்தாபனங்களின்- உள்ளூர் மன்றங்களின் செல்வாக்கும் கடமைகளும் மிக உன்னத நிலையிலிருந்தன என்பது வரலாற்றாசிரியர் யாவருக்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இதுபற்றிச் சாத்திரியார் கூறியுள்ளதை மேற்கோள் காட்டுகிறேன்.61
“அக்காலத்துப் பதிவுச் சான்றுகளைப் படிக்குந்தோறும் மத்திய ஆட்சியின் கட்டுப்பாடும், தல ஆட்சியின்சுதந்திரமும் எவ்வித முரணுமின்றிச் சமநிலையவாய்ச் சென்றதைக் கண்டு வியப்படைகின்றோம். அத்தகைய சூழ்நிலையிலே தனிமனி தனுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித விரோதவுணர்வும் தோன்றவில்லை. இருதரப்பிற்கும் கடமைகள் தெளிவாயிருந்தன.”
பெரிய ஆட்சிப் பிரிவிற்குள்ளும் சிற்றூர் தனது சுயப் பண்பினையும் தனித் தன்மையையும் ஓரளவிற்குப் பெற்றிருந்ததைப் போலவே சமூக அமைப்பிலும் தொழில் வேற்றுமையின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ மிகச் சிறிய சபைகளும், குழுக்களும், சமூகத்தின் அலகுகளாக (Units) இருந்தன. நீலகண்ட சாத்தியாரின் கருத்தினைக் கேட்போம்.62
‘ஒவ்வொரு மனிதனும் பிறப்பு, வாழிடம், தொழில்,
சுயவிருப்பு முதலியவற்றிலும் எதனொன்றன் காரணமாகவே
சமுதாயத்திலே ஒரு குழுவைச் சார்ந்தவனாயிருந்தான்.
கூட்டுறவு வாழ்க்கையிலீடுபட்டிருந்தன இக்குழுக்கள்.
(அதாவது தத்தம் பிரத்தியேக நலன்களைக் கவனித்துக்
கொள்வனவாயிருந்தன)
இக்குழுவிற்குள் தனிமனிதனது முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் போதிய வாய்ப்புகள் இல்லாமற் போகவில்லை.”
அரசியலமைப்பில் மிகச் சிறிய ஆட்சி மன்றத்திற்கும் “சுதந்திரம்” இருந்தது; தளித்துவமிருந்தது. சமூக அமைப்பிலேதனி மனிதனுக்கும் ஓரிடம் இருந்தது; உழைக்க இடமிருந்தது. இது சோழர் கால அரசியலும் சமூக அமைப்பும் வளர்த்துள்ள பண்பு. இதன் முக்கியத்துவத்தை எவ்வளவு வற்புறுத்திக் கூறினாலும் தகும். சித்தாந்தத்திலே ஆன்மாவிற்குக் கொடுத்த நித்தியமான- தனித்தன்மையான- நிலையை விளக்கவும், அதே சமயத்தில் இறைவன்- ஆண்டான்- இல்லையேல் அவை பயனற்றவை என்ற உண்மையை விளங்கிக் கொள்ளவும் மேற்கூறிய யதார்த்த நிலைமைகள் உதவும் என்று கூறலாம்.
சித்தாந்தத்திற் காணப்படும் சயமக் கருத்துக்களான “உண்மைகள்”, சோழர் கால இலெளகிக- உலகியல் இலக்கியங்களிலும் வேறு வடிவத்திற் காணப்படுகின்றன, சமயத்துறையில் ஆண்டானுக்கு உயர்ச்சி கூறியது சித்தாந்தம், அப்பணியையே சோழர் காலத்தெழுந்த பெரும்பாலான சிற்றிலக்கியங்களும் செய்தன. உதாரணமாகத் தண்டியாசிரியருடைய ‘காவ்யாதர்சம்’ சோழர் காலத்தின் தொடக்கத்திலே பெயர்க்கப்பட்டது. நாற்பொருளையும் பயக்கும் நீதி நெறிகளையுடையதாயும் சிறந்ந நாயகன் ஒருவனையுடையதாயும் மலை, கடல், நாடு, நகர், பருவம் என்பவைகளையும் இவை போன்ற பிறவற்றையும் கொண்ட காப்பியங்கள் போன்ற இது வழிவகுத்தது. தண்டியலங்காலத்திலே ‘தன்னிகரில்லாத் தலைவன்’ என்றே கூறப்படும் இவ்விலக்கணத்தை விளக்கும் சாகித்திய தர்ப்பணம் என்னும் நூல் ‘நாயகனாவான் அழகு, இளமை, புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, குலம் முதலிய குணங்களுடையவனாய் இருத்தல் வேண்டும் என்று கூறும்.63 இத்தகைய இலக்கணங்கள் பொருந்திய “ஒரு இதிகாசபுருஷனை அல்லது சிறந்த நாயகனைக் குறித்துள்ள சரிதத்தைப் பொருளாகக் கொண்டு, உலகினர்க்கு நன்மை புரியும் நோக்குடன் சுவைபட விரிவாகக் கூறிச் செல்லும் நூலே காப்பியமாகும்.”64
கோவை பிள்ளைத்தமிழ், உலா, பரணி முதலிய சிற்றிலக்கிய வடிவங்களும், சாசனச் செய்யுட்களும், பெருங்காப்பியங்களும், தேவராயினும், மானுடராயினும், “தலைவர்” புகழே பாடின. நிலமானிய முறையும் பேரரசும் வளருமிடங்களில் இது இயல்பான தோற்றமே. நரலோக வீரனும் கம்பர் மூவேந்த வேளானும், கருணாகரத் தொண்டைமானும், சடையப்பவள்ளலும், திரிபுவனச் சக்கரவர்த்தி களோடு சேர்ந்து நாட்டாட்சி செய்தவர் தாம். அந்த வர்க்கத்திற்குத் துதிபாடவே காப்பியங்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் உதவின. சீவகசிந்தாமணியானது அடியெடுத்துக் கொடுக்கப் பின்வந்தவர்கள் பெருந்தலைவரைப் பாடினர்; வணிகரைப் பாடினர்; அவதார புருடர்களைப் பாடினர். தெய்வங்களைப் பாடினர். காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களும், கதாநாயகரது பண்புகளும் அவற்றின் வர்க்கச்சார்பைத் தெளிவாக்குகின்றன.65 அதுமட்டுமன்று; மெல்ல மெல்லக் காவியங்கள் மக்களின் கருத்துலகையே முற்றுகையிடலாயின. பருப்பொருள்களையும் இயக்கவியலையும் விடுத்து, கருத்துக்களையும் இயக்க மறுப்பியலையும் இக்காப்பியங்கள் கைக்கொண்டன. இதனை வையாபுரிப் பிள்ளையவர்கள் “காவிய நிகழ்ச்சிகளின் நிலைக்களம் செய்கை உலகினின்று, கருத்துலகத்திற்கு மாறிவிடுகிறது” என்கிறார்.66 இதனையே சைவசித்தாந்த நூல்களும் செய்தன
என்னும் உண்மையை நாம் உணரும் போது அக்காலக் கருத்துக்களின் வர்க்கச் சார்பு புலனாகின்றது, “ஏர்எழுபது”, “திருக்கை விளக்கம்” முதலிய உழவரைச் சிறப்பிக்கும் நூல்கள் தோன்றிய காலம் அது என்பதன் முழுப் பொருளும் நமக்குத் தெளிவாகி விடுகின்றது.
இவ்வாறு தமிழ் நாட்டின் பெளதீக அடிப்படைகளினாற் சிறப்பாகவும், இந்தியா முழுவதிலும் ஏற்பட்ட சில மாற்றங்களினாலே பொதுவாகவும் பாதிக்கப்பட்டுப் பிற்காலச் சோழர் ஆட்சியிலே கனிந்த சைவ சித்தாந்தம், தமிழர் தம் தனிச் சிறப்பின் விளைபொருளாகவும் அமைந்துள்ளது என்பதுபற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடில்லை.67 அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் இது குறித்து எழுதுகையில் “சைவ சித்தாந்தம் தமிழ் மரத்தில் காய்த்துக் கனிந்த கனியென்றுரைத்தலே சாலும்” என்றார்.63 தொன்று தொட்டுத் தமிழர் தம் மரபில் வந்த உணர்ச்சிகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் முதலிய யாவற்றையும் ஒட்டியும் வெட்டியுமே சித்தாந்தம் உருப்பெற்றது. அதற்கு ஒரு தார்மீக பலம் இருந்தது; அது முக்கியமான வகையில் இன்னும் செயற்பட்டு வருகின்றது. அதுபற்றி ஐயமில்லை. ஆனால் எந்தத் “தத்துவத்தையும் குறிப்பாக அதன் சகல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு அவை சரித்திரத்தில் என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று நாம் பார்க்க விரும்பினால், தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரித்து வைக்காமல் பரிசீலனை செய்ய வேண்டும். தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரிக்காமல் பார்ப்பது என்று சொன்னால் தத்துவத்தைச் சமுதாய வாழ்விலிருந்து பிரிக்காமல் பரீசீலிக்க வேண்டும் என்று அர்த்தம். சமுதாயத்திலிருந்து
தொடங்கி, சமுதாயத்துக்குள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தையும் அதன் காரணப் பொருள்களையும் வடிவங்களையும் நாம் பரீசீலிக்க வேண்டும்.69
அதனையே இக்கட்டுரையிலே செய்ய முயன்றுள்ளோம். பிரமஞானமும், மாயாவாதமும், ஏகான்மவாதமும் பிறவும் காட்டும் இயக்க மறுப்பியலையும் கருத்து முதல் வாதத்தையும் சித்தாந்தம் காட்டும் பதிஞானத்தையும், முப்பொருளுண்மை வாதத்தையும், சத்காரிய வாதத்தையும் சீவன் மூத்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சித்தாந்தம் குறிப்பிடத்தக்க அளவு மெய்ம்மை வாதப் பண்பு பொருந்தியது என்பது உறுதியாகும். ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலே வாழ்ந்த திராவிடரிடையே நிலவிய புராதனப் பொருள் முதல் வாதமும், பிற்காலத்திலே உருவாதிய சாங்கியம், யோகம், தந்திரம் முதலாயினவும் சித்தாந்தத்தின் மெய்ம்மை வாதமும் பன்மை வாதமும் துலங்கப் பலவழிகளில் உதவியுள்ளன. எனினும் அது பற்றி இங்கு ஆராயப்புகுவது வேண்டற் பாலதொன்றன்று; அது மட்டுமன்றி அது நம்மைப் பூரணமான இயக்க மறுப்பு இயல்வாத ஆராய்ச்சியிற் கொண்டு சென்று நிறுத்தி விடும்.
பொய்ம்மையும் மெய்ம்மையும்
(பரணி பற்றிய ஒரு குறிப்பு)
புறப்பொருளைக் கூறவந்த பிரபந்த வகைகளில் ஓன்று பரணி. சங்க காலத்திற்குப் பின்னர் தோன்றிய பிரபந்த வகைகள் பலவற்றை நோக்கும்போது அவை வெவ்வேறு நிலைமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பப் பழைய கருக்களிலிருந்து உருப்பெறுவதைக் காணலாம். புலனெறி வழக்கத்தை அகம், புறம் எனப்பகுத்த பண்டைத் தமிழிலக்கிய அறிஞர்கள் புறப்பொருள் பற்றி விரித்துக் கூறியுள்ளனர். தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் பண்டைத் தமிழ் மக்களின் புறப்பொருள் வாழ்க்கையின் விளக்கமாக அமைந்தனவே.
கலை, இலக்கியம் முதலியவற்றின் தோற்றத்தை ஆராய்ந்தவர்கள், அவை புராதன மனிதனது வாழ்க்கையாகிய பெளதிக அடிப்படையிலிருந்து எழுந்தன என்று தெளிவாகக் காட்டியுள்ளனர். பாவனை செய்ததிலிருந்து (mimicry) கூத்துப் பிறந்தது என்பர்; வேலை செய்யும் உடலசைவுகளுக்கேற்பத் தாளமும் ஒத்திசையும் அமைந்ததென்பர், வேட்டுவ வாழ்க்கையிலே, நிகழ்ந்தவற்றை மீண்டும் செய்து பார்க்கும் போது நாடகம் பிறந்தது என்பர். இவை கலைகளின் பூர்விகத் தோற்றமாகும். அவ்வாறு செய்யும் பாவனை முயற்சிகள் மனித உள்ளத்திற்குச் சாந்தி கொடுத்தன. வேலை செய்யும் மனிதன் பாடிக் கொண்டு வேலை செய்யும் போது அலுப்புத் தெரியாமலிருந்தது. அதன் தாற்பரியத்தை நன்கு விளங்கிக் கொள்ள மாட்டாத ஆதிமனிதன் பாடுவது சக்தி வாய்ந்தது என்று நம்பினான்; அவன் உள்ளத்துணர்வாகத் தோன்றிய அந்தச் சக்தியையே மந்திரம் (magic) என்று கூறுகிறோம். இதன் காரணமாகவே புராதன மனித சமூதாயத்திலே சொல்லிற்கு மந்திர சக்தியிருப்பதாக நம்பினர். ‘மந்திரச் சொல்லின்பம்’ என்று எமது காலக் கவிஞன் பாரதியும் பாடினான். மனிதன் ஆதியிலே கூட்டாக வேலை செய்தான். பொருட்களை உற்பத்தி செய்யும் உபகரணங்களும் மிருகங்களை அழிக்கும் கருவிகளும் இயற்கையை ஆளும் பொறிகளும் திருத்தமுற உடற்பலத்தின் அவசியம் குறைந்து மனிதன் தனித்து வேலை செய்ய முடிந்த காலத்தும் பழைய கூட்டுவாழ்க்கை நினைவுகள், நிகழ்ச்சிகள் அவனை விட்டுப் பிரியவில்லை. அவை சடங்குகளாக மாறின. உதாரணமாக மனிதன் தனது மாடுகளின் உதவியுடனும் சூரியனது கருணையாலும் உழவுத் தொழில் செய்தான். சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக சூரியனுக்கும், மாட்டுக்கும் பொங்கல் முதலியன செய்தான். இன்று உழவர்களல்லாதவரும், மாடுகளையே விவசாயத்திற்குப் பயன்படுத்தாதவரும், இப்பொங்கல் களைக் கொண்டாடாமல் விடுவதில்லை. மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்திலே மோட்டார் வண்டிக்கும் சந்தனமும் குங்குமமும் இடுவர்.
இத்தகைய நம்பிக்கைபற்றி ஆங்கிலேயர் ஒருவர் தமிழகத்திலே தான் கண்டவற்றினடிப்படையிற் கூறுவன குறிப்பிடத்தக்கன.
“இதே கருத்துடன், நன்மைதரும் எதுவும் வணங்கப்படவேண்டியது என்ற மற்றொரு பொது விதியுஞ் சேர்ந்தது. ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஆயுத பூசைக்கு இதுவே அடிப்படைக் காரணமாயிற்று. இந்நாளில் ஒவ்வொரு தொழிலாளனும் தன் தன் தொழிற் கருவியை வணங்குகின்றான். பல்கலைக் கழக மாணவன் தன் கல்லூரிப் பாடப் புத்தகத்தை வைத்து வணங்குகின்றான்; கல்லூரி ஆசிரியர் தனது சொற்பொழிவுக் குறிப்புப் புத்தகத்தையும் தனது பேனாவையும் வணங்குகிறார்………...”
‘இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு’ என்னும் நூலிலே (தமிழ் மொழிபெயர்ப்பு, பக். 81) கில்பேட் சிலேட்டர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவையே சடங்குகள் எனப்படும் கொடும்பாவி கட்டி இழுக்கும் முறையெல்லாம் சடங்கே; மந்திரத்தில் உள்ள நம்பிக்கையின் விளைவே. கூட்டுவாழ்க்கை, மந்திரம், சடங்குகள் ஆகியன பண்டைக்கால மனிதனை வளர்த்தன; இயக்கின; முன்னேறச் செய்தன. மந்திரம், சடங்கு. முதலியன மனிதனது மனம் சம்பந்தமானவையேயாயினும், பெளதிக வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையன. மந்திரம், சடங்கு முதலியன மனிதனது நம்பிக்கையில் தோன்றியவை. அந்த நம்பிக்கை அவனது மனத்திலே பிரமையாக- பொய்ம்மையாக, மாயையாக உருவெடுக்கிறது. அந்த மாயை, புற உலகையோ, சடஉலகையோ எவ்விதத்திலும் பாதிப்பதன்று. ஆனரரல் மனித மனத்திற்கு நம்பிக்கையையும், திடத்தையும் அளிப்பதால் அவனது செயலைப் பாதிக்கிறது. அவனது செயல் புறஉலகைப் பாதிக்கிறது. பொய்ம்மைக்கும் மெய்ம்மைக்கும் உள்ள தொடர்பு இதுவே என்று பூர்வீக மனித இயல் ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனையே ஆங்கிலத்தில் Illusion and Reality என்பர். Illusion அல்லது பொய்ம்மையில் மனிதன் ஆழ்ந்துபோகையில் புறஉலகம் மறைந்து அகஉலகமே முக்கியமானதாகி விடுகிறது. அந்தத் தன்வயத்தனான நிலையிலேயே கலைகள் பிறந்து பக்குவம் அடைந்து பரிணமிக்கின்றன என்று கலாவிமர்சகர்கள் கூறுவர். இத்தகைய சடங்கு- நம்பிக்கை- நிலையிலேயே பரணி கருவாகிறது என்பதில் ஜயமில்லை. சடங்கும் மந்தர வித்தையும் கூட்டு வாழ்க்கையிலேயே சிறந்து விளங்கினமையின், பரணியின் சில பண்புகளும் தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் சுட்டு வாழ்க்கை .நடாத்திய காலத்தில் தோன்றின என்பது பெறப்படும்.
பரணி இலக்கியமானது போர்க்களத்தை நிலைக்களனாகக் கொண்டது. பரணி என்னும் இலக்கிய வடிவத்தின் உறுப்புக்களை இங்கு ஆராயவில்லை. ஆனால் பொதுப் பொருளாக நூல் முழுவதும் ஊடுருவி நிற்பது போர்க்களச் செய்திதான். அதனைச் சற்று ஆராய்வோம்.
தொல்காப்பியப் புறத்திணையியல் இருபத்தோராம் உரையிலே நச்சினார்க்கினியர் ஓரிடத்திற் பின்வருமாறு கூறுவர்.
“நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கட்வுட் பலிகொடுத்துப் பின்னர் பரிசிலர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல, அரசனும் நாற்படையையுங் கொன்று, களத்திற் குவித்து எருதுகளிறாக, வாள் மடலோச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றிஈகுவேண்மாள் இடந்துளத்தட்ட கூழ்ப்பலியைப் பலிகொடுத்து, எஞ்சி நின்ற யானை, குதிரைகளையும் ஆண்டுப் பெற்றனப் பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்.”
புறநானூற்றுப் பழைய உரைகாரர், மறக்களவழி; ஏர்க்கள உருவகமுமாம் எனக் கூறியுள்ளனர். ஏர்க்களத்திலே அல்லது நெற்களத்திலே பலியிடுதலிலிருந்து பிறந்ததே போர்க்களத்தில் பலியிடுதல் முதலியன செய்தலாம். களவழி, களவேள்வி என்பன இவ்வடியாகப் பிறந்தனவே. பெருந்தேவனார் தமது பாரதத்தில் களவேள்வியை வீராகம், வீரயாகம் என்று குறித்து அதன் அங்கங்களை விரித்துக் கூறியுள்ளார். ஏர்க்களத்திலும், போர்க்களத்திலும் பலியிடுதல் வெற்றியைக் கொண்டாடக் குரவையாடுதல் முதலியன செய்வதுபோல அகப்பொருள் சம்பந்தமாகவும் ஒரு சடங்கு காணப்படுகிறது இயற்கையிற் புணர்ந்த தலைமக்கள் பிரிய நேரிட்டபோது தலைவி மெலிந்து வருந்துகிறாள். இதனைக் காணும் தாய் தெய்வந் தீண்டிற்றோ என்றஞ்சி முருகக் கடவுளிற் கோயிலுக்கு ஏகி, அங்குள்ள பூசாரி மூலம் தனது மகளின் நோயின் காரணத்தை அறிய முற்படுகிறாள். பழங்காலத்திலே அப்பூசாரியை “வேலன்” என்பர். வேலைக் கையிலே வெறியாட்டமாடி அவன் உருக்கொண்டு வணங்குவான். கேள்விக்கு விடையைத் தெய்வம் உணர்த்தும் என்பான். இதுவும் கூட்டு வாழ்க்கையில் தோன்றிய ஒரு சடங்காகும். பெயர் வெறியாட்டு இது நிகழ்கின்ற பெயர் “வெறியர் களம்” என்பதாம். பலிவெறியாடல் முதலியன ஏர்க்களம், போர்க்களம் முதலியவற்றில் நிகழ்வதால் வெறியாட்டு நிகழும் இடத்தையும், “வெறியர் களம்” எனப் பண்டைய மக்கள் வழங்கினமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறுபண்டைக்காலத் தமிழ் மக்கள் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சில சடங்குகள், நிகழ்ச்சிகள் முதலியவற்றிலிருந்தே பரணியின் தோற்றுவாயை நாம் காண வேண்டும்.
புறத்திணை இயலிலே,
“கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
காதலன் ஒன்றிக் கண்ணிய வகையினும் .
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்
ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும்,”
என்று வாகைக்குரிய துறை பதினெட்டையும் ஆசிரியர் விரித்துக் கூறிச் செல்கிறார். இதற்கு உரையெழுதும்போது உரையாசிரியர் இளம்பூரணர் “அது களம்பாடுதலும் களவேள்வி பாடுதலுமாம்” [களவழி-களத்தில் நிகழுஞ் செயல்கள்] என்று குறிப்பிட்டுள்ளார். தேரையுடையவர்களைப் பொருதுவென்ற அரசன் தேர்முன் ஆடுங்குரவைக் கூத்தும், பொருந்திய மரபின் தேர்ப்பின் ஆடுங் குரவையும் பிறவும் கூறப்படுகின்றன.
இவற்றிக்கு உதாரண விளக்கமாக ஆங்காங்குச் செய்யுட்கள் அமைந்து கிடக்கின்றன. களவேள்வி: புறம் 26.
ஏரோர் சுளவழி: புறம்: 269.
போரோர் களவழி: களவழி: 36.
முன்தேர்க் குரவை: புறம்: 371
பின்தேர்க் குரவை: பு.வெ.வாகை: 8
குறிஞ்சிக்குப் புறனான வெட்சி, கரந்தை ஆகியன பற்றிக் கூறுகையில்,
“மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றலை நிலையும் அத்திணைப் புறனே.” [புறம்:3]
இதற்குப் பொருள் கூறும் நச்சினார்க்கினியர்,
போர்க்களத்து மறவரது மறத்திறனைக் கடைக்கூட்டிய துடிநிலையும், அத்தொழிற்குச் சிறந்த கொற்றணவக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும் குறிஞ்சிக்குப் புறமாகும்” என்று கூறுவார். பரணி இலக்கியத்திலே காளி வகிக்கும் முக்கியமான இடத்தைப் பார்க்கும்போது பண்டைத் தமிழ் மறவர்கள் வழிபட்ட கொற்றவையின் நினைவு எமக்கு வராமற் போக முடியாது. கொற்றவை என்னும் பழைய திராவிடத் தெய்வமே காளி, பராசக்தி, ஜெகதாம்பாள், பார்வதி என்றெல்லாம் .ஆரியக் கடவுள்களுடன் பிற்காலத்தில் கலந்து கொண்டாள்.
பண்டைப் போர்க்களங்களிலே பேய்மகளிர் ஆடுவதைப் புறம், பதிற்றுப் பத்து முதலாய இலக்கியங்களிலே காணலாம்.
வடுதார் தாங்கி யமர் மிகல் யாவது?
பொருதாண் டொழிந்த மைந்தர் புண்பொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறங்கிளர் உருவிற் பேஏய்ப் பெண்டிர்” (புறம்:62)
என்று புறப்பாடல் கூறுவது கானாலாம்
“களத்தின் கட்பட்ட வீரரது புண்தொட்டு
அவ்வுதிரந் தோய்ந்த செய்ய கையால், தமதுமயிரைக்
கோதி நிறமிக்க வடிவையுடைய பேய்மகளிர்
பறையினது தாளத்தேயாட”
என்று அப்பாடல் கூறுகின்றது.
மறக்களவேள்வி, கொற்றவை வழிபாடு, மன்னனது தேர்க் குரவை, பேய்மகளிரது செயல்கள் ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டே களம்பாடும் இலக்கியங்கள் தோன்றின என்று நாம் கொள்ளலாம். அது மக்கள் சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கையினின்றும் தோன்றியதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.
சங்கமருவிய காலத்தே தோன்றிய; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான களவழிநாற்பது ‘களம்பாடும்’ இலக்கி!ய வடிவத்தின் தோற்றத்தைக் குறித்து நிற்கின்றது. எனினும் களவழிநாற்பதைப் பொறுத்தவரையில் அது போரின் சிறப்பைப் போற்றுகின்றதா அல்லது போரின் கொடுமையை மறைமுகமாக விவரிக்கிறதா என்று நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. போர் ஒரு சமுதாயக் காட்சியாகவும் சமுதாயத்திலே பெரும் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் சம்பவமாகவும் செல்வம், அதிகாரம், தராதரம், புகழ், சிறப்பு ஆகிய சமுதாயத் தேவைகளையும் மதிப்புக்களையும் நிச்சயிக்கும் சாதனமாகவும் அமையும் காலத்திலேதான் போர் முழுக்க முழுக்கத் தன்னளவில் முக்கியத்துவம் பெறுகிறது. சுருங்கக் கூறின் போரின் பலாபலன்கன் வெளிப்படையாகச் சமூகத்தின் பெளதீக நிலைமையினை மாற்றும் சக்தி வாய்ந்ததக அமையுங் காலத்திலேதான் போர் பற்றியஅர்த்தமுள்ள இலக்கியங்களும் சிந்தனைகளும் தோன்ற முடியும். அத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே சோழர் காலத்துப் போர்களின் அடிப்படையிலே அழியாத சித்திரமாக அமைந்தது கலிங்கத்துப் பரணி. போர் என்னும் சோழர் காலப் பெளதீக அடிப்படையில் நின்று கொண்டு, பழைய நம்பிக்கைகள், சடங்குகள் முதலியனவற்றின் துணைக்கொண்டு, இருவேறு உலகத்தைப் படைத்து விடுகின்றார், பரணியாசிரியர். மெய்ம்மையுலகமாக மக்கள் உலகம் உள்ளது; பொய்ம்மையுலகமாக பேய்களின் உலகம் இருக்கிறது. பழைய நம்பிக்கையும் சடங்குமான, களவேள்வி, பரணியிலேகலை வடிவமாகவே அமைந்துவிடுகின்றது. எனவேதான் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் கூறுவது போல, “கற்பனையில் மலர்ந்த ஈடற்ற சிறு காப்பியமாக” அது மிளிர்கின்றது. தெய்வப் பரணி என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது.
Copyright © 2013 - All Rights Reserved - Department of Computer Science, Faculty of Science, University of Jaffna